ரஜினியை சந்தித்த பின் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகும் #MohammadYaasin

MohammadYaasin எனும் ஹேஷ் டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாட்சா – அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசின் தான் இன்று ட்விட்டரில் டாப் டிரெண்டிங்கில் இருப்பவர்.

அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் யாசின், பள்ளியின் அருகே கீழே கிடந்த பையில் ரூ.50,000 ரூபாய் பணம் இருந்ததால், அதனை உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு கொண்டுச் சென்றார். யாசினின் நேர்மையை கண்டு வியந்த ஆசிரியர்கள், அவரை நேரடியாக ஈரோடு எஸ்.பி.யிடமே அழைத்துச் சென்று அந்தப் பணத்தை ஒப்படைத்தார்கள்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதில் இருந்து மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட யாசினை, ஈரோடு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் நேரடியாக சந்தித்து, ‘உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய நாங்கள் தயார்’ என்று கூற, சற்றும் தாமதிக்காமல் பதில் அளித்த யாசின், ‘எனக்கு உதவிலாம் வேண்டாம். எனக்கு ரஜினி அங்கிளை பிடிக்கும். அவரை ஒருமுறை நேரில் பார்த்தால் போதும்’ என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்த, ஈரோட்டில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர் யாசின் குடும்பத்தினர்.

இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில், யாசின் குடும்பத்தை அழைத்து சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். யாசினை வெகுவாக பாராட்டிய ரஜினி, தங்க செயின் ஒன்றை சிறுவனுக்கு அணிவித்தார். இதன் பிறகு, யாசின் குடும்பத்துடன் அமர்ந்து உரையாடிய ரஜினி, செய்தியாளர்களிடம் பேசுகையில், “யாசினை இனி எனது மகன் போல் பாவித்து, அவன் படிப்புக்கு வேண்டிய அனைத்தையும் நான் செலவு செய்வேன்” என்று உறுதியளித்தார்.

ரஜினியுடனான சந்திப்பிற்கு பிறகு, MohammadYaasin எனும் ஹேஷ் டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில், வரும் 19ம் தேதி ஈரோடு காவல்துறையினர் சார்பாக யாசினுக்கு பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்மை எனும் ஒற்றை குணத்தால், ஈரோட்டின் கனிராவுத்தர்குளம் பகுதியில் வாழ்ந்து வந்த யாசின், இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பிரபலம் ஆகி உள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close