டிடிவி அணி எம்எல்ஏ-க்கள் வாபஸ்: ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்

இதேபோன்ற சூழல் கர்நாடகத்தில் ஏற்பட்ட போது, பெருமான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார் என தனது கடிதத்தில் ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் முதல்வர் பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக-வில் சசிகலா, டிடிவி தினகரன் மாற்றும் அவர்களது குடும்பத்தினர் புறந்தள்ளப்பட்டு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. பரபரப்பான தமிழக அரசியல் சூழலில், தினகரன் தரப்பினர் தங்களின் இறுதிகட்ட யுத்தத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக, டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை” என கடிதம் அளித்துள்ளனர்.

ஆனால், “எடப்பாடி பழனிசாமி மீது மட்டுமே தங்களுக்கு நம்பிக்கை இல்லை” என கூறும் அவர்களது கடிதத்தில் “அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என எந்த இடத்திலும் கூறப்படவில்லை”. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையை கூட்ட உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

எம்எல்ஏ-க்கள் 22 பேர் தங்களது ஆதரவை திரும்பப் பெற்றதால் நம்பிக்கை தேவை. முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால், அரசியல் சாசன சட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பேரவையை கூட்ட தாமதிப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் எனவும் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற சூழல் கர்நாடகத்தில் ஏற்பட்ட போது, பெருமான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார் என தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ள ஸ்டாலின், எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் அடிப்படையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தியுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close