முல்லைப் பெரியாறு: தமிழக உரிமையை கேள்விக்கு உள்ளாக்கும் கேரளா!

முல்லைப் பெரியாறு அணைக்கு செல்லும் முழு உரிமை தமிழகத்திற்கு இல்லை என அதிரடியாக உச்சநீதிமன்றத்தில் கேரளா பதில்மனு தாக்கல் செய்திருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைக்கு செல்லும் முழு உரிமை தமிழகத்திற்கு இல்லை என அதிரடியாக உச்சநீதிமன்றத்தில் கேரளா பதில்மனு தாக்கல் செய்திருக்கிறது. 

மேற்கு தொடர்ச்சி மலையில், கேரளாவின் இடுக்கி மாவட்ட எல்லைக்குள் முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கிறது. 1986-ம் ஆண்டு அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையிலான ஒப்பந்தப்படி தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அந்த அணையில் இருந்து தண்ணீர் விடவேண்டும்.

தமிழகத்தின் இடையறாத சட்டப் போராட்டங்களின் விளைவாக, அந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும் சில பராமரிப்பு பணிகளை முடித்தால், அணையின் முழு அளவான 152 அடிக்கும் தண்ணீரை தேக்கலாம் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு! ஆனால் இதற்கான கட்டுமானப் பொருட்களை அங்கு கொண்டு செல்லவே வன விதிகளை சுட்டிக்காட்டி கேரளா அனுமதிப்பதில்லை. இந்த இடையூறுகளை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு தமிழகம் எடுத்துச் சென்றது. இதற்கு பதில் அளிக்கும்படி கேரளாவை உச்சநீதிமன்றம் பணித்தது.

அதன்படி கேரள நீர்பாசனத்துறை செயலாளர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், ‘1886-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பிரிவு 7-ன் படி வல்லக்கடவு – முல்லைப் பெரியாறு வனச் சாலை வழியாக தமிழக அதிகாரிகள் பயணிக்க வழிவகை இல்லை’ என கூறியிருக்கிறது கேரளா. மேலும், ‘சுதந்திரமாக முல்லைப் பெரியாறு அணைக்கு பயணிக்கும் முழு உரிமை தமிழகத்திற்கு இல்லை’ என்றும் அழுத்தமாக தனது மனுவில் கேரளா பதிவு செய்திருக்கிறது.

‘1886 ஒப்பந்தப்படி அணை அமைந்திருக்கும் குத்தகைக்கு உட்பட்ட நிலங்கள், கட்டுமானங்கள் அனைத்தும் கேரளாவின் இறையாண்மை உரிமைக்கு உட்பட்டவை. அங்கு வருகிறவர்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் கேரளாவுக்கு இருக்கிறது. அணையின் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு அங்கு வருகிறவர்களின் அடையாள அட்டையை கேட்டு உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.

இந்தப் பகுதியின் விலங்குகள் சரணாலயங்கள், வன ஆக்கிரமிப்புகள், வன ஊடுருவல் ஆகியவற்றை கண்காணிக்கும் அதிகாரத்தை கேரளாவுக்கு 1972-ம் ஆண்டின் மத்திய அரசு வன உயிரின சட்டம் வழங்குகிறது.’ என தனது மனுவில் விரிவாக கூறியிருக்கிறது கேரளா.விரைவில் இதற்கு பதில் தெரிவித்து தமிழகமும் விரிவான மனுவை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close