சென்னையில் 28 இடங்களில் கருப்புக் கொடி, 3070 பேர் கைது : மோடியை திகைக்க வைத்த காவிரி போராட்டம்

பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் வரலாறு காணாத எதிர்ப்புப் போராட்டத்தை சந்தித்து திரும்பியிருக்கிறார். 28 இடங்களில் கருப்புக் கொடி போராட்டம் நடந்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் வரலாறு காணாத எதிர்ப்புப் போராட்டத்தை சந்தித்து திரும்பியிருக்கிறார். 28 இடங்களில் கருப்புக் கொடி போராட்டம் நடந்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று ராணுவ தளவாட கண்காட்சியில் பங்கேற்க சென்னை வந்தார். அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மைய வைர விழா கட்டடத் திறப்பு விழாவிலும் அவர் கலந்து கொண்டார். மோடி வரும்போது கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்தன.

காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் தமிழ் அமைப்புகள் பலவும் ஐ.பி.எல் போட்டிக்கு அடுத்தபடியாக மோடியின் வருகையை போராட்டக் களம் ஆக்கின. இன்று காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு மோடி வந்த நிலையில், காலை 8 மணிக்கே பல்வேறு அமைப்பினர் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சியினர் விமான நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பரப் பலகையில் ஏறி நின்று கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தினர். உயிருக்கு ஆபத்தான இந்த போராட்டத்தை கைவிடும்படி அவர்களுக்கு வேல்முருகன் தொலைக்காட்சி பேட்டிகள் மூலமாக வேண்டுகோள் வைத்தார்.

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் விமான நிலையம் வாசல் பகுதிக்கு சென்று, ‘மோடியே, திரும்பிப் போ’ என கோஷமிட்டனர். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனது கட்சியினருடன் அங்கு கருப்புக் கொடி போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானார். பழ.நெடுமாறன், வேல்முருகன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார்கள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கருப்பு நிற பலூன்களை பறக்க விட்டு கைதானார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக மாவட்டச் செயலாளர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன் ஆகியோர் தனித்தனி இடங்களில் கருப்புக் கொடி போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானார்கள்.

பிரதமர் மோடி விமான நிலையத்தை விட்டு வெளியே வரவில்லை. அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் சென்று, ராணுவ தளவாட கண்காட்சியில் கலந்து கொண்டார். அங்கிருந்து ஹெலிகாப்டரிலேயே அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மைய விழாவுக்கும் சென்றார். எனினும் சென்னையில் பல இடங்களில் போராட்டக்காரர்கள் பறக்க விட்ட கருப்பு பலூன்களால் மோடியின் ஹெலிஹாப்டர் பாதையும் மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

சென்னையில் மட்டும் மொத்தம் 28 இடங்களில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. அதில் 3070 பேர் கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்யாமல் அனுப்பி வைத்தனர். இல்லாவிட்டால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகியிருக்கும். திமுக கூட்டணி சார்பில் போராட்டத்தில் கலந்துகொண்ட சுப வீரபாண்டியன், தன்னையும்கூட போலீஸார் கைது செய்ய மறுத்ததாக தெரிவித்திருக்கிறார்.

சென்னையை தவிர்த்து, தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் திமுக கூட்டணியினர் கருப்பு உடைகளை அணிந்து வாகனப் பேரணி நடத்தினர். தமிழ்நாட்டில் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டப்படுவது இது முதல் முறையல்ல. இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் பிரதமர் நேருவுக்கு திமுக கருப்புக் கொடி காட்டியது. எமர்ஜென்சியில் திமுக.வினரை கைது செய்த இந்திரா காந்தியை கண்டித்து 1977-ல் அவருக்கு அதே திமுக கருப்புக் கொடி காட்டியது. மதுரையில் இந்திரா காந்தி மீது தாக்குதலும் நடந்தது.

தமிழகத்தில் கருப்புக் கொடி போராட்டத்தை எதிர்கொண்ட 3-வது பிரதமர் மோடி ஆவார். ஆனால் முந்தைய இரு பிரதமர்களுக்கும் காட்டப்பட்டதைவிட சென்னையில் வீரியமான போராட்டத்தை தமிழ் அமைப்புகள் நடத்திக் காட்டியிருக்கின்றன. மோடி சாலை மார்க்கப் பயணத்தை தவிர்த்துவிட்டு, ஹெலிகாப்டர் பயணத்தையே தேர்வு செய்யும் கட்டாயத்தை இந்தப் போராட்டங்கள் உருவாக்கின. அது மட்டுமின்றி, ‘கோ பேக் மோடி’ என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி அதை உலக அலவில் டிரெண்டிங்கில் முதல் இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் காவிரி போராட்டக்காரர்கள்.

மோடி இந்தியாவில் வேறு எங்கும் எதிர்கொள்ளாத எதிர்ப்பு இது! தமிழக மக்களின் உணர்வை புரிந்துகொண்டு, நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை இனியாவது மத்திய அரசு அமைக்க வேண்டும்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close