காலில் விழும் அடிமைத்தனத்தை விட்டொழிப்போம்! - தொண்டர்களுக்கு திமுக வேண்டுகோள்

பேனர்கள் போன்ற ஆடம்பரங்களையும் காலில் விழுந்து கவனத்தைக் கவர்வது போன்ற அடிமைத்தனங்களையும் விட்டொழிப்போம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் காலில் விழுவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என, அக்கட்சி தலைமைக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று (ஆக.31) வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராகப் பொறுப்பேற்ற போதே, திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் தனது காலில் விழுந்து வாழ்த்துப் பெறுவதைத் தவிர்க்க வேண்டும் என அன்பான வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தன்மானம்-சுயமரியாதை-பகுத்தறிவு செறிந்திருக்கும் திராவிட இயக்கத்தின் அடிப்படை அடையாளமாக, நெஞ்சம் நிமிர்த்தி அன்பு ததும்ப வணக்கம் செலுத்துவதே தலைமைக்கு தரும் மரியாதை என்பதையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போதே குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அவர் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், வாழ்த்து தெரிவிக்க வருகின்ற பலரும், ஆர்வ மிகுதியால் அவர் காலில் விழ முயற்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என தலைமைக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்படுகிறது. திமுக தலைவருக்கு வணக்கம் செலுத்தி வாழ்த்து தெரிவிப்பதே, திமுக போற்றி வளர்த்து வரும் பண்பாட்டுக்கு பெருமை சேர்க்கும் செயலாகும்.

எனவே தலைவர் மு.க.ஸ்டாலினின் காலில் விழ எத்தனித்து, அவருக்கு மன சங்கடத்தை ஏற்படுத்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

மாலைகள், சால்வைகள் ஆகியவற்றுக்குப் பதில் புத்தகங்களைப் பரிசாக அளிக்கும் நற்செயலே சாலச் சிறந்ததாகும் என தலைவர் ஸ்டாலின் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார். அவரது பிறந்த நாள், பொதுக்கூட்ட நிகழ்வுகள் உட்பட அவர் கலந்துகொள்ளும் அனைத்து விழாக்களிலும் வழங்கப்படும் புத்தகங்கள், தமிழ்நாட்டில் உள்ள பல நூலகங்களுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டு பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல முறையில் பயன்பட்டு வருகின்றன.

தலைவரைத் தேர்ந்தெடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில் மாவட்டக் கழக அலுவலகங்களில் கட்டாயமாக நூல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நகர, ஒன்றிய, கிளை அலுவலகங்களிலும் நூலகங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அப்படி அமையும் கழக நூலகங்கள் அனைத்திற்கும் தொண்டர்களும் நிர்வாகிகளும் பொதுமக்களும் அளிக்கும் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே கழகத் தலைவரைக் காணவரும்போது பரிசளிக்க விரும்புவோர், ஆடம்பரம் மிகுந்த சால்வைகள்-மாலைகளைத் தவிர்த்து, அறிவு வளர்ச்சிக்குத் துணை நிற்கும் புத்தகங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கழக நிகழ்ச்சிகளிலும் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் அதிகளவிலான பேனர்கள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் தலைவர் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம், நேரம், நாள் இவற்றை அறிந்துகொள்ள முக்கியமான இடங்களில் மட்டும் வைத்திட ஏதுவாக, ஒருசில பதாகைகள் போதும் என்பதையும் ஆடம்பர பேனர்களுக்குப் பதில் திமுகவின் கொள்கை பட்டொளி வீசிப் பறக்கும் வகையில் இருவண்ணக் கொடியும் தோரணமும் விழாவைச் சிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதனை திமுக நிர்வாகிகள் அனைவரும் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என தலைமைக் கழகம் மீண்டும் வலியுறுத்துகிறது.

அண்ணா வகுத்தளித்த, கருணாநிதி காலமெல்லாம் காத்து வந்த கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு எனும் லட்சியத்தை உயர்த்தி பிடித்துக் கட்டிக்காப்போம். பேனர்கள் போன்ற ஆடம்பரங்களையும் காலில் விழுந்து கவனத்தைக் கவர்வது போன்ற அடிமைத்தனங்களையும் விட்டொழிப்போம். தலைவர் மு.க.ஸ்டாலினின் அன்பான வேண்டுகோளினை தவறாது நிறைவேற்றி அரசியலில் உயர்ந்த பண்பாடு செழித்தோங்க ஒத்துழைப்போம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close