Advertisment

இன்று இடுக்கி; நாளை நீலகிரியாகவும் இருக்கலாம்: எச்சரிக்கும் காலநிலை மாற்றம்

1987ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான 20 வருடங்களில் நீலகிரியில் மட்டும் 1040 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Munnar Pettimudi landslide 2020 : Climate change and weather pattern warn Nilgiris

Munnar Pettimudi landslide 2020: Climate change and weather pattern warn Nilgiris :  ”லயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? நாங்கள் வாழும் வீடுகளை ஏன் லயம் வீடுகள் என்று அழைக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? என்று நம்மிடம் கேட்கிறார் எம்.எஸ்.செல்வராஜ். சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கு திரும்பிய லட்சக் கணக்கான தமிழர்களில் இவரும் ஒருவர். மலையக தமிழர்களுக்காகவும், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நலனுக்காகவும், பழங்குடிகளின் நலனுக்காகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் இவர் தற்போது கூடலூரில் வசித்து வருகிறார்.

Advertisment

publive-image கொலப்பள்ளி அருகே அமைந்திருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு (Photo : Special Arrangement)

விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக அங்கம் வகிக்கும் இவர் “ மெட்ராஸ் பஞ்சத்திற்கு பிறகு தென்னிந்தியாவில் பெரும்பான்மையான விவசாயக் கூலிகள் ஒரு நேர உணவிற்கும் வழியின்றி, பசி துரத்த, ஒரு வேளை உணவு கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். உலகின் பெரும்பாலன பகுதிகளில் ஆங்கிலேயர்களின் காலனிய ஆதிக்கம் கோலூச்சிய காலம் அது என்பதால், பல்வேறு நாடுகளில் இருக்கும் நிலங்களில் பணப்பயிர்களை வளர்க்க குறைந்த ஊதியத்தில் மக்கள் தேவைப்பட்டனர். இந்த பஞ்சத்தை காரணமாக கொண்டு லட்ச கணக்கான தமிழர்களை உலகின் பல்வேறு பக்கங்களுக்கு கொத்தடிமைகளாக கொண்டு சென்றது ஆங்கிலேய அரசு. அதன் ஒரு பகுதி மக்கள், இந்நாளில் மலையகம் என்று அழைக்கப்படும், மத்திய இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இங்கிருந்து முதலில் எங்கள் முன்னோர்கள் ராமேஸ்வரத்தில் இருந்த மண்டபம் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து கப்பலில் தலைமன்னார் சென்றார்கள். அங்கிருந்து நடந்தே எங்களின் மூதாதையர்கள் கண்டியை அடைந்தனர். 200 பேர் நடந்து சென்றால் அதில் 20 பேர் தான் உயிருடன் மலையை அடைவார்கள். பசி, வனம், காலநிலை, வனவிலங்குகள் இவற்றையெல்லாம் சமாளித்து அங்கு சென்ற எங்களுக்கு தங்க இடம் இல்லை. ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட குதிரை லயங்கள் தான் எஞ்சியிருந்தன. அதில் தடுப்புகள் போடப்பட்டு வீடுகளாக பயன்படுத்தினோம். இன்றும் லயவீடுகளில் எதுவும் மாறவில்லை. 150 ஆண்டுகள், காலம் காலமாக உறிஞ்சப்பட்ட எங்களின் உழைப்பு போக உடலில் சோர்வும், மனதில் வலியும், வயிற்றில் பசியுமே மிஞ்சியிருக்கிறது. அன்று முழு கொத்தடிமை வாழ்க்கை இன்று அரை கொத்தடிமைகள் நாங்கள்” என்று கூறினார்.

Munnar Pettimudi landslide 2020 : Climate change and weather pattern warn Nilgiris தேயிலை தோட்ட தொழிலாளர்கள் (Express Photo by Nithya Pandian)

”கடந்த மாதம் மூணாறின் பெட்டிமுடியில் ஏற்பட்ட மண்சரிவு விபத்தில் சிக்கி நான்கு லயங்களில் வசித்து வந்த 65 பேர் மண்ணில் மூழ்கி மாண்டனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதம் உள்ள 5வரின் நிலை என்ன என்பதே தெரியாத நிலையில் தேடும் பணி ஒரு வாரத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்கிறார்” கோமதி அகஸ்டின். 2015ம் ஆண்டில், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு, நில உரிமை, மற்றும் எஸ்டேட் வீடுகளின் பாதுகாப்பு தன்மைக்கு உறுதி அளித்தல் தொடர்பாக பெம்பிள்ளை ஒருமை (Pembillai Orumai) என்ற அமைப்பை உருவாக்கி போராட்டம் நடத்தியவர் கோமதி.

Munnar Pettimudi landslide 2020 : Climate change and weather pattern warn Nilgiris இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருக்கும் கோமதி அகஸ்டின்

”மூணாரில் இருக்கும் 142 தேயிலை எஸ்டேட்களில் பணியாற்றும் கூலிகளில் பெரும்பான்மையானோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள். திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட ஆயிரக்கணக்கானோர் இந்த பூமியை தங்களின் நிலமாக கொண்டாடி தேயிலையை பயிர்வித்தனர். ஆனால் இன்று எங்களுக்கு தமிழர்கள் என்ற அடையாளமும் இல்லை. மலையாளிகள் என்ற அடையாளமும் இல்லை. ஒரு ஏக்கர், 2 ஏக்கர் என்று மலையாள மக்கள் இந்நிலங்களை சொந்தம் கொண்டாடி வாழ்ந்து வருகிறனர். ஆனால் நாங்கள் எங்களுக்கான நில உரிமை கேட்டால் மறுக்கப்பட்டுகிறது. இடதுசாரி கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் எங்களை ஏமாற்றிவிட்டது. தேர்தல் காலங்களில் மட்டும் 15 பேர் அல்லது 20 பேர்களுக்கு பட்டா தருவதோடு இவர்களின் செயல்பாடுகள் நின்றுவிடுகிறது” என்று கூறுகிறார் தற்போது ஏலத்தோட்டத்தில் வேலை பார்க்கும் கோமதி. 2015 போராட்டங்களுக்கு பிறகு நிறைய பிரச்சனைகளை சந்தித்தோம். பிள்ளைகள், பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக தேவிக்குளத்தில் இருந்து வெளியேறி பூப்பாறையில் வசித்து வருகிறேன் என்றார். “மற்றபடி தேயிலை தோட்ட லைன் வீடுகள் எப்படிப்பட்டது என்றால், வாழவே தகுதியற்றது தான். எங்களின் தாத்தா பாட்டிகள் எந்த நிலையில் வந்தார்களோ அதோ நிலை தான் தொடருகிறது. ஒரு வீட்டில் 5 குடும்பம் வசிக்கிறது. மூச்சுவிட இடமற்ற சிறு நிலத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து இம்மண்ணுக்கு இறுதியில் உரமாகிவிடுகிறோம்” என்று கூறினார் அவர்.

