Advertisment

நேற்று என்.ஐ.ஏ; இன்று இ.டி: திருச்சி சிறையை முற்றுகையிட்ட மத்திய ஏஜென்சிகள்

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்த பரபரப்பு அடங்குமுன் இன்று (ஜூலை 21) மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய சிறை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருவது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
நேற்று என்.ஐ.ஏ; இன்று இ.டி: திருச்சி சிறையை முற்றுகையிட்ட மத்திய ஏஜென்சிகள்

சென்னை, திருச்சி என 11 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்திய நிலையில் இன்று மத்திய அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவது மத்திய சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. குறித்த விபரம் வருமாறு:

Advertisment

குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவரைத் தங்கவைக்க, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில், இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 140 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

publive-image

இந்நிலையில், என்ஐஏ டிஐஜி காளிராஜ் மகேஷ்குமார் தலைமையில், எஸ்.பி. தர்மராஜ் உள்ளிட்ட 50 அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமுக்கு வந்தனர்.

டெல்லியில் பதிவான ஒரு வழக்கு தொடர்பாக, சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழரான குணசேகரன் (எ) பிரேம்குமார் உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டுமெனக் கூறினர்.

இதனைத்தொடர்ந்து, மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட கமாண்டோ வீரர்களுடன் சிறப்பு முகாமுக்குள் சென்ற என்ஐஏ அதிகாரிகள், அங்கு இலங்கைத் தமிழர்களான குணசேகரன், கென்னடி பெர்ணாண்டோ, பூங்கொடி கண்ணன், திலீபன், முகமது ரிகாஷ், முகமது அஸ்மின், நிஷாந்தன், சிங்களர்களான தனுகாரோஷன், பண்டாரா, கோட்டக் காமினி, வெள்ள சுரங்கா, லடியா சந்திர சேனா ஆகிய 12 பேரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருச்சி ஆட்சியர் மா.பிரதீப்குமாருடன், என்ஐஏ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே, திருநெல்வேலியைச் சேர்ந்த விக்னேஷ், திருச்சி பொன்மலைப்பட்டி அந்தோனியார்கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, சிறப்பு முகாமில் உள்ள சில இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில், அவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

publive-image

தமிழகம் முழுவதும் நேற்று 11 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள், 2 பென்டிரைவ்கள், ஒரு ஹார்ட் டிஸ்க், 2 லேப்டாப், 8 வைஃபை மோடம், ரொக்கப் பரிவர்த்தனை ஆவணங்கள், ஒரு இலங்கை பாஸ்போர்ட் மற்றும் சில தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக என்ஐஏ நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் வகையில், பாகிஸ்தானிலிருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவது தொடர்பாக என்ஐஏ கடந்த ஜூலை 8-ம் தேதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

இதில், இலங்கைத் தமிழரான குணசேகரன், புஷ்பராஜா (எ) பூக்குட்டி கண்ணன், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளரான ஹாஜி சலீம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததால், இது தொடர்பாக தமிழகத்தில் சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு, திருச்சி உட்பட 22 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியுள்ளது.

இந்த சோதனையில், டிஜிட்டல் சாதனங்கள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

publive-image

இந்த நிலையில் இன்று நண்பகல் அமலாக்கத்துறை இணை இயக்குனர் அஜய்கவுர் தலைமையில் ஐந்து அதிகாரிகள் மத்திய சிறை வளாக சிறப்பு முகாமில் உள்ள கைதிகளிடம் ஆய்வு மேற்கொண்டு அவர்களின் பண பரிவர்த்தனை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

நேற்று என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்த பரபரப்பு அடங்குமுன் இன்று மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய சிறை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருவது திருச்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Enforcement Directorate Tiruchirappalli Tiruchi District Nia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment