நீட் தேர்வு விலக்கு மசோதா : விரைந்து முடிவெடுக்கக்கோரி வழக்கு

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பான நடைமுறைகளை விரைவுபடுத்தக் கோரி ஐகோர்ட்டி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறும் நடைமுறையை முடிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைவு படுத்த உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, நாடு முழுவதும் ஓரே தேர்வு என்ற அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. ஆனால் மத்திய அரசு மறுத்துவிட்டது. இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வரப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அது ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படாமல், மத்திய அரசு கையில் இருக்கிறது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழக அமைச்சர்கள் முறையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம், ஜனாதிபதி ஒப்புதலுக்காக கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பபட்டு இதுவரை அனுமதிக்கா காத்திருக்கிறது. இந்த சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகளை முடிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காததால் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஒப்புதல் இல்லை என தெரிந்தால் மாணவர்கள் பொறியியல் உள்ளிட்ட பிற பாடங்களை தேர்வு செய்வர். சட்ட மசோதா இன்னும் ஜனாதிபதி செயலகத்தை சென்றடையவில்லை என வாதிட்டார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்புடைய உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பிறப்பித்த தீர்ப்புகளை ஆய்வு செய்யும்படி மனுதாரர தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் வெள்ளிக் கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

×Close
×Close