நிலச்சரிவுகள் என்று வரும் போது, காலநிலை மாற்றம் குறித்தும், அங்கு செய்யப்படும் விவசாயம் குறித்தும் பேச வேண்டிய அவசியம் ஏற்படத்தான் செய்கிறது. “சில நேரங்களில் நீலகிரியில் குடியேறிய தாயகம் திரும்பிய தமிழர்களின் மக்கள் தொகை தான் இத்தனைக்கும் காரணம் என்று கூறுவார்கள். ஆனால் பத்துக்கு பத்து அறையில், கழிவறைகள் இல்லாமல், சுகாதாரமான குடிநீர் வசதி இல்லாமல், நாங்கள் வாழும் வாழ்க்கையை யார் அறிவார்கள். சேரன்கோடு, சேரம்பாடி, கொலப்பள்ளி தேயிலை தோட்டங்கள் காடுகளை ஒட்டியவாறு உள்ளது. யானைகளும், கரடிகளும், மலைப்பாம்புகளும், சகஜமாய் வந்து செல்லும் பகுதியாக இருக்கிறது. மாதத்திற்கு 2 என வனவிலங்குகளால் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை பட்டியலிட்டால் அது இன்று பெட்டிமுடியில் ஏற்பட்ட மரணங்களை காட்டிலும் பல மடங்கு கூடுதலாக இருக்கும். குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த மக்களுக்கு இங்கு 100 ஏக்கரில் சொந்த நிலம் இருக்கிறது. ஆனால் பொன்னூர் எஸ்டேட்டில் 3 ஏக்கரில் ஆயிரக்கணக்கான வீடுகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர் ” என்கிறார் செல்வராஜ்.

Munnar Pettimudi landslide 2020 : Climate change and weather pattern warn Nilgiris கோத்தகிரி, சோலூர்மட்டம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் இருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி (Express Photo by Nithya Pandian)

தேயிலை தோட்டங்கள் அனைத்தும் 20 முதல் 25 டிகிரி சாய்வில் அமைந்திருக்கும் நிலங்களில் தான் அமைக்க வேண்டும் என்று தேயிலை தோட்ட வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் அந்த கணக்கெல்லாம் காகிதத்தில் மட்டும் தான். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ஏக்கரில் நீலகிரியில் தேயிலை பயிரிடப்படுகிறது. கிட்டத்தட்ட சிறு குறு விவசாயிகள் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிட்டுள்ளனர். ”தேயிலை, சந்தைகளில் செல்வாக்கு பெற்ற காலம் மலையேறிவிட்டது. 10 வருட போராட்டங்களுக்கு பிறகு ஒரு கிலோ பச்சை தேயிலையின் கொள்முதல் விலை வெறும் ரூ. 25 தான். இதனை வைத்து கூலி கூட கொடுக்க முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது. அதனால் தான் நிறைய பேர் தங்களின் சொந்த நிலங்களை வெளியூர் ஆட்களுக்கு விற்றுவிடுகின்றனர். இந்நிலத்தின் தன்மை அறியாதவர்கள் தேயிலை எஸ்டேட்டை ரியல் எஸ்ட்டாக மாற்றி, காட்டேஜ் மற்றும் ரெசார்ட் பூங்காக்களாக நீலகிரியை மாற்றிவிட்டனர்” என்கிறார் நாக்குபெட்டா தொண்டு நிறுவனத்தின் மேனேஜிங் ட்ரஸ்டி ராமகிருஷ்ணன். ”குட் ஷெப்பர்ட் பள்ளியின் அருகே அமைந்திருக்கும் பைகமந்து கிராமத்தில் முன்பெல்லாம் ஆயிரக்கணக்கில் நீர்வஞ்சி எனப்படும் வில்வ மரங்கள் அதிக அளவில் இருக்கும். அப்பகுதியில் சராசரி மழை அதிகம் என்பதால், படுக மக்கள் நிலச்சரிவில் இருந்து தங்களை காக்கும் பொருட்டு இந்த மரங்களை அதிக அளவில் நட்டு வளர்த்தனர். பெய்யும் மழை நீரை எல்லாம் வேர்களுக்குள் கிரகித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது இந்த மரம். இன்று உதகை தாவிரவியல் பூங்காவில் சில மரங்கள் இருக்கிறது. நாங்கள் பூர்வீகமாகவே இங்கு வசித்து வருகின்றோம். என்னுடைய வாழ்நாளில் கலங்கல் இல்லாத சுத்தமான நீர் ஆறுகளில் சென்றதை பார்த்தேன். இன்று அவையெல்லாம் வெறும் கனவுகளாக இருக்கிறது” என்று கூறும் ராமகிருஷ்ணன் நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் நீர்வஞ்சி உள்ளிட்ட பல்வேறு நாட்டு மரங்களை நட்டு வளர்த்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் படிக்க : ‘சிலோன் டீ’ வரலாறும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் 55 வருடங்களும்!

“தமிழக அரசோ, வேளாண் துறையோ, நாட்டு மரங்களின் தேவை மற்றும் பயன்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவறிவிட்டது. சிறுதானியங்கள், கிழங்குகளுக்கான பூமி இது. தொடர்ந்து சில ஆண்டுகள் இடைவெளியே இல்லாமல் தேயிலையை பயிரிட்டு வருகின்றனர். இதனால் மண் அதன் பிடிமானத்தையும், சத்தினையும் இழந்துவிடுகிறது. இங்கு வைக்கப்பட்டிருக்கும் இறக்குமதி செய்யப்பட்ட மரங்கள், இந்த சூழலுக்கு ஏற்றவையே கிடையாது. மழை சிறிது வலுவாக பெய்தாலும் வேரோடு பிடிங்கிக் கொண்டு வந்துவிடுகிறது. 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு உதகையை உலக மக்களின் தொடர்பில் இருந்து விலக்கி வைத்தது. குன்னூர், கோத்தகிரியை மேட்டுப்பாளையத்துடன் இணைக்கும் சாலை துண்டாடப்பட்டது. அது தான் முதல் எச்சரிக்கை. அந்நிலை மேலும் சில நாட்களுக்கு நீடித்திருந்தால், உணவு பாதுகாப்பற்ற மாவட்டமாக நீலகிரி அன்று அடையாளம் காணப்பட்டிருக்கும். முன்பே சுதாகரித்து இருந்தால் 10 ஆண்டுகள் கழித்து, ஒரு நாளில் 1000 எம்.எம். என்ற அளவில் மாபெரும் மழைப்பொழிவை நீலகிரி பெற்றிருக்காது என்று வருத்தம் தெரிவிக்கிறார்.

Munnar Pettimudi landslide 2020 : Climate change and weather pattern warn Nilgiris வால்பாறையில் அமைந்திருக்கும் லயவீடுகள் (Express Photo by Nithya Pandian)

”2019ம் ஆண்டு நீலகிரியின் அவலாஞ்சி பகுதியில் மூன்று நாட்கள் விடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. ஒரு பருவமழைக்கு தேவையான மழையை மூன்றே நாட்களில் தந்துவிட்டது. 3000 மில்லி மீட்டர் மழையால் உயிர் பலி ஏதும் இல்லை. ஆனால் நிலத்தையும், வருவாய் ஆதாரத்தையும் இழந்து இருக்கின்றோம். முத்தொரை பாலடா, நடுவட்டம், ஊட்டி, கேத்தி பாலடா பகுதிகளில் போடப்பட்டிருந்த இஞ்சி, மிளகு, ஏலம் என அனைத்தும் மண்ணோடு கலந்து பவானியில் சென்றுவிட்டது. 40 ஆயிரம் டன் மண்ணும், ரூ. 500 கோடி மதிப்பிலான தேயிலையும் மண்ணோடு அடித்து சென்று காவிரி டெல்டா பகுதியை வளமாக்கியது என்று தான் கூற வேண்டும்” என்று கூறுகிறார் நெலிகொலு சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் ஹெச்.என்.சிவன்.

Munnar Pettimudi landslide 2020 : Climate change and weather pattern warn Nilgiris நீலமலைகளின் முன்பே பரந்து விரிந்திருக்கும் தேயிலை தோட்டங்கள்... இடம் : கோத்தகிரி (Express Photo by Nithya Pandian)

ஒவ்வொரு ஆண்டும் சரியாக ஜூன் 1ம் தேதி துவங்கி 6 மாதங்களுக்கு விடாமல் நீலகிரியில் மழை பெய்வது வழக்கம். நீலகிரியின் மேற்கு சரிவுகள் தென்மேற்கு பருவமழையால் பயன்பெறும். அதே போன்று கிழக்கு சரிவுகள் வடகிழக்கு பருவமழையால் பயன்பெறும். 115 நாட்களுக்கு குறையாமல் பெய்து கொண்டிருந்த மழை தற்போது 90 நாட்களை தாண்டுவதே பெரும் சவாலான காரியமாக இருக்கிறது. டிசம்பரில் பனி பெய்ய துவங்கினால் அடுத்த மூன்று மாதங்களுக்கு அதே நிலை நீடிக்கும் என்பதால் தேயிலை உற்பத்தி கொஞ்சம் குறைவாகும். ஆனால் 10 மாதங்கள் தேயிலை விவசாயம் தங்கு தடையின்றி நடைபெறும். ஆனால் பருவநிலை மாற்றத்தால் 10 மாதங்களும் தற்போது 9 மாதங்களாக சுருங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை. பந்தலூர், குந்தா, உதகை, கூடலூர் பகுதிகள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது. ரூ. 1000 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்தோம். வைத்த கோரிக்கை அப்படியே நிற்கிறது. ஆனால் எந்தவிதமான முன்னேற்றமும் அதில் இல்லை. நீலகிரியில் 180 தனியார் தேயிலை தொழிற்சாலைகளும், 15 கூட்டுறவு தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த தொழிற்ச்சாலைகளை நம்பி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். ஒரு நிலச்சரிவு என்பது வாழ்வாதாரத்தோடு சேர்த்து வாழ்வையும் சிதைக்கும் ஒன்றாக இருக்கிறது உபதலையில் வசிக்கும் ஹெச்.என்.சிவன்.

மேலும் படிக்க : ”லீவு போடாம உழைச்சதுக்கு கிடைச்ச கூலியா இது?” – நிலச்சரிவில் தப்பித்த பெண்ணின் அழுகுரல்!

”இயற்கை தன்னை தானே தகவமைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இயற்கை அழிகிறது. இயற்கை சீற்றம் என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. நாம் செய்த தவறுகளில் இருந்து தப்பி பிழைக்க புதிய வழி தேடிக் கொள்கிறது” என்கிறார் மக்கள் சட்ட மையம் தமிழ்நாடு அமைப்பின் இயக்குநரும், வழக்கறிஞருமான விஜயன். ”நீலகிரியில் இருக்கும் லயம் வீடுகள் வாழவே தகுதியற்றது. அது வசதியானதும் அல்ல. பாதுகாப்பானதும் அல்ல. டிசம்பர் மாத கடுங்குளிரிலும் காலை 5:30 மணிக்கு தேயிலை தோட்டத்தில் அம்மக்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள். மேம்பாட்டு திட்டங்கள் என்று அணைகள் கட்டப்படுதலும், பணப்பயிர் மூலம் ராஜ வாழ்க்கை வாழலாம் என்று மக்களை தடம் மாற்றம் செய்ததன் விளைவு தான் இன்று மாபெரும் நிலச்சரிவுகளும், பெரு வெள்ளமும். வனங்கள் அழிக்கப்பட்டும், அபகரிக்கப்பட்டும் தான் பணப்பயிர்கள் போடப்பட்டன. அதற்காக பூச்சிக் கொல்லிகளும், ரசாயன உரங்களும் போடப்பட்டு மண்ணின் தன்மை மாறிவிட்டது. நிலச்சரிவை தடுக்க மரங்கள் இல்லை. நீரை தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் மண்ணுக்கு இல்லாமல் போய்விட்டது” என்று கூறுகிறார் விஜயன்.  கெத்தை நிலச்சரிவு, நீலகிரியில் ஏற்பட்ட மிகமோசமான நிலச்சரிவுகளில் ஒன்றாகும். தமிழக மின்சார வாரிய ஊழியர்களின் குடியிருப்பு பகுதியான பெகும்பல்லா முகாமில், 1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 36 நபர்கள் மண்ணோடு புதைந்து போனார்கள். இவர்கள் வாழ்ந்த வீடும் கிட்டத்தட்ட லைன் வீடுகள் போன்று தான் அமைக்கப்பட்டிருந்தது என்று நினைவு கூறுகிறார் வழக்கறிஞர் விஜயன்.

Munnar Pettimudi landslide 2020 : Climate change and weather pattern warn Nilgiris ஒவ்வொரு வருடமும் கெத்தையில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் சக ஊழியர்கள் (Special Arrangement)

ஆனால் வால்பாறையில் வேறொரு சூழல் நிலவுவதை பார்க்க முடிகிறது. 56 தனியார் மற்றும் அரசு தேயிலை தோட்டங்கள் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ளது. பெட்டிமுடி நிகழ்விற்கு பிறகு, வில்லோனி அப்பர் டிவிசனில் அமைந்திருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியை வேறொரு பக்கத்திற்கு மாற்றும் முடிவை எடுத்துள்ளது டாட்டா தேயிலை நிறுவனம். 7 லயங்களில் இங்கு மக்கள் வசித்து வருகின்றனர். “எங்களின் குடியிருப்பிற்கு பின்பக்கத்தில் மிகப்பெரிய மலை ஒன்று இருக்கிறது. மழை எப்போது பெய்தாலும் அந்த சூழல் கொஞ்சம் அச்சம் தருவதாக அமைந்திருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான் இந்த மாற்றத்திற்கு காரணம்” என்கிறார் வில்லோனியில் நியாய விலைக்கடையில் பணியாற்றும் கார்த்தி ப்ரியா. நான் இரண்டாம் தலைமுறையாக தேயிலை தோட்ட வீட்டில் வசித்து வருகின்றேன். சொந்த ஊர் தூத்துக்குடியில் இருக்கும் வாசுதேவநல்லூர். 50 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் இங்கே வசித்து வருகின்றோம். எங்களின் அடுத்த தலைமுறையினர் தேயிலை தோட்டங்களின் பணியாற்றினால் மட்டுமே எங்களுக்கு இந்த வீட்டில் வசிக்க உரிமை உண்டு. 2003ல் நியாய விலைக்கடையில் வேலைக்கு சேர்ந்த போது எங்கள் கடையில் 1050 ரேசன் அட்டைதாரர்கள் இருந்தார்கள். இன்றோ அந்த எண்ணிக்கை 600ஆக குறைந்துவிட்டது. இது ஒன்று தான் கொஞ்சம் கஷ்டமான சூழலே தவிர மற்றபடி வில்லோனி லயத்தில் வாழ்க்கை என்பது பாதுகாப்பானதாகவே இருக்கிறது என்கிறார் கார்த்தி ப்ரியா.

Munnar Pettimudi landslide 2020 : Climate change and weather pattern warn Nilgiris குயின்சோலை தேயிலை தோட்டத்தில், தாயகம் திரும்பிய மலையக தமிழர்களின் வாழிடம் (Express Photo by Nithya Pandian)

1987ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான 20 வருடங்களில் நீலகிரியில் மட்டும் 1040 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. அதில் 65% நிலச்சரிவுகள் மலை ரயில் செல்லும் பாதைகளில் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வீடுகள் கட்டவும், நிலங்கள் வாங்கவும், தேயிலை தோட்டங்கள் அமைக்கவும் நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளை மக்கள் பின்பற்றினால் மட்டும் போதாது. நாட்டு மரங்களின் வளர்ச்சி மற்றும் நீர் நிலைகளின் பாதுகாப்பு, பழங்குடிகள் காடுகளை பின்பற்ற பயன்படுத்திய தொழில்நுட்பங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் என இது மிகப்பெரிய சவாலான காரியம் தான். முறையான நடவடிக்கைகள் மட்டுமே இயற்கை பேரழிவுகளில் இருந்து மனித குலம் தப்பித்து நீண்டு வாழும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Nilgiris Munnar Landslide Idukki
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment