Advertisment

2 மாதங்களில் அடுத்த சவால்: எப்படி சமாளிக்கும் அதிமுக?

அதிமுக சட்டமன்றத் தோல்வியை சந்தித்த 2 மாதங்களிலேயே 9 மாவட்டங்களின் உள்ளாட்சி தேர்தல் என்ற அடுத்த சவாலை சந்தித்திக்கிறது. ஏற்கெனவே பல சவால்களுடன் அதிமுக இந்த சவாலை எப்படி சமாளிக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

author-image
WebDesk
New Update
next challenge to aiadmk, 9 district local body elctions, அதிமுக, அதிமுகவுக்கு அடுத்த சவால், 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல், aiadmk, ops, eps, tamil nadu politics, dmk, supreme court

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு திணறிவரும் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இந்த சூழலில் தேர்தலை நடத்துவது மாநில அரசுக்கு ஒரு சவலாக இருக்கலாம். அதே நேரத்தில், அதிமுக சட்டமன்றத் தேர்தலை சந்தித்த 2 மாதங்களிலேயே 9 மாவட்டங்களின் உள்ளாட்சி தேர்தல் என்ற அடுத்த சவாலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாடு சில வாரங்களாகத்தான் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது.

இந்த சூழலிலிதான், உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் புதியதாக பிரித்து உருவாக்கப்பட்ட 9 மாவடங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல்கள் மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடினமான பணியாக இருக்கும். ஏனென்றால், மாவட்டங்களின் வார்டுகள், ஒன்றியங்களின் மறுவரையறைகள் முடிக்கப்பட வேண்டும். கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் அதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அரசியல் தளத்தில் இந்த 9 மாவட்டங்களின் உள்ளாட்சி தேர்தல் ஒரு பெரிய சவாலாக இருக்கும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீதம் இருந்த 4 ஆண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்தது என்றாலும், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அக்கட்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் அதிமுகவில் பிரச்னைகள் குறைந்துவிட்டதாகவும் தெரியவில்லை. இப்போது, அதிமுகவின் முதன்மை நேர் எதிரியான திமுக மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது.

அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதே திமுக, அதிமுகவைவிட சற்று கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதோடு, எதிர்க்கட்சியாக இருப்பதால் அதிமுகவினர் தேர்தலில் செலவு செய்வதற்கு யோசிப்பார்கள். அதே நேரத்தில், ஆளும் கட்சியினர் செலவு செய்வதற்கு தயங்கமாட்டார்கள். 9 மாவட்டங்களின் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு இப்படியான ஒரு சாவல் உள்ளது.

அதுமட்டுமில்லாமல், அதிமுகவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான போட்டி அதிமுகவுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. ஓ.பி.எஸ்-ஸும் இ.பி.எஸ்-ஸும் அப்படி தங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்று வெளியில் கூறிக்கொண்டாலும் அதை கட்சி உறுப்பினர்களே ஒப்புக்கொள்ளவில்லை. 9 மாவட்டங்களில் கிராமப்புறங்களில் கடைநிலை பதவிகளுக்கு தேர்தல் இருப்பதால் இருவருக்கும் இடையேயான போட்டி தொண்டர்களிடையே மனச்சோர்வை ஏற்படுத்தும்.

அதிமுகவுக்கு மற்றொரு சவால் சசிகலா தரும் நெருக்கடி ஆகும். சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் பேசிய ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். சசிகலாவுடன் போனில் பேசிய அதிமுக நிர்வாகிகளை அதிமுகவின் இரட்டைத் தலைமை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. சசிகலா வெளியிடும் ஆடியோ அதிமுகவில் எந்த அளவுக்கு தாக்கத்தை செலுத்தியுள்ளது என்று அறியவில்லை. இந்த சூழலில்தான், சசிகலா அதிமுக தொண்டர்களை விரைவில் சந்திப்பதாக தெரிவித்து வருகிறார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மோசமாக செயல்பட்ட வட தமிழ்நாட்டில்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டிய 9 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்கள் வருகின்றன. உதாரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக 7 தொகுதிகளில் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இ.பி.எஸ். விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக மாற்றியவர். கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் கோரிக்கை அந்த மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கை ஆகும். ஆனால், கள்ளக்குறிச்சியில்கூட, அதிமுக 5 இடங்களில் 1 இடத்தை மட்டுமே வென்றது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீட்டை வழங்க இபிஎஸ் அரசாங்கம் உத்தரவிட்டது. வட மாவட்டங்களில் வன்னியர்களின் ஆதரவு தளத்தைக் கொண்ட பாமக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்தது. இருந்தாலும், இந்த வடக்கு மாவட்டங்களில் இருந்துதான் திமுகவிற்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த உதவியது.

அதிமுகவுக்கும் பாமகவுக்கும் இடையில் தற்போது உறவும் சரியாக இல்லை. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸைத் விமர்சித்தித்தற்காக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தியை பதவி நீக்கம் செய்தது. இதன் மூலம் அதிமுக சில சேதங்களைத் தடுக்க முயற்சித்தது. ஆனால், திமுக அரசின் சில அறிவிப்புகளை பாமக வரவேற்று வருகிறது.

உள்ளாட்சி தேர்தலில் பாமக, அதிமுக கூட்டணியில் இருக்குமா என்பது சந்தேகம்தான் என்கின்றனர் அதிமுக வட்டாரங்கள்.

சினிமா நடிகை சாந்தினி அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் அளித்ததை அடுத்து, மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, மு.க.​​ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், திமுக ஆட்சிக்கு வந்தால், ஊழல் கறைபடித்த அதிமுக அமைச்சர்களை சிறைக்கு அனுப்புவதாக கூறினார்கள்.

இப்படி, அதிமுக சட்டமன்றத் தோல்வியை சந்தித்த 2 மாதங்களிலேயே 9 மாவட்டங்களின் உள்ளாட்சி தேர்தல் என்ற அடுத்த சவாலை சந்தித்திக்கிறது. ஏற்கெனவே பல சவால்களுடன் அதிமுக இந்த சவாலை எப்படி சமாளிக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அதிமுக 9 மாவட்டங்களின் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment