நீட் போராட்டம் : தி.மு.க.வுடன் சி.பி.ஐ., தனியாக மார்க்சிஸ்ட்!

தி.மு.க.வுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்டும், மார்க்சிஸ்ட் தனியாகவும் போராட்டம் நடத்த முடிவெடுத்திருப்பது தோழர்கள் மத்தியில் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரி தி.மு.க.வின் மனித சங்கிலியில் சி.பி.ஐ. பங்கேற்கிறது. அதற்கு அடுத்த நாளே மார்க்சிஸ்ட் கட்சி தனியாக மறியல் போராட்டம் நடத்துகிறது.
நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஜூலை 27-ம் தேதி தமிழகம் முழுவதும் தி.மு.க. மனிதசங்கிலி போராட்டம் நடத்துகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சி.பி.ஐ) இதில் பங்கேற்கும் என அதன் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்தார். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க.வின் போராட்டத்தில் இணையவில்லை. தி.மு.க. போராட்டம் நடத்தி முடித்த அடுத்த நாள் (ஜூலை 28), மார்க்சிஸ்ட் சார்பில் அதே பிரச்னைக்காக மறியல் போராட்டம் நடக்கிறது
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை :
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட் தேர்வு’ தமிழக மாணவர்களை பாதிக்கிறது, மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது என்ற அடிப்படையில் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளித்திட தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மத்திய அரசு பரிந்துரை செய்யாததால் குடியரசுத்தலைவர் ஒப்புதல் பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை.
குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்றிட மாநில அதிமுக அரசு உருப்படியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. நீட் தேர்வு முடிந்து 15 சதவிகிதம் மத்திய ஒதுக்கீட்டிற்கு அளித்து மீதமுள்ள 85 சதவிகிதத்தில் 85 சதவிகிதம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதென மாநில அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ளமொத்த இடங்களில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்த மாணவர்களுக்கு 5 சதவிகித இடங்கள் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்திய பிறகும் மத்திய அரசாங்கம் பிடிவாதமாக மறுத்து வருகிறது.
நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டுமென்று வலியுறுத்தியும், இதற்காக மாநில அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியும் 28-7-2017 அன்று சென்னையில் மத்திய அரசு அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது. கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
தமிழக மாணவர்களின் உரிமை காத்திட நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்துப்பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.
மக்கள் நலக் கூட்டணி தற்போது இல்லாவிட்டாலும்கூட, சமீப நாட்கள் வரை சில பிரச்னைகளில் சி.பி.எம்., சி.பி.ஐ, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தின. தவிர, இரு இடதுசாரி கட்சிகளும் இணைந்து போராட்டங்களை நடத்துவது என்பது அந்தக் கட்சிகள் இடையிலான அகில இந்திய நிலைப்பாடு! அதற்கு மாறாக தி.மு.க.வுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்டும், மார்க்சிஸ்ட் தனியாகவும் போராட்டம் நடத்த முடிவெடுத்திருப்பது தோழர்கள் மத்தியில் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. வி.சி.க. இதில் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிப்பதாக கூறுகிறார்கள்.

×Close
×Close