நீட் தேர்வுக்கு மேலும் ஒருவர் பலி : கிருஷ்ணசாமியை தொடர்ந்து சிங்கம்புணரி கண்ணன்

மதுரையில் உள்ள தனியார் கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத அழைத்து சென்ற மகளை மீண்டும் அழைத்துச் செல்லும்போது கண்ணன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நீட் தேர்வு, தமிழ்நாட்டில் மற்றொரு உயிரை பலி வாங்கியது. நீட் தேர்வெழுத மகளை மதுரைக்கு அழைத்து சென்ற கண்ணன் என்பவா் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நீட் தேர்வை கடுமையான எதிர்ப்புக்கு இடையில் தமிழ்நாட்டில் மத்திய அரசு நடைமுறைப் படுத்தியது. இன்று
திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவா் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுத கேரள மாநிலம், எர்ணாகுளம் அழைத்து சென்ற போது மாரடைப்பு காரணமாக காலையில் உயிரிழந்தார்.

நீட் தேர்வுக்கு எதிராக நீரு பூத்த நெருப்பாக இருந்த எதிர்ப்பலை, கிருஷ்ணசாமியின் மரணத்தை தொடர்ந்து வலுவாக மாறியிருக்கிறது. அந்த துயர சம்பவத்தின் வடு மறைவதற்குள், மதுரையில் உள்ள தனியார் கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத அழைத்து சென்ற மகளை மீண்டும் அழைத்துச் செல்லும் போது கண்ணன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நீட் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மகள் தேவி ஐஸ்வர்யாவிடம் நெஞ்சுவலிப்பதாக கண்ணன் கூறியுள்ளார். பின்னர் கண்ணன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலே உயிரிழந்தார். உயிரிழந்த கண்ணன் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கம்புணரியை சேர்ந்தவா் என்பது கூறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு நாளில் அடுத்தடுத்து தமிழ்நாட்டில் இருவர் பலியானது பரபரப்பாக பேசப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

 

×Close
×Close