மு.க ஸ்டாலினை கைது செய்தது தேவையற்ற செயல்: ஓபிஎஸ்

ஜனநாயக நாட்டில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. சேலத்தில் மு.க ஸ்டாலினை கைது செய்த நிகழ்வு என்பது தேவையற்றது

மு.க ஸ்டாலினை கைது செய்தது தேவையற்ற செயல் என முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் திமுக-வினர் தூர்வாரிய ஏரியை பார்வையிட சென்ற ஸ்டாலின் நடுவழியில் தடுத்துநிறுத்தி கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள கச்சிராயன் ஏரியை திமுக சார்பில் தூர்வாரப்பட்டது. ஆனால் அந்த ஏரியில் இருந்து அதிமுக-வினர் வண்டல் மண் எடுத்ததாக கூறி அதிமுக, திமுக இடையே மோதல் ஏற்பட்டது.

இதனிடையே எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட ஏரியை பார்வையிடுவதற்காக ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். இதற்காக வியாழக்கிமை, கோவை விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் சேலம் சென்றார். அப்போது கோவை கணியூர் சோதனைச் சாவடியில் மு.க.ஸ்டாலினை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, ஸ்டாலினை கைது செய்ய முயன்றதால், அங்கு திமுக-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, முக.ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, வியாழக்கிழமை மாலையில் மு.க ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். மு.க ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியினருடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு. கஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஒ பன்னீர் செல்வம் பதிலளித்து பேசியதாவது: இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. சேலத்தில் மு.க ஸ்டாலினை கைது செய்த நிகழ்வு என்பது தேவையற்றது என்று கூறினார்.

அதிமுக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு என மூன்றாக பிளவு பட்டுள்ளது. இந்த நிலையில், ஓ பன்னீர் செல்வம் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close