இங்கு மக்கள் அவதியில்.. நீரோ குதூகலத்தில்.. எடப்பாடி மீது பாய்ந்த ஸ்டாலின்!

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை ரசிப்பதற்கு இது நேரம் இல்லை

கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்யாமல் சொந்த ஊரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை ரசிப்பதற்கான நேரம் இது இல்லை என எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்த போது தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை உருக்குலையச் செய்துள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தண்ணீருக்கும், உணவுக்கும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட தற்போது வரை முழுமையாக சென்றடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண்கள், அவர்களுக்கு உதவ முடியாத கையறு நிலையில் ஆண்கள் என டெல்டா மக்கள் பெரும் சிரமத்தில் இருந்து வருகின்றனர்.

ஆனால், இது குறித்தெல்லாம் தமிழக அரசு எந்த கவலையும் படுவதில்லை என்றும், டெல்டா மக்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் கடுமையாக கொந்தளித்து வருகின்றனர். முதலமைச்சர் பழனிசாமி இதுவரை அப்பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், “ஊரே பற்றி எறிந்தபோது ஃபிடல் பேசிக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல் நம் முதல்வர் செயல்படுகிறார்.

புயல் வீசிச் சென்று 72 மணி நேரங்கள் ஆகியும் இதுவரை முதல்வர் அப்பகுதிகளை சென்று பார்வையிடவில்லை. 50க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகியுள்ளனர். பலர் தங்களின் உடைமைகளை இழந்துள்ளனர். ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை ரசிப்பதற்கு இது நேரம் இல்லை” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close