அடுத்தடுத்து பதவிகளை நிராகரிக்கும் எம்.எல்.ஏ.க்கள்: அதிர்ச்சியில் தினகரன்!

தினகரனின் செயல் கேலிக்கூத்தானது. கட்சிக்குள் கலகம் ஏற்படுத்த தினகரன் முயற்சி செய்கிறார்.

அதிமுக சின்னம் மற்றும் கட்சியை மீட்க லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட புகாரில் டிடிவி தினகரன் சிறை சென்ற பிறகு, கட்சியும், ஆட்சியும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எடப்பாடி ஆதரவாளர்கள் தனியாக செயல்பட்டனர். பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, டிடிவி தினகரனை புறக்கணித்தனர்.

சிறைக்கு செல்லும் முன்னர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்த தினகரன், சிறையில் இருந்து வெளியே வந்ததும் கட்சி நடவடிக்கைகளில் இறங்கினார். தனது ஆதரவாளர்களைத் தொடர்ந்து சந்தித்து வந்த அவர், இரு அணிகளையும் இணைக்கும் பொருட்டு சுமார் 60 நாட்கள் காலக்கெடு அளித்தார். அவர் அளித்த காலக்கெடு முடிந்த நிலையில், நிருபர்களைச் சந்தித்த டிடிவி.தினகரன், வருகிற 14-ம் தேதி முதல் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆகஸ்ட் 14-ம் தேதி மதுரை மாவட்டம் மேலுாரில் தனது சுற்றுப் பயணத்தை தினகரன் தொடங்க உள்ளார்.

அதோடுமட்டுமில்லாமல், கட்சியில் புதிதாக 64 நிர்வாகிகளை நியமித்து, அதிமுகவின் மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். கட்சியை மேலும் சிறப்பாக வழிநடத்த கூடுதலாக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தினகரன் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் உதயகுமார், “தினகரனின் செயல் கேலிக்கூத்தானது. கட்சிக்குள் கலகம் ஏற்படுத்த தினகரன் முயற்சி செய்கிறார். ஜெயலலிதாவின் நியமனத்திற்கு எதிராக டிடிவி தினகரன் செயல்படுகிறார், எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தினகரனின் நியமனம், நிர்வாகக் குழப்பத்திற்கே வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, அதிமுக கட்சித் தலைமைக்கு எதிராக ஓ.பி.எஸ். போர்க்கொடி தூக்கிய போது, அவரை கடுமையாக விமர்சித்தவர் அமைச்சர் உதயகுமார். அத்துடன், சசிகலாவுக்கு பகிரங்கமாக தனது ஆதரவைத் தெரிவித்தார். தற்போது, முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், தினகரனுக்கு எதிராகவும் கருத்துகளை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து உதயகுமாரின் இந்த கருத்திற்கு பதில் தெரிவித்துள்ள வெற்றிவேல் எம்.எல்.ஏ, “எம்.எல்.ஏ-க்களிடம் கருத்து கேட்டறிந்த பின்புதான் பொறுப்புகள் வழங்கப்பட்டன. கருத்து கேட்டதற்கு ஆதாரம் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளை அ.தி.மு.க பலமுறை சந்தித்து இருக்கிறது. இந்த ஆட்சியே பொதுச் செயலாளர் உருவாக்கியதுதான். ஏதோ ஓர் அழுத்தம் காரணமாக கட்சிப் பதவியை சிலர் ஏற்க மறுத்து வருகின்றனர். சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் உதயகுமார் ஒரு பச்சோந்தி” என்று ஆவேசத்துடன் கூறினார்.

முன்னதாக, பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி ஆகியோர் தினகரன் அளித்த பதவியை நிராகரித்திருந்தனர். அதேபோல், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ஏ.கே.போஸும் தற்போது தினகரன் அளித்த பதவியை நிராகரித்துள்ளார். அதற்கு காரணம் கூறிய போஸ், “எனக்கு உடல்நிலை மோசமான நிலையில்தான் உள்ளது. தினகரனுக்கு ஆதரவாகவும் எடப்பாடி முதல்வராகத் தொடர வேண்டும் என்பதே என் எண்ணம்” என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close