நிர்மலா தேவி விவகாரம்: உதவி பேராசிரியர் முருகன் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டுள்ளாரா?

உதவி பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா புகார்

நிர்மலா தேவி விவகாரத்தில் எனது கணவரை சிக்கவைக்க முயற்சி செய்கின்றனர் என உதவி பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா புகார் அளித்துள்ளார்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதுதவிர, கவர்னரால் நியமிக்கப்பட்ட ஒருநபர் விசாரணை அதிகாரியான சந்தானமும் விசாரணை நடத்தி வருகிறார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலாதேவியை காவலில் எடுத்து விசாரித்தபோது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் தூண்டுதலின்பேரிலேயே மாணவிகளிடம் பேசியதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார். கருப்பசாமி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர்கள் 2 பேரும் சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களை விசாரணைக்காக காவலில் எடுத்தனர். விசாரணையின் போது, அவர்கள் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சந்தானம் விசாரணைக் குழு முன் உதவி பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா விசாரணைக்காக ஆஜரானார். மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் சுஜாவிடம் சந்தானம் குழு விசாரணை நடத்தியது.

விசாரணையின் போது, “நிர்மலா தேவி விவகாரத்தில் எனது கணவரை சிக்கவைக்க முயற்சி செய்கின்றனர். என் கணவரை கைது செய்ததன் மூலம் உயரதிகாரிகளை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். புத்தாக்க பயிற்சியில் நிர்மலா தேவி சேர்க்கப்பட்டதில் சந்தேகம் உள்ளது. புத்தாக்க பயிற்சியின் போது நிர்மலா தங்கவைக்கப்பட்ட ஏ.சி. அறையில் உயரதிகாரி ஒருவர் அடிக்கடி அவரை சந்தித்தார்” என சுஜா கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சுஜாவின் சகோதரி சுவிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், “புத்தாக்க பயிற்சியின் போது, முன்னாள் ஆராய்ச்சி மாணவர் என கூறப்படும் கருப்பசாமி தான், பேராசிரியை நிர்மலா தேவியை எனது மாமாவிடம் (முருகன்) அழைத்து வந்து தனி அறை கொடுக்குமாறு கேட்டார். அதற்கு ஒப்புக் கொண்ட எனது மாமா பியூன் மூலம், தனி அறை ஏற்பாடு செய்துக் கொடுக்கச் சொன்னார். அவ்வளவு தான் எனது மாமாவுக்கும், நிர்மலா தேவிக்கும் உடனான அறிமுகம். அதற்கு பின், நிர்மலா தேவிக்கு ஏசி அறை ஒதுக்கப்பட்டு, அங்கே அவரை காண உயரதிகாரி ஒருவர் அடிக்கடி வந்து சென்றார். வேறொரு அதிகாரி ஒருவர் நிர்மலா தேவியை காரில் அழைத்துச் செல்வார். ஆனால், இவர்களை எல்லாம் விட்டுவிட்டு என் மாமாவை மட்டும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close