தீர்ப்பு மாறியிருந்தால் என்னை தலைவர் அருகே புதைத்து இருப்பீர்கள்! - ஸ்டாலின் உருக்கம்

'நீ வரவேண்டாம்.... தலைவரின் மகன் நீங்கள்' என்று சொன்னார்கள்

செயற்குழுவில் ஸ்டாலின் பேச்சு: தீர்ப்பு மாறியிருந்தால் என்னையும் தலைவர் பக்கத்தில் புதைக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று திமுக செயற்குழுவில் ஸ்டாலின் உருக்கமாக பேசியுள்ளார்.

இன்று நடந்த திமுக செயற்குழுவில் ஸ்டாலின் தழுதழுத்த குரலில் பேசியதாவது, “இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என்ற உணர்வோடு இந்த அவசர செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அத்தனைபேரும் நமது அஞ்சலியை செலுத்திய பின்னர், தலைவருடன் நெருங்கிப் பழகியிருந்த இயக்க முன்னோடிகள் உரையாற்றினார்கள். பொதுச்செயலாளர் நிறைவுரை ஆற்றவேண்டும் என்று நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. ஆனால், பேராசிரியர் ‘நான் பேச இயலாது, அந்த சூழ்நிலையில் நான் இல்லை, தயவு செய்து யாரும் என்னைக் கட்டாயப்படுத்தக்கூடாது’ என்று என்னிடத்தில் தெரிவித்துவிட்டார். நீங்கள் அனைவரும் தலைவரை இழந்துள்ளீர்கள். ஆனால், நான் தந்தையையும் சேர்த்து இழந்துள்ளேன்.

தலைவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில், அவருடைய ஆசியுடன் செயல் தலைவர் எனும் பொறுப்பேற்று உங்களின் ஒத்துழைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். அது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த அடிப்படையில் மாவட்டந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன். அந்த ஆய்வு நிகழ்ச்சியில் ஒவ்வொரு கூட்டத்திலும் கட்சி நிர்வாகிகளோடு நான் கலந்துரையாடியபோது நான் அவர்களுக்குச் சொல்லி அனுப்பியது, ‘அனைவரும் ஒற்றுமையாக இருந்து, ஒன்றாகச் செயல்பட்டு வருகின்ற காலகட்டத்தில் திமுகவை வெற்றிபெறச்செய்து அந்த வெற்றியை அவர் காலத்திலேயே அவர் காலடியில் வைப்போம்’ என்று சொன்னேன். ஆனால் அதை நிறைவேற்றிட முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் நான் உள்ளேன்.

தலைவர் உடலை அவரது அண்ணன் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யவேண்டும் என்ற தலைவரின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தோம். இதையடுத்து, நண்பர்கள் மூலம் அரசுக்கு செய்தியை சொல்லி அனுப்புகிறோம். ஆனால், அங்கிருந்து வந்த செய்தி, தலைவரின் ஆசையை நிறைவேற்ற முடியாத செய்தியைத்தான் தெரிவித்தது. அப்போது நமது முன்னோடிகள் நேரடியாக முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைப்போம்… அரசு சாதகமான முடிவெடுக்கும் என்று கூறினார்கள். கழக முன்னோடிகள் என்னிடம், ‘நீ வரவேண்டாம்…. தலைவரின் மகன் நீங்கள்’ என்று சொன்னார்கள். இல்லையில்லை, தலைவரின் விருப்பம் தான் எனது எண்ணம். அதைத்தாண்டி மானம் மரியாதை எல்லாம் அப்புறம் என்றேன்.

பின்னர் முதல்வரைச் சந்தித்துப் பேசினோம். வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன், முதல்வரின் கையைப் பிடித்துக்கொண்டு நான் ‘தலைவரின் இறுதி ஆசை அது. எப்படியாவது நிறைவேற்றிக்கொடுங்கள்” என்று கூறினேன். எங்களை அங்கிருந்து விரட்டவேண்டும் என்ற எண்ணத்தில், ‘பார்க்கலாம்’ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். அந்த வார்த்தையை நம்பி அங்கிருந்து வந்தோம்.

அதன் பின்னர் 6.10க்கு தலைவர் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்தார் என்ற சோக செய்தி வருகிறது. கண்ணீருடன் உடனடியாக அனைவரும் கூடி கடிதம் எழுதுகிறோம். முறைப்படி கேட்கவேண்டும் என்று கடிதம் எழுதி அனுப்பினோம். ஆனால், ‘வாய்ப்பில்லை’ என்று அரசு கூறிவிட்டதாக, சென்றவர்கள் 10 நிமிடத்தில் திரும்பி வந்து சொன்னார்கள். ஆனால் அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் கோரிக்கையை நிராகரித்து காந்தி மண்டபத்தில் இடம் கொடுப்பதாகக் கூறுகின்ற அறிவிப்பு வெளியானது.

என்ன செய்யலாம் என்று யோசித்தபோது வழக்கறிஞர் வில்சன் ஆலோசனைப்படி, நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தோம். இறுதியில் தீர்ப்பும் சாதகமாக வந்தது. அந்தத் துக்கத்திலும் எங்களுக்கு சிறிது மகிழ்ச்சி அளித்த சம்பவம் அது. அதற்கு எல்லோரும் என்னைப் பாராட்டினீர்கள். ஆனால், இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக வழக்கறிஞர் அணி என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை மறுக்கப்பட்டிருந்தால் என்ன நிலைமை என்று. திமுக பல்வேறு சோதனைகளைச் சந்தித்த காலம் உண்டு. கட்சிக் கொடியை சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு நிலைமை வரக்கூடிய நிலையில் தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடந்தது. பின்னர், விசாரணை தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்தது. அன்று தலைவர் சொன்னார், ‘தீர்ப்பு நமக்கு ஒருவேளை சாதமாக வராமல் போயிருந்தால் அண்ணாவின் அருகில் என்னை நீங்கள் புதைத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் நீங்கள் எல்லாம் எனக்கு மலர்வளையம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்’ என்றார்.

அப்படித் தான் நானும் நினைத்துக் கொண்டேன். ஒருவேளை தீர்ப்பு மாறியிருந்தால் என்னையும் தலைவர் பக்கத்தில் புதைக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அப்படி ஒரு நிலை வரவில்லை. கருணாநிதியின் போராட்டம் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது, ஆக அவர் மறைந்தும் வெற்றிபெற்றார்.

தலைவர் கருணாநிதிக்கு நாமெல்லாம் நம்முடைய அஞ்சலியை செயற்குழு மூலம் தெரிவித்திருந்தாலும், உங்களுக்கு மட்டுமல்ல, திமுக உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் தலைவர் சார்பில் கேட்டுக்கொள்வது இந்த இயக்கத்தைக் காப்போம், தலைவர் கருணாநிதி வழி நின்று இயக்கத்தை காப்போம். அவர் உள்ளத்திலே கொண்டிருந்த அந்த உணர்வுகளைக் காப்பாற்ற உறுதியெடுப்போம்.” என்று ஸ்டாலின் பேசினார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close