Advertisment

விடுதலையானார் நக்கீரன் கோபால்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நக்கீரன் கோபால் விடுதலை

நக்கீரன் கோபால் விடுதலை

நக்கீரன் கோபால் கைது : பிரபல பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தொடர்பாக வெளியான செய்திக் கட்டுரை தொடர்பாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால். சந்தனக் கடத்தல் மன்னம் வீரப்பனை அதிரடிப்படை நெருங்க முடியாமல் தவித்த நாட்களில் இவரும், இவரது குழுவினரும் அவரை சந்தித்து எடுத்த பேட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, அரசு தூதராக சென்று வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் கோபால்!

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவருக்கு எதிரான கட்டுரைகளுக்காக பல்வேறு வழக்குகளை சந்தித்தவர் கோபால்!  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசுத் தரப்புடன் அவருக்கு பெரிதாக மோதல் இல்லை. ஆனால் அண்மையில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக நக்கீரனில் வெளியான அட்டைப்பட கட்டுரை புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்லூரி மாணவிகளை பாலியல் பேரத்தில் தள்ளியதாக கைதான நிர்மலா தேவி 4 முறை ஆளுனரை சந்தித்ததாக வெளியான அட்டைப்பட கட்டுரைதான் இந்தக் கைதுக்கு காரணம் என தெரிகிறது. புனேவுக்கு செல்வதற்காக இன்று (அக்டோபர் 9) காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த நக்கீரன் கோபாலை போலீஸார் கைது செய்தனர். ஆளுனரை அரசியல் சாசன பணி செய்ய விடாமல் தடுத்ததாக நக்கீரன் கோபால் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவலை போலீஸார் இன்னும் வெளியிட வில்லை.

நக்கீரன் கோபால் கைது:

04:30 PM: நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட வழக்கை விசாரித்த எழும்பூர் 13வது நீதிமன்றம், "124வது பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் வழக்குப்பதிவு செய்தது செல்லாது. இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை. கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முடியாது. ஏப்ரல் மாதம் நக்கீரனில் வெளியான கட்டுரைக்கு இப்போது கைது செய்வது முறையல்ல" என்று சொல்லி உத்தரவிட்டுள்ளது. எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து, நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்டார்.

04:05 PM: '124வது சட்டப்பிரிவின் கீழ் வராத ஒரு வழக்கில் கைது செய்வது இந்தியாவிலேயே முதல்முறை. இந்த வழக்கின் கீழ் நீதிமன்ற காவலுக்கு அனுமதித்தால் தவறான உதாரணமாகிவிடும் ' என்று நக்கீரன் கோபால் மீதான வழக்கு குறித்து இந்து என்.ராம் தெரிவித்துள்ளார்.

03:30 PM: எழும்பூர் 13வது நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். தாமதமாக கைது நடவடிக்கை எடுத்த காரணம் என்ன? என்று கோபால் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

03:00 PM: நக்கீரன் கோபால் ஆஜர்படுத்தப்பட்டுள்ள எழும்பூர் நீதிமன்றத்துக்கு இந்து என்.ராம் வந்துள்ளார்.

02:45 PM: ஆளுநரின் துணைச்செயலாளர் செங்கோட்டையன் கொடுத்த புகாரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. நீதிமன்றத்தில் ஜாம்பஜார் காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த

ரிமாண்ட் ரிப்போர்ட் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

02:00 PM: எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபாலை போலீசார் ஆஜர்படுத்தினர்.

1:10 PM: நக்கீரன் கோபாலை சந்திக்க சென்று கைதான வைகோ, சென்னை எழும்பூரில் சிராஜ் மஹாலில் வைக்கப்பட்டார். அவர் மாலையில் விடுவிக்கப்படுவார் என தெரிகிறது. வைகோ கைதைக் கண்டித்து எழும்பூரில் மதிமுக.வினர் மறியல் நடத்தினர்.

1:05 PM: நக்கீரன் கோபால் கைதுக்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்தார். ஆதாரம் இல்லாமல் ஆளுனர் மீது கடுமையான புகார்களை கூறினால், கைது செய்யத்தான் செய்வார்கள் என்றார் டிடிவி தினகரன். அவரது இந்தக் கருத்து பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும் விவாதங்களையும் உருவாக்கியது.

12:45 PM: சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து நக்கீரன் கோபால் போலீஸ் வாகனத்தில் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டார். அல்லிகுளத்தில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார்.

12:15 PM: நக்கீரன் கோபால் கைது குறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘அந்தச் செய்தியை பார்க்கவில்லை’ என்றார். இது தொடர்பாக பாஜக.வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து கேட்டபோது, ‘பத்திரிகை சுதந்திரம் குறித்து பேசும் யோக்கியதை திமுக.வுக்கு கிடையாது. நிர்மலாதேவி விவகாரத்தில் உண்மைகள் வெளியானால் பலரது அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகும்’ என்றார்.

11:40 AM: நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

October 2018

11:35 AM : தர்ணா நடத்திய வைகோவை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து அங்கு பத்திரிகையாளர்கள் கண்டன கோஷம் எழுப்பினர்.

11:20 AM : நக்கீரன் கோபாலை சந்திக்க போலீஸ் அனுமதிக்காததைக் கண்டித்து அங்கு சாலையில் அமர்ந்து தனி ஆளாக வைகோ தர்ணா செய்தார். அவருடன் வந்திருந்த தொண்டர்கள், அரசையும் காவல் துறையையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

11:10 AM : சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நக்கீரன் கோபாலை சந்திக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அங்கு வந்தார். ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி உள்ளே செல்ல முயன்றார். அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை. எனவே வைகோ சட்ட விதிகளை சுட்டிக்காட்டி அவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

10:45  AM : பொதுவாக அவதூறு வழக்கிற்கு சிவில் வழக்குகள் தொடுப்பார்கள். அதில் கைது நடவடிக்கை இருக்காது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பத்திரிகைகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் இந்த வகையிலானவைதான். ஆனால் நக்கீரன் கோபால் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு நாகப்பட்டணத்தில் திமுக.வினர் கருப்புக்கொடி காட்டியது தொடர்பாக ஆளுனர் மாளிகை தரப்பில் ஒரு அறிக்கை விடப்பட்டது. ஆளுனரின் அரசியல் சாசன கடமையை செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டது. அதன்பிறகு திமுக தனது கருப்புக் கொடி போராட்டங்களை நிறுத்திக் கொண்டது. அப்போது எச்சரிக்கையாக குறிப்பிட்ட சட்டப்பிரிவில் தற்போது கோபால் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

9:46 AM : நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் குறித்து அவதூறு கருத்தை நக்கீரன் பத்திரிக்கையில் எழுதியதாகவும், அதன் அடிப்படையிலேயே ஆளுநர் மாளிகை அதிகாரி புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

9:37 AM : 124 (a) பிரிவின் கீழ் சென்னை ஜாம் பஜார் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால், தற்போது சிந்தாந்திரி பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது

9:30 AM: சென்னையில் இருந்து பூனே செல்ல இருந்த நிலையில் திடீரென கோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

9:15 AM: தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

9:00 AM: பிரபல பத்திரிக்கை நிறுவனமான நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் காலை 8.15 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Banwarilal Purohit Nirmala Devi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment