சென்னை–தூத்துக்குடியிடையே ரூ.13,200 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழிச்சாலையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி வரையிலான புதிய 8 வழி சாலை திட்டத்துக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த திட்டமானது சுமார் ரூ.13,200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை டூ தூத்துக்குடி:
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்துப்பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.
சென்னை–தூத்துக்குடி வரையிலான இந்த புதிய திட்டம் காரணமாக சுமார் 100 கிலோ மீட்டர் பயண தூரம் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல பயண தூரம் சுமார் 600 கிலோ மீட்டராக உள்ளது. புதிய திட்டம் காரணமாக சுமார் 100 கிலோ மீட்டர் பயண தூரம் குறையும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.
சென்னையில் இருந்து விழுப்புரம் வரை இந்த சாலையானது 10 வழி சாலையாக இருக்கும். விழுப்புரத்தில் இருந்து தஞ்சாவூர், திருச்சி வரை 8 வழிச்சாலையாக அமைய உள்ளது. அதேபோல் தஞ்சாவூர், திருச்சியில் இருந்து சிவகங்கை, தூத்துக்குடி வரை 6 வழி சாலையாகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. சென்னையில் இருந்து பண்ருட்டி, விருத்தாசலம், அரியலூர், அதேபோல தஞ்சாவூர், திருச்சி அங்கிருந்து சிவகங்கை, தூத்துக்குடி வரை இந்த புதிய வழித்தடம் அமைய உள்ளது.