மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி திடீர் பாராட்டு: ‘உண்மை தலைவராக பேசியிருக்கிறீர்கள்’

மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி திடீர் பாராட்டு: உண்மை தலைவராகவும், தமிழ்நாட்டின் முக்கிய குடிமகனாகவும் பேசியிருக்கிறீர்கள்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டுக்கு பாராட்டு தெரிவித்து ராகுல் காந்தி பதில் ட்வீட் வெளியிட்டார். அதில், ‘உண்மை தலைவராக பேசியிருக்கிறீர்கள்’ என குறிப்பிட்டார்.

மு.க.ஸ்டாலின் தனது லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பியிருக்கிறார். நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

ராகுல் காந்தியின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், ‘தேர்வு செய்யப்பட்ட அமைப்புகளில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதை எங்கள் தலைவர் கலைஞர் எப்போதுமே வலியுறுத்தி வந்திருக்கிறார்.

இது தொடர்பாக ராகுல் காந்தியின் முயற்சிகளுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதுடன் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உறுதி செய்யும்படி பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டார் ஸ்டாலின். ராகுல் காந்தி, பிரதமருக்கு கோரிக்கை வைத்து வெளியிட்ட ட்வீட்டையும் தனது பக்கத்தில் ‘டேக்’ செய்திருந்தார் ஸ்டாலின்.

ஸ்டாலினின் இந்தப் பதிவுக்கு இன்று (ஜூலை 18) பிற்பகலில் ராகுல் காந்தி பதில் தெரிவித்தார். ராகுல் தனது ட்வீட்டில், ‘நன்றி, மு.க.ஸ்டாலின். உண்மை தலைவராகவும், தமிழ்நாட்டின் முக்கிய குடிமகனாகவும் பேசியிருக்கிறீர்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கு பிரதானமானவர்கள் பெண்கள்! எல்லாக் கட்சிகளும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு கொடுத்து நிறைவேற்ற வேண்டிய தருணம் இது’ என குறிப்பிட்டார் ராகுல்.

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் திமுக.வை தவிர்த்துவிட்டு டிடிவி தினகரன், கமல்ஹாசன், திருமாவளவன், இடதுசாரிகள். பா.ரஞ்சித் உள்ளிட்டோரை இணைத்து கூட்டணி அமைக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னையில் திமுக நடத்தும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு ராகுலை திருச்சி சிவா நேரில் சந்தித்து அழைத்தார்.

ராகுல் காந்தி அதற்கு பாசிட்டாவாக பதில் கூறவில்லை. ‘எனது தாயாரை வரச் சொல்கிறேன்’ என கூறியதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலேயே சோனியா கலந்து கொள்வது இல்லை. எனவே திமுக நிகழ்ச்சியை தவிர்க்க விரும்பியே, தனது தாயாரை அனுப்பி வைப்பதாக ராகுல் சொன்னதாக பேசப்பட்டது.

காங்கிரஸ்-திமுக இடையே இடைவெளி உருவாகி வருவதாக பேசப்பட்ட நிலையில் ராகுல் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக மு.க.ஸ்டாலின் பதிவிட்டதும், பதிலுக்கு ராகுல் பாராட்டு தெரிவித்ததும் அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close