ஓ.பி.எஸ். அணிக்கு புதிய நிர்வாகிகள் : நத்தம், கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியனுக்கு முக்கிய பதவிகள்?

ஓ.பி.எஸ். அணிக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியனுக்கு முக்கியப் பதவிகள் கிடைக்கும் எனத் தெரிகிறது.

ஓ.பி.எஸ். அணிக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியனுக்கு முக்கியப் பதவிகள் கிடைக்கும் எனத் தெரிகிறது.
அ.தி.மு.க. அணிகளில் மெஜாரிட்டி நிர்வாகிகள் இன்னமும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியிலேயே இருக்கிறார்கள். ஓ.பி.எஸ். தரப்பு, தொண்டர்கள் மத்தியில் தங்களுக்கு கூடுதல் ஆதரவு இருப்பதாக தெரிவித்து வருகிறது.
மாவட்டம்வாரியாக சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை தரிசித்து வரும் ஓ.பி.எஸ்.ஸுக்கு பிரதான சவால், சில மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்யும் அளவுக்கு நிர்வாகிகளின் ஆதரவு இல்லாததுதான். ‘எடப்பாடி ஆட்சி விரைவில் கவிழும். மொத்த நிர்வாகிகளும் தனது பக்கம் வருவார்கள்’ என்கிற நம்பிக்கையில்தான் தனது அணியில் புதிதாக நிர்வாகிகள் நியமனம் செய்யாமல் காலம் கடத்தினார் ஓ.பி.எஸ்.
ஆனால் டெல்லியிலும் ‘லாபி’ செய்ய ஆரம்பித்துவிட்ட எடப்பாடி அரசுக்கு ஆயுள் சுலபத்தில் முடிவதாக இல்லை. எனவே தனது அணியை துடிப்புடன் நடத்தவேண்டும் என்றால், புதிய நிர்வாகிகளை நியமித்தே ஆகவேண்டும் என்கிற முடிவுக்கு ஓ.பி.எஸ். வந்துவிட்டார்.
ஆனால் அது சாத்தியமா? என்கிற கேள்வி அடுத்தபடியாக எழுந்தது. காரணம், அவைத்தலைவர் பதவியில் மதுசூதனனும், பொருளாளர் பதவியில் ஓ.பி.எஸ்.ஸும் தொடர்ந்து நீடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்தப் பதவிகளில் தொடர்ந்தால்தான், அ.தி.மு.க.வுக்கு உரிமை கோர முடியும். அதேசமயம் அந்தப் பதவிகளில் இருந்துகொண்டு நிர்வாகிகளை எப்படி நியமிப்பது? அ.தி.மு.க. சட்டவிதிகளின்படி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளருக்கே முழு அதிகாரம் என இதே ஓ.பி.எஸ். அணிதான் தேர்தல் ஆணையத்தில் வாதாடி வருகிறது. அதற்கு மாறாக இவர்களே நிர்வாகிகளை நியமித்தால், சசிகலா செய்த நியமனங்களும் தப்பில்லை என்றாகிவிடும்.
இந்தச் சிக்கலை தீர்ப்பதற்காக, தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் புதிய நிர்வாகிகளை நியமிக்க ஓ.பி.எஸ். முடிவெடுத்தார். இது தொடர்பாக ஓ.பி.எஸ். அறிவுறுத்தலின்பேரில் அந்த அணி எம்.பி.யான மைத்ரேயன் அண்மையில் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரிடம் ஒரு மனு கொடுத்துள்ளார்.
அதில், ‘கடந்த மார்ச் 22-ல் இரட்டை இலையை முடக்கிய தேர்தல் ஆணையம், எங்களை அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என அங்கீகரித்தது. கட்சியின் செயல்பாடுகளை மேற்கொள்ள புதிய நிர்வாகிகளை நியமிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி கொடுக்கவேண்டும்’ என கோரியிருக்கிறார் மைத்ரேயன்.
தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கினால், தற்போது கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாத சீனியர்களான நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியன் உள்ளிட்டவர்களுக்கு முக்கியப் பதவி வழங்கப்படும் என தெரிகிறது.
கே.பி.முனுசாமிக்கு தலைமை நிலைய செயலாளர் பதவியும், நத்தம் விஸ்வநாதனுக்கு அமைப்புச் செயலாளர் பதவியும், பி.ஹெச்.பாண்டியனுக்கு ஆட்சிமன்றக் குழுவிலும் இடம் கொடுக்கப்படும் என்கிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இது சாத்தியம்!

×Close
×Close