எம்.கே.சூரப்பா நியமனம் : கல்வியை காவி மயமாக்குவதாக மு.க.ஸ்டாலின், வைகோ கண்டனம்

எம்.கே.சூரப்பா, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

எம்.கே.சூரப்பா, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

எம்.கே.சூரப்பா, கர்நாடகாவை சேர்ந்த கல்வியாளர்! அவரை சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்து தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். ஏற்கனவே தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஆந்திராவை சேர்ந்த சூரியநாராயண சாஸ்திரியையும், தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்திற்கு கேரளாவை சேர்ந்த பிரமிளா தேவியையும் நியமனம் செய்த நிலையில், எம்.கே.சூரப்பா 3-வது வெளிமாநில துணைவேந்தர் ஆவார்.

எம்.கே.சூரப்பா நியமனம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் , குறிப்பாக காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில், தமிழகமே போர்க்கோலம் பூண்டிருக்கும் தருணத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா என்பவரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்திருக்கும் தமிழக ஆளுநரின் செயல் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. தேடுதல் குழுவின் கால அவகாசத்தை இன்று நீட்டித்த கையோடு அவசரம் அவசரமாகச் செய்யப்பட்டுள்ள இந்த நியமனத்தை, கர்நாடக மாநிலத் தேர்தலுடன் இணைத்துப் பார்ப்பதற்கான வாய்ப்பை ஒதுக்கிவிட முடியாது.

மண்ணின் மைந்தர்களாக இருக்கும் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை “காவி” மயமாக்க வேண்டாம் என்று ஆளுநரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

சூரப்பா நியமனம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது : அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் ராஜாராம் 2016 மே 26 ஆம் தேதி ஓய்வு பெற்றார். தமிழகத்தின் முக்கியத்துவம் பெற்ற இத்தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திற்கு கடந்த 23 மாதங்களாக துணைவேந்தராக எவரும் நியமிக்கப்படாமல் காலியாக இருந்தது.

இதனால் அண்ணா பல்கலைக் கழகப் பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக பொறியியல் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு, மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். முக்கிய முடிவுகளை மேற்கொள்ள முடியாமல் நிர்வாகப் பணிகள் முடங்கின. ஆளும் கட்சியினர் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அலட்சிப் போக்குடனேயே இருந்தனர்.

துணைவேந்தர் பணி நியமனங்களில் புரையோடிப்போன ஊழல், நாடறிந்த ரகசியம் ஆகும். அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்ய மூன்றுமுறை தேர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு, மிகுந்த காலதாமதமாக தற்போது துணைவேந்தர் பொறுப்புக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் எம்.கே.சூரப்பாவை தமிழக ஆளுநர் நியமித்துள்ளார். தமிழகத்தில் தகுதியும், திறமையும், அனுபவமும் வாய்ந்த பேராசிரியர் பெருமக்கள் பலர் விண்ணப்பித்ததை அலட்சியப்படுத்திவிட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா அவர்களை அமர்த்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

துணைவேந்தர் பதவிக்கு தகுதிமிக்க கல்வியாளர்களே தமிழகத்தில் இல்லை என்று ஆளுநர் புரோகித் கருதுகிறாரா? டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் பேராசிரியர் சூர்ய நாராயண சாஸ்திரியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேர்வு செய்ததற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அந்த நியமனத்தை ரத்து செய்துவிட்டு, தேர்வுக்குழு பரிந்துரைத்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் வலியுறுத்தினர். ஆனால் ஆளுநர் தன் விருப்பத்திற்கு ஏற்ப ஆந்திராவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் சூர்ய நாராயண சாஸ்திரியை நியமனம் செய்தார்.

தற்போது அண்ணா பல்கலைக் கழகத்திற்குத் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை நியமித்து இருக்கிறார். இவற்றை நோக்கும் போது ஆளுநரின் அதிகார ஆதிக்கம் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராகவே இருக்கிறது என்பதை உணர முடிகிறது. அரசியல் சட்ட மரபுகளைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில், மாநில அரசின் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, மோடி அரசின் முகவராக தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் தொடர்ந்து ஆளுநர் செயல்படுவது விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகத்திற்குத் துரோகம் இழைத்து வரும் மோடி அரசின் பச்சைத் துரோகத்திற்கு எதிராக தமிழகமே கொந்தளித்துப் போராட்டக் களத்தில் ஈடுபட்டு இருக்கிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமித்து இருப்பதைத் திரும்பப் பெறவேண்டும் என்றும், தமிழகத்தில் செயல்படும் பல்கலைக் கழகங்களுக்கு தமிழக கல்வியாளர்களையே துணைவேந்தர் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியிருக்கிறார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close