நாமக்கல் சுப்பிரமணி மர்ம மரணம்: முன்னாள் அமைச்சருக்கு சிபிசிஐடி சம்மன்

அரசு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் அதிமுக அம்மா அணியின் எம்எல்ஏ பழனியப்பனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அம்மா அணியின் எம்எல்ஏ-வுமான பழனியப்பனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் பணமதிப்பிழக்க நடவடிக்கைக்கு பின்னர், தமிழகத்தில் வருமான வரித்துறையினரின் சோதனை அதிகரித்துள்ளது. தமிழக பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி, தலைமை செயலாளராக இருந்த ராமமோகன் ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் என இந்த சோதனை நீள்கிறது.

பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்தானதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதே நாளில் நாமக்கல் நகரின் மோகனூர் சாலையில் உள்ள ஒப்பந்ததாரர் சுப்பிரமணி வீட்டிலும் சோதனை நடந்தது. இவர் அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் ஆவார். அவரது வீட்டில் சோதனை நடத்திய எட்டு பேர் கொண்ட குழு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது.

அதனைத்தொடர்ந்து, மோகனூர் அருகே உள்ள செவிட்டுரங்கன்பட்டியில் இருக்கும், பண்ணை வீட்டில் கடந்த மே மாதம் 8-ம் தேதி மர்மமான முறையில் சுப்பிரமணி இறந்து கிடந்தார். முதலில் சுப்பிரமணி தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், சுப்பிரமணியன் சாவில் மர்மம் இருப்பதாக அவரின் உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர். இதனையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

தற்கொலைக்கு முன் சுப்பிரமணி எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. சுப்பிரமணியத்தின் குடும்பத்தாரிடமும், பண்ணை தொழிலாளர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், சுப்பிரமணியின் நண்பர்கள் 8 பேருக்கு நேரில் ஆஜராகுமாறு ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், சுப்பிரமணியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அம்மா அணியின் எம்எல்ஏ-வுமான பழனியப்பனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close