'கவிக்கோ' அப்துல் ரகுமான் மறைந்தாலும், அவரது கவிகள் பாடிக் கொண்டேயிருக்கும்: முக ஸ்டாலின் இரங்கல்

இன்றைக்கு ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் “விதை போல் விழுந்திருக்கிறார்”.

இது தொடர்பாக முக ஸ்டாலின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: இன்று அதிகாலையில் ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் மரணமடைந்தார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினேன்.

அவரது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், இலக்கிய உலகத்திற்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் மீது பற்றும், கருணாநிதி மீது பாசமும், தமிழுடன் இணைபிரியாத வாழ்வும் நடத்திய கவஞரின் பிரிவு தமிழுலகத்தை தவிக்கவிட்டுள்ள இழப்பு, குறிப்பாக இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாது பேரிழப்பு.

“தமிழின் முதன்மையான கவிஞர்களில் ஒருவர்”, “கன்னித்தமிழுக்கு கிடைத்த வெகுமானம்” என்று கருணாநிதியால் பாராட்டப்பட்ட “கவிக்கோ” அப்துல் ரகுமனின் கவியுலகப்பணி தமிழினத்திற்கு பெருமை சேர்த்தது.

‘கவிக்கோ’ அப்துல் ரகுமானின் பவளவிழாவில் கலந்துகொண்ட தலைவர் கலைஞர் அவர்கள், “கவிக்கோ அப்துல் ரகுமான் ஒரு கருவூலம்” என்று பெருமிதம் கொண்டார். அந்தக் கருவூலம் இன்றைக்கு நம்மிடமிருந்து கைநழுவிப் போய்விட்டதை எண்ணிப் பார்த்தால் இதயம் கனக்கிறது.

“விழுந்தாலும் விதைபோல விழுவார்” என்று ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் ஒரு கவிதையில் பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி கூறியிருக்கிறார். இன்றைக்கு ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் “விதை போல் விழுந்திருக்கிறார்”. அவர் மறைந்தாலும், அவரது கவிகள் பாடிக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close