சென்னையில் மாடல் நடிகை திடீர் மாயம்! கண்டுபிடித்துத் தர உறவினர்கள் கோரிக்கை

காணம் நாயர் காணமல் போனதன் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது என்பதை கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த மாடல் நடிகையான காணம் நாயர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற போது மாயமானார். காணம் நாயரை கண்டுபிடித்து தர வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை விரும்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து காணம் நாயர் வேலைக்கு செல்வதற்காக இருச்சக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் அன்று நீண்ட நேரமாகியும் அலுவலகத்தை சென்றடையவில்லை. மேலும், காணம் நாயரின் மொபைல் போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் காணம் நாயரை காணவில்லை என்று கே கே நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். எனினும் காணம் நாயர் எங்கிருக்கிறார் என்பது குறித்த ஒரு தகவலும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில், காணமல் போன காணம் நாயரை கண்டுபிடிக்க உதவுமாறு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணம் நாயரின் பெற்றோர் டெல்லியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், காணம் நாயர் காணமல் போனதன் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது என்பதை கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்திற்குள்ளேயே ஏதாவது பிரச்சனையா என்பது கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

காணம் நாயர் குறித்து ஏதேனும் தகவல் கிடைக்குமா என்பதற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவரது பேஸ்புக் பக்கத்தை போலீஸார் கண்காணித்து வருகின்றனர். மேலும், காணாமல் போன அன்று காணம் நாயர் வழக்கமாக அலுவலகம் செல்லும் வழியாக செல்லவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக காணம் நாயரின் உறவினர் ஒருவர் கூறும்போது: காணம் நாயர் நுங்கம்பாக்கத்தில் சலூன் ஒன்றில் மார்கெடிங் மேனஜராக வேலை செய்து வருகிறார். 10 வயதில் இருந்தே காணம் எங்களுடன் தான் இருந்து வருகிறார். எங்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏதும் இல்லை. தினமும் காலையில் 11 மணியளவில் காணம் நாயர் வேலைக்கு செல்வார் என்று கூறினார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாடல் ஏஜென்சியில் காணம் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவர் பல குறும் படங்கள் மற்றும் விளம்பரங்களை இயக்கியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

×Close
×Close