Advertisment

என்.ஐ.ஏ., முத்தலாக் தடை சட்டம்; வேலூர் தேர்தலில் எதிரொலிக்குமா?..

மத்திய அரசு கொண்டுவந்த என்.ஐ.ஏ திருத்தச் சட்டம், முத்தலாக் தடை சட்டம் வேலூர் தொகுதியில் எதிரொலிக்கும் என்றே தெரியவருகிறது.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
NIA Amendment Bill, Triple Talaq Bill, Vellore Election, என்ஐஏ திருத்த மசோதா, முத்தலாக் மசோதா, வேலூர் தேர்தல், Whom Muslim votes, முஸ்லிம் வாக்குகள் யாருக்கு

NIA Amendment Bill, Triple Talaq Bill, Vellore Election, என்ஐஏ திருத்த மசோதா, முத்தலாக் மசோதா, வேலூர் தேர்தல், Whom Muslim votes, முஸ்லிம் வாக்குகள் யாருக்கு

NIA bill, Triple Talaq Bill can impact at Vellore Election: மத்திய அரசு, தேசிய புலனாய்வு முகமை என்கிற என்.ஐ.ஏ. திருத்த மசோதா மற்றும் முத்தலாக தடைச் சட்ட மசோதா ஆகிய இரண்டு முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டங்கள் இரண்டும் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கருதப்படுகிறது.

Advertisment

என்.ஐ.ஏ. திருத்த சட்டப்படி, ஆள்கடத்தல், கள்ளநோட்டு புழக்கத்தில் விடுதல் உள்ளிட்ட குற்றங்களும் என்.ஐ.ஏ. சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். பெரும்பாலும் இந்த சட்டத்தில் முஸ்லிம்கள் மட்டுமே கைது செய்யப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதே போல, முத்தலாக் தடை சட்டம் முஸ்லிம்களின் ஜமாத் அதிகாரத்தை பறிக்கும் விதமாக இருப்பதாகவும், இது முஸ்லிம் சமூகத்தில் சிக்கல்களை உருவாக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்த இரண்டு சட்டங்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது, என்.ஐ.ஏ சட்டத்தை தமிழக கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே ஆதரித்தனர். அதே போல, முத்தலாக் தடை சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்க அதிமுக மாநிலங்களவையில் எதிர்த்தும் மக்களவையில் ஆதரித்தும் செயல்பட்டது.

இந்த நிலையில்தான் பொதுத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வேலூர் தொகுதியில் 3 லட்சத்துக்கும் மேல் முஸ்லிம்கள் வாக்கு உள்ளது. அதனால், முஸ்லிம்களுக்கு எதிரானதாக கருதப்படுகிற சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிகள் குறித்து அவர்களுக்கு ஒரு கருத்து ஏற்படவே செய்யும். அது வேலூர் தேர்தலில் எதிரொலிக்குமா என்பது பற்றி விசாரித்தோம்.

இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஐ.இ தமிழுக்கு பேசுகையில், “வேலூர் தொகுதியில் முஸ்லிம் மக்களின் ஓட்டு மூன்றரை லட்சம் அளவில் இருப்பதால் அவர்கள்தான் வெற்றியைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். அதனால், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில், என்.ஐ.ஏ தமிழகத்தில் முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து செயல்படுகிறது. இந்த சட்டத்துக்கு திமுக காலையில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு மாலையில் நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்து வாக்களித்து. இது எங்களைப் போன்றவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அதே போல, முத்தலாக் தடை சட்டத்தை அதிமுக கடந்த ஓராண்டாக எதிர்த்து வந்த நிலையில், அதிமுகவின் ரவிந்திரநாத் மக்களவையில் ஆதரவு தெரிவித்தார். மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. அதிமுகவின் இந்த இரட்டை வேடமும் அதிர்ச்சி அளித்தது. முத்தலாக் சட்டத்துக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்காது. எதிர்க்காத இந்த கட்சிகளுக்கு கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே போல, முஸ்லிம்களுக்கு எதிரான என்.ஐ.ஏ, முத்தலாக் தடை ஆகிய இந்த இரண்டு சட்டங்களில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் இரட்டைவேடம் முஸ்லிம் மக்களிடையே ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியிருக்கிறது. இவர்களின் இந்த இரட்டை வேடம் ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல. அதனால், வேலூர் தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவில் வாக்குகளைக் கொண்ட முஸ்லிம் மக்களின் வாக்குகள் இந்த முறை சிதறவே வாய்ப்புள்ளது.” என்று கூறினார்.

இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த அன்வர் ராஜா பேசுகையில், “பொதுத் தேர்தலில் திமுக மத்திய அரசு அதிகாரத்தில் வரக்கூடிய பல வாக்குறுதிகளை மாநிலக் கட்சியான இவர்கள் நிறைவேற்றுவதாகக் கூறி வெற்றி பெற்றுவிட்டனர். திமுக சட்டமன்ற இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால், அது நடக்கவில்லை. மத்தியிலும் காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை. அதனால், அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

அதிமுகவைப் பொருத்தவரை ஏற்கெனவே தடா, பொடா போன்ற பயங்கரவாத தடுப்பு சட்டங்களை ஆதரிப்பதில் உறுதியாக இருந்துள்ளது. அந்த வகையில் என்.ஐ.ஏ சட்டத்தை அதிமுக ஆதரித்தது. இந்த சட்டம் முஸ்லிம்கள் மீது பயன்படுத்தப்படாமல் அதிமுக அரசு  முஸ்லிம்களை பாதுகாக்கும். முத்தலாக் தடை சட்டத்தைப் பொருத்தவரை அதிமுக நாடாளுமன்றத்தில் இரண்டு முறை எதிர்த்து இருக்கிறது. வெளிநடப்பும் செய்திருக்கிறது. மாநிலங்களவையில் நான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். முத்தலாக் எதிர்ப்பு என்பதுதான் கட்சியின் நிலைப்பாடு. மக்களவையில் ரவிந்திரநாத் தனிப்பட்ட முறையில் ஆதரித்திருக்கிறார். அவருடைய கருத்து கட்சி நிலைப்பாடு இல்லை.

அது மட்டுமில்லாமல், இடைத்தேர்தலுக்குப் பிறகு, அதிமுக அரசு வெற்றி பெற்றுள்ளது. பிரிந்து வெளியே சென்றவர்களும் மீண்டும் கட்சிக்குள் வந்திருக்கிறார்கள். இதன் மூலம், கட்சி புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது. அதனால், வேலூர் மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் மக்களுடைய வாக்கு அதிமுகவுக்கு ஆதரவாகவே இருக்கும்” என்று கூறினார்.

இது குறித்து திமுகவின் மாநில கொள்கைப் பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன் கூறுகையில், “வேலூர் தொகுதியில் முஸ்லிம்களின் வாக்கு மூன்றரை லட்சம் அளவில் உள்ளது. முதலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் அதிமுக வேட்பாளர் இல்லை. பாஜக வேட்பாளர். ஏனென்றால், அவர் பாஜக தரப்பில் சீட் வாங்கி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அதனால், அவருக்கு முஸ்லிம் இளைஞர்கள் வாக்களிக்க மாட்டார்கள். பிறகு, முத்தலாக் தடை சட்டம் குறித்து முஸ்லிம்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். இந்த சட்டத்தை கொண்டுவந்த பாஜகவுக்கும் அதன் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கும் வாக்களிக்கமாட்டார்கள். அதனால், முஸ்லிம்கள் 99 சதவீதம் திமுகவுக்கே வாக்களிப்பார்கள். இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.” என்று கூறினார்.

தமிமுன் அன்சாரி, அன்வர் ராஜா, குடியாத்தம் குமரன் ஆகிய இவர்களின் கருத்தை வைத்து பார்க்கும்போது, மத்திய அரசு கொண்டுவந்த என்.ஐ.ஏ திருத்தச் சட்டம், முத்தலாக் தடை சட்டம் வேலூர் தொகுதியில் எதிரொலிக்கும் என்றே தெரியவருகிறது. ஆனால், அது எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்பது தேர்தல் அன்றுதான் தெரியும்?

Dmk Aiadmk Vellore Mp Election Thamimun Ansari Triple Talaq
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment