Advertisment

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு? தலைவர்கள் கண்டனம்

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா உறுதியளித்திருப்பதாக செய்தி வெளியான நிலையில், இந்திய அரசின் முடிவுக்கு தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக எம்.பி வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
MK Stalin, vaiko, sri lanka, un, un human rights council, முக ஸ்டாலின், வைகோ, ஐ.நா மனித உரிமைகள் மன்றம், இலங்கை, sri lanka, india

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து 6 நாடுகளின் சார்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு எதிராக இந்தியா தனது ஆதரவை அளிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது என்று இலங்கை வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள், ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பது குறித்து எந்தவொரு முடிவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், ஜெயநாத் கொலம்பகே, இலங்கை இந்தியாவின் நிலைப்பாட்டை பாராட்டுகிறது என்றும் இந்தியா வல்லரசாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஐ.நா.மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து 6 நாடுகள் தீர்மானத்தைக் கொண்டுவருகின்றன. இந்த தீர்மானத்தின் மீது சர்வதேச நாடுகளின் வாக்கெடுப்பு மார்ச் 22ம் தேதி நடைபெறுகிறது.

இந்த சூழலில்தான், இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயநாத் கொலம்பகே, ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் 6 நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்தை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது என்று தெரிவித்துள்ளது தமிழக அரசியல்வாதிகள் மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா உறுதியளித்திருப்பதாக செய்தி வெளியான நிலையில், இந்திய அரசின் முடிவுக்கு தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக எம்.பி வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சார்பில், கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும்” என அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அளித்துள்ள பேட்டியும் - அந்தப் பேட்டியின் மீது இதுவரை எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதி காக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் மவுனமும், உலகத் தமிழர்கள் இடையேயும், தமிழகத்திலும், பேரதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்குச் சென்று வந்தார். பிரதமர் நரேந்திர மோடியும் - இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகளில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான தீர்மானம் பற்றி விவாதித்ததாக, பத்திரிகைச் செய்திகளில் எதுவும் வெளிவரவில்லை. ஈழத் தமிழர்களின் நலன் மீதான ஆழ்ந்த அக்கறையுடன் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதற்கான எந்தவித அறிகுறியும் வெளியே வரவில்லை.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் எல்லாம் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று மிகுந்த பதற்றத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளரை இந்தியாவின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்க மத்திய பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

மேலும், முக்கியமான இந்தப் பிரச்சினையில் மத்திய பா.ஜ.க. அரசு ஏனோ தானோ என்று அக்கறை காட்டாமல் இருப்பது, தமிழர்களை அலட்சியப்படுத்தும் அணுகுமுறையின்பாற்பட்டதாகும். இந்தியாவின் தொப்புள்கொடி உறவுகளாம் ஈழத் தமிழர்களை வஞ்சிப்பதை, உலகெங்கும் வாழும் 9 கோடி தமிழர்கள் எந்நாளும் மன்னிக்க மாட்டார்கள்.

ஐ.நா மனித உரிமை மன்றத்தில் ஏற்கனவே நடைபெற்ற வாக்கெடுப்புகளில் இந்தியா இலங்கைக்கு எதிராகவே வாக்களித்துள்ளது என்பதைக் கூட மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மறந்தது ஏன் என்ற கேள்வி இப்போது நியாயமாக எழுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஏற்கனவே பிரதமருக்குக் கழக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட கடிதத்தை அனுப்பி, “ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிட ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் வாக்களித்திடுக! மற்ற உறுப்பு நாடுகளின் ஆதரவினையும் திரட்டிடுக!” என்று கோரிக்கை விடுத்திருந்தேன். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்தினைக் கூட பிரதமர் நரேந்திர மோடி கேட்காமல், போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கத் திட்டமிடுவது, தமிழ் இனத்திற்கு முற்றிலும் எதிரானது; மிகுந்த கண்டனத்திற்குரியது. இலங்கையின் நிர்ப்பந்தத்திற்கு இந்தியா அடிபணிவது ஏன் என்ற ஆதங்கமும் ஆத்திரமும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் எரிமலையாய்க் குமுறுகிறது.

ஆகவே, ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா.மன்றத்தில் நாளை (22.3.2021) எடுத்துக் கொள்ளப்படுகின்ற தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது மட்டுமின்றி, இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிடும் வகையில், உறுப்பு நாடுகளின் ஆதரவினையும் திரட்டி, உரிய திருத்தங்களுடன் அந்தத் தீர்மானம் நிறைவேறிட பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர்களை அவமதித்து, அவர்களுக்கு அநீதி இழைத்து - இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எடுத்திட வேண்டாம் என்றும் தமிழ் நெஞ்சங்களின் நிரந்தரமான பழிச்சொல்லுக்கு ஆளாகிட வேண்டாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைப் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து மார்ச் 22 ஆம் தேதி தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இந்த தீரமானத்துக்குஇந்திய அரசு ஆதரவு தர வேண்டும் என மதிமுகவின் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பியுமான வைகோ வலியுறுத்தியுள்ளார் . இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இலங்கையில் இனப்படுகொலை நடத்தி, 2009 ஆம் ஆண்டில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகார ராஜபக்சே கூட்டத்தை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று உலகத் தமிழினம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.

ஐ.நா. மனித உரிமை மன்றம் 2015 இல் சிங்கள இனவாத அரசு நடத்திய படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு மனித உரிமைச் செயல்பாட்டார்களையும் இணைத்துக் கொண்டு இலங்கை அரசு புலனாய்வு நடத்த வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

குற்றவாளியிடமே நீதியை வழங்குமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேட்பது ஒருபோதும் நடைமுறைக்கு வராது என்றும், சிங்கள பேரினவாத அரசின் கொலைக் குற்றத்தை மூடி மறைக்கவும், நீர்த்துப் போகச் செய்யவுமே இது வழிவகுக்கும் என்று நாம் எதிர்த்தோம்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 2021, பிப்ரவரி மாதம் ஐ.நா. மனித உரிமை தலைமை ஆணையர் அதன் உறுப்பு நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், “இலங்கை அரசு அந்நாட்டு மக்களுக்கு பொது அரசாக செயல்படவில்லை. ஓர் இனச் சார்பாகச் செயல்படுகிறது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் தீர்மானத்தைச் செயல்படுத்தவே இல்லை. இனியும் செயல்படுத்தப்போவது இல்லை. இலங்கையில் நீதித்துறையின் தற்சார்பு சீரழிக்கப்பட்டுவிட்டது. பத்திரிகை, ஊடகங்களின் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. அங்கு மனித உரிமை அமைப்புகள் நடுநிலையுடன் செயல்பட முடியாது. எனேவ மனித குலத்துக்கு எதிரான இலங்கை அரசின் குற்றங்கள், படுகொலைகள், காணாமல் போனவர்கள் என்று கூறப்பட்டவர்கள் அனைவருக்குமான பொறுப்புக்கூறல் போன்றவற்றை இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

இலங்கை அரசின் மேற்படி குற்றங்களுக்காக அந்நாட்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும். இதற்கான முன்னெடுப்பை ஐ.நா. பொதுப் பேரவையும், பாதுகாப்புக் குழுவும் எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிச் செயல்பட உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்” என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் தலைமை ஆணையர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து மார்ச் 22 ஆம் தேதி, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஒரு தீர்மானம் விவாதத்திற்கு வரப்போகிறது. இத்தீர்மானத்தை பிரிட்டன், கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி, மாண்டினிக்ரோ உள்ளிட்ட ஆறு நாடுகள் முன் மொழிந்துள்ளன.

இத்தீர்மானம் முழுமையானதாகவோ, இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிப்பதற்கான வகையிலோ இல்லை. எனினும், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு, மனித உரிமை மீறலுக்கு எதிரான ஒரு முன்னெடுப்பு ஆகும்.இந்த அரைகுறைத் தீர்மானத்தைக்கூட இந்தியா ஆதரிக்கப் போவதில்லை என்ற செய்திகள் தமிழர்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றன.

47 உறுப்பு நாடுகள் இடம்பெற்றிருக்கும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ஈழத் தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த சிங்கள பேரினவாத இனக்கொலை அரசின் மீது கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்.ஆனால், இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜெயநாத் கெலம்பகே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்காது; இலங்கை அரசைத்தான் ஆதரிக்கப்போகிறது என்று கூறியதாக இந்து ஆங்கில நாளேடு (19.03.2021) செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள எட்டுக்கோடி தமிழர்களின் இதயக் குமுறலை அலட்சியப்படுத்திவிட்டு, தமிழினத்திற்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது. இதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.இந்திய அரசு, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் நாளை (22.3.2021) முன்வைக்கப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என்று தெரிவித்துள்ளார் .

Mk Stalin India Sri Lanka Vaiko United Nations
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment