Advertisment

இந்தியை திணிப்பதை ஏற்க முடியாது; தமிழகத்தில் இனி தி.மு.க ஆட்சி தான் – ஸ்டாலின் உறுதி

இந்தியா முழுமைக்கும் சமத்துவம், சமூக நீதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பரப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது – விருதுநகர் முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

author-image
WebDesk
New Update
CM MK Stalin visiting the memorial of Muthuramalinga Thevar on October 30

மு.க. ஸ்டாலின்

ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதை ஏற்க முடியாது என்றும், தமிழகத்தை இனி தி.மு.க தான் தொடர்ந்து ஆட்சி செய்யும் என்றும் தி.மு.க முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisment

தி.மு.க.,வின் முப்பெரும் விழா விருதுநகரில் இன்று நடைபெற்றது. விழாவில், சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருது, கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருது, கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது, புதுச்சேரி நிர்வாகி சி.பி.திருநாவுக்கரசுவுக்கு பாவேந்தர் விருது, குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருது வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்: அண்ணாவை கொண்டாடுவதில் மல்லுக்கட்டிய தி.மு.க – அ.தி.மு.க; மணப்பாறையில் பரபரப்பு

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், தி.மு.க ஆட்சி அமைந்தபோது, இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, இது ஒரு இனத்தின் ஆட்சி என்று சொன்னேன். இந்த ஆட்சிக்கு திராவிட மாடல் என பெயர் சூட்டினேன். இது பலருக்கும் வியப்பை அளித்தது. காமராஜர் ஆட்சி, அண்ணா ஆட்சி, கருணாநிதி ஆட்சி என்பதுபோல, ஸ்டாலின் ஆட்சி என்று சொல்லாமல் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லியதை பாராட்டிய பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் முரசொலியில் கட்டுரை தீட்டியிருந்தார்கள்.

திராவிட மாடல் என்று சொன்னபிறகு திராவிடம் என்ற சொல் இந்தியா முழுமைக்கும் அரசியல் கவனத்தை ஈர்த்தது. திராவிடம் என்பது ஒரு காலத்தில் இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இருந்தது. இன்று, ஒரு அரசியல் கொள்கையின் பெயராக இருக்கிறது. திராவிடம் என்றால் எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் பொருள்.

இன்னாருக்கு கல்வியைக் கொடு, இன்னாருக்குக் கொடுக்காதே, இன்னாரை கோயிலில் விடு, இன்னாரை கோயிலில் விடாதே, என்பது ஆரிய மாடல். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிரிப்பதுதான் ஆரிய மாடல். இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல். அனைத்து துறை வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என இந்த ஆட்சியின் எல்லையாக நான் அறிவித்துள்ளேன்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய 4041 கடிதங்களை 54 தொகுப்புகளாக வெளியிட்டு உள்ளோம். தமிழகத்தை அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாக மாற்றி வருகிறோம். தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அண்ணா. தமிழ்நாடு என்ற பெயரை கூறிய போது சட்டப்பேரவை உற்சாகத்தில் மிதந்தது.

தமிழகத்தை அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாக மாற்றி வருகிறோம். கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமதர்மத்தை, சமூக நீதியை இந்தியா முழுமைக்கும் நாம் நிலைநாட்ட வேண்டும். வலுமான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை. நாம் வலுவான அதிகாரம் நிறைந்த தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருந்தால் மட்டும் போதாது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அப்படி ஆக வேண்டும். அதுதான் திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசியல் கொள்கை.

வலுவான மாநிலங்களே கூட்டாட்சியின் அடிப்படை, தமிழ்நாடு மட்டும் தன்னிறைவு பெற்றால் போதாது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தன்னிறைவு ஆக வேண்டும். அது தான் திமுகவின் கொள்கை. இந்தியா முழுமைக்கும் சமத்துவம், சமூக நீதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பரப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நாம் வலிமையான வளமான மாநிலமாக இருப்பதால்தான் மக்களுக்கு இந்த அளவு நன்மைகள் செய்ய முடிகிறது. இந்த அதிகாரம் பறிக்கப்படுமானால், தடுக்கப்படுமானால், இந்த அளவு நன்மைகள் செய்ய முடியாது.

ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதையும் நாம் ஏற்க முடியாது. ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக நிதி உரிமை பறிக்கப்பட்டது. நீட், தேசிய கல்விக்கொள்கை மூலம் நமது உரிமை மறுக்கப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள் மக்கள் விரோத சட்டங்களாக உள்ளன. ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்துகிறார்கள்.

இவற்றைத் தடுக்க நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற தமிழ்நாட்டில் இருந்து புதுவையில் இருந்தும் நமது கூட்டணியின் சார்பில் 40 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இந்தியாவின் மூன்றாவது கட்சியாக நமது இயக்கம் அமர்ந்திருப்பது நமக்கு பெருமை. அது தொடர இப்போதே நீங்கள் களப்பணியாற்ற வேண்டும். வெற்றிக்கனியை பறித்து கழகத்திற்கும் உங்களுக்கும் புகழ் சேர்க்க வேண்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 வெற்றி கிடைப்பதற்கு இந்த விருதுநகர் முப்பெரும் விழா தொடக்கமாக அமையட்டும். இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment