கரை ஒதுங்கி இறந்த டால்பின்கள் : கடற்படை கப்பல்கள் காரணமா?

கூட்டம் கூட்டமாக வாழக்கூடிய இவற்றின் ஒலி அதிர்வில் பிறழ்வை கடலில் பயணிக்கும் பெரிய பெரிய கப்பல்கள் உண்டாக்கக்கூடிய அதீத ஒலி அதிர்வுகளே ஏற்படுத்துகின்றன.

சா.ஜெ.முகில் தங்கம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு அருகே உள்ள கடற்கரை கிராமம் புன்னக்காயல். தாமிரபரணி ஆறு கலக்கும் புன்னக்காயலின் முகத்தூவரப் பகுதியில் மீனவர்களின் வசதிக்காக இரண்டு தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. 27.11.17 அன்றையதினம் மாலைப்பொழுது அக்கிராமவாசிகளுக்கு இயல்பானதாய் இல்லை. இரவு 8 மணியளவில் 30க்கும் மேற்பட்ட டால்பின்கள் (ஓங்கில்கள்) தூண்டில் வளைவுகள் பகுதிக்கு அருகில் கரை ஒதுங்கியுள்ளன. இதனைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் டால்பின்களை கடலுக்குள் எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கடலுக்குள் தூக்கிச் சென்றும், வல்லத்தில் படகுகளில் போட்டும் டால்பின்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். கடலுக்குள் எடுத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே நான்கு டால்பின்கள் மட்டும் மீண்டும் கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய சிறிது நேரத்திலேயே அவை இறந்துவிட்டன என அப்பகுதி மீனவர்களும் மக்களும் தெரிவித்தனர். 28ம் தேதி காலையில் வந்த திருச்செந்தூர் வனத்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றூம் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மானவர்கள் ஆகியோர் இறந்த டால்பின்களை ஆய்வுக்குட்படுத்தினர். அதன்பின் நான்கு டால்பின்கள் புன்னக்காயல் கடற்கரையிலேயே புதைக்கப்பட்டன.

dolpin
அப்பகுதி மீனவர் ஒருவரிடம் பேசுகையில், “புன்னக்காயலில் இதுபோன்ற நிகழ்வுகள் இதுவரை நிகழ்ந்ததில்லை. கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது அடிக்கடி டால்பின்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் நேற்று கரை ஒதுங்கிய டால்பின்களை எவ்வளவோ காப்பாற்ற முயன்றும் நான்கு டால்பின்கள் இறந்திருப்பது வருத்தமளிக்கிறது” என்று கூறியவர், கடந்த வருடம் ஜனவரி மாதம் மணப்பாடு அருகே திமிங்கலங்கள் ஒதுங்கியதையும் நினைவுகூர்ந்தார்.

இதுகுறித்து டால்பின்களை பிணக்கூறாய்வு செய்த கால்நடை மருத்துவர்களான ஸ்ரீதர், சுகுமார் கூறுகையில், “இறந்த நான்கு டால்பின்களில் மூன்று பெண், ஒரு ஆண். இவை அனைத்தும் குட்டிகள். டால்பின்கள் வழிமாறி கரைக்கு வந்ததால் நீந்துவதற்கான போராட்டத்தால் மூச்சுத்திணறி இறந்துள்ளதாக தெரிகிறது. டால்பின்களின் உடலில் எவ்வித காயங்களும் காணப்படவில்லை. இறப்பிற்கான உறுதியான காரணங்கள் ஆய்வுக்குப் பின்னே தெரியவரும்” என்றனர்.

வங்கக்கடலில் தூத்துக்குடி, இராமநாதபுரம் கடற்பகுதியில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா கடல்வாழ் உயினங்களின் சொர்க்கம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு 3,600க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் பல உயிரினங்கள் அரிதானவை. திமிங்கலங்கள், டால்பின்கள், கடல்பசு, கடல் ஆமை, கடல் பசு, கடல் பஞ்சு, கடல் பாம்பு, முத்துச்சிற்பி போன்றவை அவற்றுள் சில. இதனால்தான் மன்னார் வளைகுடாவை கடல்வாழ் உயிரின தேசிய காப்பகமாக அறிவித்துள்ளனர். இப்படியான பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் திமிங்கலங்கள், டால்பின்கள் தொடர்ந்து கரை ஒதுங்கியுள்ளன. அவற்றுக்கான காரணங்கள் வழிதவறி கரைக்கு வந்துவிட்டன என சொல்லப்பட்டாலும் ஏன் வழிதவறி வந்தன என்ற கேள்விக்கு உறுதியான பதில்கள் இப்போது வரை கிடைக்கவில்லை.

இதேபோன்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நான்கு நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு பகுதியில் 90க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கி அவற்றில் 40 திமிங்கலங்கள் இறந்துபோயின. அதேபோன்று கடந்த ஆகஸ்ட் மாதம் இராமநாதபுரம் அருகே உள்ள மண்டபம் பகுதியில் 100கிலோ எடை கொண்ட புள்ளி சுறா ஒன்று கரை ஒதுங்கி இறந்தது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தோனேஷியாவிலும் கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்திலும் அதிகளவிலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இறந்தன.

dolpin2
கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்குவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்கான காரணங்கள் பற்றி அப்போது கவலைப்பட்டாலும், அதன்பின் அதனைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை என்பதே உண்மை. மீண்டும் அதே போன்று கடல்வாழ் உயிரின்ங்கள் கரை ஒதுங்கியபின்னரே, அதனைப் பற்றி பேசுகிறோம். இவ்விசயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய மீன்வளத்துறை அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் கூட சம்பவம் நடந்த பின்னர்தான் இதுதொடர்பாக ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறார்கள்.

இதற்கான காரணங்களாகப் காலநிலை மாற்றமும், பாரம்பரிய மீன்பிடி முறையை மீனவர்கள் மறந்ததும்தான் என பெரும்பாலும் கூறப்படுகிறது. ஆனால் இவற்றை சூழலியலாளர்கள் மறுக்கின்றனர். பருவநிலை மாற்றம் ஒருவகையில் கடலின் தன்மையை மாற்றியிருந்தாலும் இப்படியான நிகழ்வுக்கு மிக முக்கிய காரணம் கடலின் பரப்புக்குள் எழுப்பப்படும் அதீத ஒலிகள்தான் என்கின்றனர். திமிங்கலங்களும் சரி டால்பின்களும் சரி சோனார் எனப்படும் ஒலி அதிர்வுகளைக் கொண்டே கடலுக்குள் பயணிக்கின்றன. கூட்டம் கூட்டமாக வாழக்கூடிய இவற்றின் ஒலி அதிர்வில் பிறழ்வை கடலில் பயணிக்கும் பெரிய பெரிய கப்பல்கள் உண்டாக்கக்கூடிய அதீத ஒலி அதிர்வுகளே ஏற்படுத்துகின்றன. இதனாலே அவை கூட்டம் கூட்டமாக வழிதவறி கரையை நோக்கி வருகின்றன எனவும் கூறுகின்றனர். பெரிய பெரிய சரக்கு மற்றும் இராணுவ கப்பல்களை கட்டுப்படுத்தினால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கலாம்.

இறுதியாய் அப்பகுதி மீனவர் ஒருவர் கூறுகையில், “நேற்று இரவு போராடி அவ்வளவு டால்பினையும் கடலுக்குள்ள விட்டுட்டோம். அதுல எத்தன உயிர் பிழைக்கப் போகுதோ?” என கூறிக்கோண்டே செல்லும்போது கடற்கரை மணலில் டால்பின் உடலை வெட்ட பயன்படுத்திய மருத்துவ கழிவுகளை அங்கேயே வெறும் மணலால் மூடியிருந்த காட்சியை நமக்கு காட்டிவிட்டு அவர் வழி நடக்க ஆரம்பித்தார். அந்த பாதுகப்பற்ற மருத்துவ கழிவுகளை என்ன செய்வது?

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close