”சாம்பல் கழிவுகளை அகற்றாவிட்டால் வடசென்னை அனல்மின் நிலையத்தை மூட உத்தரவிடுவோம்”:பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

வடசென்னை அனல்மின் நிலையங்களால் கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாயில் கலக்கும் சாம்பல் கழிவுகளை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும்

வடசென்னை அனல்மின் நிலையத்திலிருந்து கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாயில் கலக்கும் சாம்பல் கழிவுகளை அகற்றாவிட்டால் அந்த அனல்மின் நிலையத்தின் இரண்டு அலகுகளையும் மூட உத்தரவிட நேரிடும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு கடுமையாக எச்சரித்துள்ளது.

வட சென்னை அனல்மின் நிலையத்தில் தலா 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் மூலம் நாள்தோறும் ஆயிரத்து 200 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த அனல்மின் நிலையத்தில் வெளியேறும் அதிகப்படியான சாம்பல் கழிவுகளால் அருகிலுள்ள பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலையாறு பாதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், அங்குள்ள அரிய வகை அலையாத்தி காடுகள், தாவரங்கள், உயிரினங்கள் அழிந்துவருவதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனு செவ்வாய் கிழமை நீதிபதி ஜோதிமணி தலைமையிலாம அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், வடசென்னை அனல்மின் நிலையங்களில் வெளியேறும் சாம்பல் கழிவுகளால் கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய் பாதிப்பிற்குள்ளாவதை வீடியோ பதிவுகளாக சமர்ப்பித்தார்.

இதன்பிறகு, தமிழக அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகிய தரப்பினருக்கு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு:

1.வடசென்னை அனல்மின் நிலையங்களால் கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாயில் கலக்கும் சாம்பல் கழிவுகளை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும்.

2.அவ்வாறு கழிவுகளை அகற்றாவிட்டால் வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரண்டு அலகுகளையும் மூட உத்தரவிட நேரிடும் எனவும் தீர்ப்பாயம் கடும் எச்சரிக்கை.

3.சாம்பல் கழிவுகளை கொண்டு செல்லும் குழாய்களில் ஏற்பட்ட துவாரங்களை சீர் செய்ய வேண்டும். அந்த குழாய்கள் சுமார் 25 ஆண்டுகள் பழமையானதால், அவற்றை எவ்வாறு சீர்செய்வது என்பது குறித்த செயல் திட்டம், அவற்றை சீர்செய்ய செலவாகும் தொகை குறித்தும் விரிவான அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

4.மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் இதுதொடர்பாக ஏதேனும் தவறு செய்தால் நீர் மற்றும் காற்று மாசுபாட்டு தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

5.இப்பணிகளை ஆய்வு செய்ய மூத்த வழக்கறிஞர் லஷ்மி நரசிம்மன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தினசரி அப்பணிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

6.சாம்பல் கழிவுகளால் பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலையாறுக்கு ஏற்பட்ட சூழல் கேடுகளை சீர்செய்து அவற்றை மீட்டெடுக்க தமிழக அரசு வல்லுநர்கள் குழுவை ஏற்படுத்த வேண்டும். அந்த குழுவில் சூழலியல் வல்லுநர்கள், நீரியல் வல்லுநர்கள், மண் ஆராய்ச்சியாளர்கள் இருக்க வேண்டும்.

வடசென்னை அனல்மின் நிலையத்தால் நீர்நிலைகளுக்கு ஏற்பட்டுள்ள அழிவை மீட்டெடுப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள இந்த உத்தரவுகள் முக்கியமான ஒன்றாக சூழலியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

×Close
×Close