Advertisment

கருவானது முதல் கரை கடந்து வலுவிழந்தது வரை: நிவர் புயல் ஹைலைட்ஸ்

Nivar Cyclone Status Live : இரவு 11.30 மணியில் தொடங்கி 26ஆம் தேதி அதிகாலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கருவானது முதல் கரை கடந்து வலுவிழந்தது வரை: நிவர் புயல் ஹைலைட்ஸ்

Nivar Cyclone Status Live: தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல் கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழையும் கொட்டி தீர்த்தது.

Advertisment

தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவெடுத்தது. இந்தப் புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டது. நிவர் என்றால், வருமுன் காப்பது என அர்த்தம். இந்தப் புயல் காரைக்காலுக்கும் தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கும் இடையே 25 ஆம் தேதி இரவு 11.30 மணியில் தொடங்கி 26ஆம் தேதி அதிகாலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது.

நிவர் புயல் தொடர்பான செய்திகளை ஆங்கிலத்தில் படிப்பதற்கு: Nivar Cyclone

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தமிழகத்தின் கடற்கரையோர கிழக்கு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Nivar Cyclone Status Live: வானிலை அறிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளுர் இடையே 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

நிவர் புயல் முன் எச்சரிக்கை, நிவர் புயல் பாதை, நிவர் புயலால் மழை பெய்யும் இடங்கள் உள்ளிட்ட லேட்டஸ்ட் தகவல்களை இந்த லைவ் ப்ளாக்கில் பார்க்கலாம்.

 

 

Live Blog

Nivar Cyclone Status : நிவர் புயல் பாதை, நிவர் புயலால் மழை பெய்யும் இடங்கள் உள்ளிட்ட லேட்டஸ்ட் தகவல்களை இந்த லைவ் ப்ளாக்கில் பார்க்கலாம்.



























Highlights

    22:21 (IST)26 Nov 2020

    தெற்கு வங்கக் கடலில் வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

    தெற்கு வங்கக் கடலில் வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து மேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்தது.

    22:18 (IST)26 Nov 2020

    நிவர் புயலால் சென்னையில் 387 மரங்கள் சாய்ந்தது - அமைச்சர் வேலுமணி

    நிவர் புயலால் சென்னையில் 387 மரங்கள் சாய்ந்துள்ளதாகவும், அதில் 350 மரங்கள் பத்திரமாக அகற்றப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.  

    22:16 (IST)26 Nov 2020

    துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு - ஒ . பன்னீர்செல்வம்

    நிவர்புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர், குப்பைகளை விரைந்து அகற்றி கிருமிநாசினி தெளிக்கவும், மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கவும் துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம்    அறிவுறுத்தினார்.  

    21:10 (IST)26 Nov 2020

    ரூ.400 கோடி அளவிற்கு சேதம் - முதல்வர் நாராயணசாமி

    நிவர் புயலால் புதுச்சேரியில் ரூ.400 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.  

    20:18 (IST)26 Nov 2020

    மோர்தானா அணையின் இரண்டு கால்வாய்களிலும் நாளை தண்ணீர் திறந்து விடப்படும்

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணையின் இரண்டு கால்வாய்களிலும் நாளை காலை முதல் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

    19:34 (IST)26 Nov 2020

    பச்சையம்மன் சாலை மக்களுக்கு உணவு-பால்-பிரெட் வழங்கினோம் - உதயநிதி ஸ்டாலின்

    சென்னை(மே) மாவட்டம்-ஆயிரம் விளக்கு(கி) பகுதி-மழையால் பாதித்த பச்சையம்மன் சாலை மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் உணவு-பால்-பிரெட் வழங்கினார் .

    19:29 (IST)26 Nov 2020

    நிவர் புயல்: விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மரக்காணம் பகுதியிலுள்ள மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ரவிக்குமார் எம்.பி

    கேட்டுக்கொண்டுள்ளார்.

    18:51 (IST)26 Nov 2020

    கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

    பாலாற்றில் 10,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தினார்.   

    18:48 (IST)26 Nov 2020

    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - கமல்ஹாசன்

    சென்னை சைதாபேட்டையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களின் குறைகளை கமல்ஹாசன் கேட்டறிந்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

    17:47 (IST)26 Nov 2020

    நிவர் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை - முதலமைச்சர் பழனிசாமி

    முதல்வர் பழனிசாமி, “நிவர் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிவர் புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருந்தோம். மாவட்ட ஆட்சியர்களுக்கும் முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது. கடலூரில் சேதம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சுமார் 2.3 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பயிர்க் காப்பீடு செய்திருந்தால் இழப்பீடும் பெற்றுத்தரப்படும்.” என்று கூறினார்.

    17:43 (IST)26 Nov 2020

    சைதாப்பேட்டையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரணப் பொருட்கள் வழங்கினார் ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை சைதாப்பேட்டையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

    17:05 (IST)26 Nov 2020

    தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வரும் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய தாழ்வு நிலையானது, தென்தமிழகத்திற்கு மேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    16:42 (IST)26 Nov 2020

    ஊத்துக்கோட்டை தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது

    ஆரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. போக்குவரத்து தடைப்பட்ட காரணத்தினால் 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.   

    16:33 (IST)26 Nov 2020

    தேங்கியுள்ள மழை நீர் வடிந்து விடும் - மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி

    செம்பரப்பாக்கம் ஏரியில் வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டால் வராதராஜபுரம் பகுதியை ஒட்டியுள்ள ராயப்பா நகர் மற்றும் மகா லக்ஷ்மி நகர் ஆகிய இடங்களில் தேங்கியுள்ள மழை நீர் வடிந்து விடும் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்தார்.

    16:27 (IST)26 Nov 2020

    கடலோரக் காவல்படையின் 15 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன

    புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீட்புப் பணிகளில் ஈடுபட இந்திய கடலோரக் காவல்படையின் 15 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்தது.

    இதேபோல் மீட்புப் பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 25 குழுக்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரபிரதேச மாநிலங்களின் கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதில் 15 குழுக்கள் தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    15:19 (IST)26 Nov 2020

    விமான சேவைகள் இன்று மீண்டும் தொடங்கியது.

    சென்னை விமான நிலையத்தில் நிவர் புயல் காரணமாக நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் இன்று மீண்டும் தொடங்கியது.

    15:18 (IST)26 Nov 2020

    பெருமளவு சேதங்கள் தடுக்கப்பட்டது - வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்

    சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, பெருமளவு சேதங்கள் தடுக்கப்பட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    15:17 (IST)26 Nov 2020

    கடலூரில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி

    கடலூரில் நிவர் புயலால் நீர் சூழ்ந்த பகுதிகளின் மீட்பு பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.

    15:16 (IST)26 Nov 2020

    துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்

    சென்னையில் நிவர் புயலால் நீர் சூழ்ந்த பகுதிகளின் மீட்பு பணிகளை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இன்று அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.

    14:18 (IST)26 Nov 2020

    மு.க.ஸ்டாலின் பேச்சு

    "2015 பெரு வெள்ளத்திலிருந்து அதிமுக அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். நிவர் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000 ரொக்கமாக வழங்க வேண்டும். வேளாண் விளைபொருள் இழப்பீட்டுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக அரசே வீடு கட்டித் தர வேண்டும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    14:10 (IST)26 Nov 2020

    தெற்கு ரயில்வே அறிவிப்பு

    சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருவுக்கும், ஆலப்புழாவுக்கும் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

    13:37 (IST)26 Nov 2020

    மெரினாவில் கருப்பு நிற கடலலை

    நிவர் புயல் தாக்கம் காரணமாக சென்னையில் மெரினா பட்டினம்பாக்கத்தில் கருப்பு நிறத்தில் கடல் அலைகள். மழை, வெள்ளத்தால் கடலில் அதிக அளவு கழிவுப் பொருட்கள் கலந்ததால் அலைகள் கருப்பு நிறமாக காட்சி அளிக்கின்றன. 

    13:08 (IST)26 Nov 2020

    வலுவிழந்தது நிவர் புயல்

    கரையை கடந்த நிவர் தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழந்தது. 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் தாழ்வு மண்டலம் என மேலும் வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    12:51 (IST)26 Nov 2020

    விரைவில் நிவாரணம் அறிவிப்பு

    தமிழகம் முழுவதும் புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியது, விரைவில் நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

    12:46 (IST)26 Nov 2020

    சென்னையில் 23 செ.மீ மழை

    சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

    12:20 (IST)26 Nov 2020

    செம்பரம்பாக்கம் நீர் திறப்பு குறைப்பு

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியில் இருந்து விநாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

    11:39 (IST)26 Nov 2020

    மெட்ரோ ரயில் சேவை!

    நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் நேற்ரு மாலை நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு, 

    11:38 (IST)26 Nov 2020

    ஓபிஎஸ் நேரில் ஆய்வு!

    நிவர் புயல் பாதிப்புகள் குறித்து சென்னை தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். ஓபிஎஸ் உடன் அமைச்சர்களும் உடன் இருந்தனர். 

    11:37 (IST)26 Nov 2020

    7 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை!

    இன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும் .நிவர் புயல் கரையை கடந்த நிலையில் அரசு உத்தரவு .  முன்னெச்சரிக்கையாக கடந்த 24ம் தேதி நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் மீண்டும் இயக்கம். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை என 7 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்

    11:18 (IST)26 Nov 2020

    அமித்ஷா விசாரிப்பு!

    நிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார் . புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும், புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் .  தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தார் அமித்ஷா.

    10:26 (IST)26 Nov 2020

    மழைநீர் வடிய வடிய மின் இணைப்பு!

    சென்னையில் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்ட 390 இடங்களில் மழைநீர் வடிய வடிய மின் இணைப்பு வழங்கப்படும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

    10:25 (IST)26 Nov 2020

    போக்குவரத்துறை தகவல்!

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என போக்குவரத்துறை தகவல்

    10:24 (IST)26 Nov 2020

    பெரிய பாதிப்புகள் இல்லை!

    நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெரிய பாதிப்புகள் இல்லை என்று  மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 

    10:20 (IST)26 Nov 2020

    கடலூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி!

    நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய பிற்பகல் 2.30க்கு கடலூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி. முதல்வருடன் அமைச்சர்களும் உடன் செல்கின்றனர். 

    10:18 (IST)26 Nov 2020

    ஸ்டாலின் நேரில் ஆய்வு!

    சென்னை சைதாப்பேட்டையில் மழை பாதிப்புகளை  ஆய்வு செய்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

    09:07 (IST)26 Nov 2020

    இருளில் சென்னை!

    சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர், எம்.கி.ஆர் நகர், வளசரவாக்கம், ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, புரசைவாக்கம், கிண்டி, மடிப்பாகம் என நகரின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது 

    08:28 (IST)26 Nov 2020

    மழை அளவு வெளியீடு!

    நவ.25ம் தேதி காலை 8.30 மணி முதல் இன்று (நவ.26) அதிகாலை 3.30 மணி வரை பதிவாகியுள்ள மழையின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

    புதுச்சேரி - 26.செ.மீ கடலூர் - 25 செ.மீ சென்னை - 8 செ.மீ காரைக்கால் - 9 செ.மீ நாகப்பட்டினம் - 6 செ.மீ

    07:50 (IST)26 Nov 2020

    நிவர் புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம்!

    புயல் சேத விவரங்களை முதல்வர் பழனிசாமி பின்பு வெளியிடுவார். நிவர் புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

    07:47 (IST)26 Nov 2020

    மீண்டும் விமான சேவை!

    சென்னையில் விமான சேவை காலை 9 மணி முதல் துவங்கும் சென்னை விமான நிலையம் செயல்பட தொடங்கியது காலை 6 மணி முதல் டெல்லி, அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்தனர்

    07:35 (IST)26 Nov 2020

    செம்பரம்பாக்கம் ஏரி!

    செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 5,016 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 9,300 அடியில் இருந்து 5,016 கன அடியாக குறைப்பு . 

    07:28 (IST)26 Nov 2020

    தமிழகம், புதுச்சேரியில் மழை!

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.  மரக்காணம், ஆரணி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது

    06:01 (IST)26 Nov 2020

    வலுவிழந்து கரையைக் கடந்த புயல், 120 கிமீ வேகத்தில் காற்று

    அதி தீவிர புயலான நிவர் கரையைக் கடக்கும்போது தீவிர புயலாக வலுவிழந்தது. இதனால் காற்றின் வேகம் எதிர்பார்த்தைவிட 110 முதல் 120 கிமீ அளவில் இருந்தது. எனினும் முழுமையான சேத விவரங்கள் காலையில் தெரியவரும்.

    சேத விவரங்கள் குறித்தும், நிவாரணம் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

    05:25 (IST)26 Nov 2020

    மரக்காணம் அருகே கரையை கடந்தது நிவர்

    நிவர் புயல் முழுமையாக கரையைக் கடந்ததாக வியாழக்கிழமை அதிகாலையில் வருவாய் மற்றும் பேரிடர் தடுப்புத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டார். நிவர் அதி தீவிர புயல், தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடந்ததாக அவர் தெரிவித்தார்.

    புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை முழுவதுமாக புயல் கரையைக் கடந்தது.

    05:19 (IST)26 Nov 2020

    கரையைக் கடந்தது நிவர்

    தமிழகத்தை மிரட்டிய நிவர் புயல், 25 ஆம் தேதி (புதன்கிழமை) இரவு 11.30 மணியில் தொடங்கி 26ஆம் தேதி (வியாழக் கிழமை) அதிகாலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது. அப்போது பலத்த மழை கொட்டியது. காற்று பலமாக வீசியது.

    23:46 (IST)25 Nov 2020

    நிவர் புயலின் மையப் பகுதி கரையை நெருங்குகிறது

    நிவர் புயல் புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்துகொண்டிருக்கிறது. நிவர் புயலின் மையப்பகுடி கரையை நெருங்கி வருகிறது. புயல் முழுவதுமாக கரையைக் கடக்க அதிகாலை 3 மணி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, கடற்கரையில் கன மழை பெய்து வருகிறது.

    23:27 (IST)25 Nov 2020

    நிவர் புயல் 15 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கிறது

    புதுச்சேரி - மரக்காணம் இடையே நிவர் புயல் 15 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கிறது. புயல் முழுமையாக கரையைக் கடக்க அதிகாலை 3 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதுடன் கனமழை பெய்து வருகிறது.

    23:21 (IST)25 Nov 2020

    நிவர் கரையைக் கடக்கத் தொடங்கியது; கனமழை எச்சரிக்கை

    சென்னை பெரம்பர்லூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை தொடரும்.ன்திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இடியுடன் மிதமான மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மனி நேரத்தில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, விழுபுரம், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நிவர் புயல் கரையைக் கடப்பதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    23:10 (IST)25 Nov 2020

    நிவர் புயல் புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது

    நிவர் புயலின் வெளிச்சுவர் புதுச்சேரி - மரக்காணம் இடையே தற்போது கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. முழுமையாக புயல் கரையைக் கடப்பதற்கு அதிகாலை 3 மணி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    23:01 (IST)25 Nov 2020

    நிவர் அதி தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது

    புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் அதி தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது.புயல் முழுவதுமாக கரையைக் கடப்பதற்கு அதிகாலை 3 மணி ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    22:59 (IST)25 Nov 2020

    புதுச்சேரி, கடலூரில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை

    நிவர் புயலின் வெளிச்சுவர் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளதால் புதுச்சேரி, கடலூரில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    22:55 (IST)25 Nov 2020

    புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கியது

    புதுச்சேரிக்கு அருகே நிவர் புயலின் வெளிச்சுவர் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. நிவர் புயல் முழுமையாக கரையைக் கடக்க அதிகாலை 3 மணி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே நிவர் புயல் கரையைக் கடப்பதால் புதுச்சேரி, கடலூரில் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    22:50 (IST)25 Nov 2020

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 9,000 அடியாக அதிகரிப்பு

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 9000 கன அடியாக உயர்வு. முன்னர் 7000 கன அடி திறக்கப்பட்ட சூழலில், தற்போது 9000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    22:48 (IST)25 Nov 2020

    2 நாட்களுக்கு கனமழை தொடரும்

    நிவர் புயல் கரையைக் கடந்தாலும் நாலை முதல் நாளை மறுநாள் வரை 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    22:39 (IST)25 Nov 2020

    நிவர் புயல் இன்னும் சற்று நேரத்தில் கரையை கடக்க தொடங்கும்

    நிவர் புயல் அடுத்த ஒரு மணி நேரத்தில் கரையைக் கடக்கும். நிவர் புயல் தற்போது கடல் மற்றும் நிலப்பரப்பில் மையம் கொண்டுள்ளது. புயல் முழுமையாக கரையைக் கடக்க அதிகாலை 3 மணிக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சதிரன் தகவல் தெரிவித்துள்ளார்.

    22:01 (IST)25 Nov 2020

    நிவர் அதிதீவிர புயல் இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையை கடக்கத் துவங்கும்

    புதுச்சேரியிலிருந்து தென்கிழக்கே 55 கி.மீ தொலைவில் நிவர் புயல் உள்ளது. இந்த நிவர் அதிதீவிர புயல் இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையை கடக்கத் துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    21:59 (IST)25 Nov 2020

    சென்னையில் நாளை காலை முதல் மெட்ரோ ரயில்  சேவை இயங்கும்
     
    “சென்னையில் நாளை மெட்ரோ ரயில் சேவை இயங்கும்; காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு ரயில் இயக்கப்படும்!” என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    21:58 (IST)25 Nov 2020

    முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் கேள்வி

    விசிக தலைவர் திருமாவளவன், “புயல் - மழை பருவ காலத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகத் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு ஏற்கெனவே தமிழக அரசிடம் அளித்த அறிக்கையைத் தமிழக அரசு செயல்படுத்தாதது ஏன் என்பதை தமிழக முதல்வர் விளக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

    21:22 (IST)25 Nov 2020

    டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு

    நிவர் புயல் காரணமாக டி.என்.பி.எஸ்.சி டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பணியிடங்களுக்கான மூன்றாம் கட்டக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    21:17 (IST)25 Nov 2020

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு; முடிச்சூர் பகுதிக்கு வெள்ள அபாயம்

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் 7,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வர் ரவிக்குமார் அறிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் அதிக அளவில் திறக்கப்படுவதால் முடிச்சூர் பகுதிக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

    21:06 (IST)25 Nov 2020

    தயவு செய்து மக்கள் வெளியே செல்லாதீர்கள் - குஷ்பு வேண்டுகோள் வீடியோ

    நிவர் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால், தயவு செய்து மக்கள் வெளியே செல்லாதீர்கள் என்று அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    21:03 (IST)25 Nov 2020

    நிவர் புயல் காரணமாக காற்று பலமாக வீசுவதால் 286 செல்போன் கோபுரங்கள் பாதிப்பு

    வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: நிவர் புயல் காரணமாக காற்று பலமாக வீசுவதால் 286 செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    21:02 (IST)25 Nov 2020

    சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 20 அடியில் பள்ளம்

    சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே மெட்ரோ பணிகள் நடந்த இடத்தில் திடீரென 20 அடியில் பள்ளம் விழுந்தது. பள்ளத்தை கிரேன் மூலம் சரி செய்யும் பணிகள் திவிரமாக நடந்து வருகிறது.

    20:27 (IST)25 Nov 2020

    அடையாறு கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதனால், அடையாறு கரையோரப் பகுதிகளான ராமாபுரம், எம்.ஜி.ஆர். நகர், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    20:25 (IST)25 Nov 2020

    அடையாறில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அடையாறு கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    20:22 (IST)25 Nov 2020

    சென்னைக்குள் வெளி மாவட்ட மக்கள் இரவு 10 மணிக்கு மேல் தடை

    சென்னைக்குள் வெளி மாவட்ட மக்கள் 10 மணிக்கு மேல் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    20:16 (IST)25 Nov 2020

    புதுச்சேரியில் நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை - ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

    புதுச்சேரியில் நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

    19:52 (IST)25 Nov 2020

    நிவர் புயல் மரக்காணம் அருகே ஆலம்பரை கோட்டை பகுதியில் கரையைக் கடக்கும்

    மரக்காணம் செய்யூர் இடையே ஆலம்பரை கோட்டை பகுதியில் நிவர் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை நிவர் புயல் 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், 12 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின் கண் பகுதி இரவு 11 மணிக்கு கரையைத் தொடும் என்றும் புயல் கரையைக் கடக்க அதிகாலை 3 மணி ஆகும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    19:28 (IST)25 Nov 2020

    நிவர் புயல் அதிகாலை 2 மணிக்கு கரையை கடக்கும் - தேசிய மீட்பு படை தலைவர் தகவல்

    நிவர் புயல் நாளை அதிகாலை 2 மணிக்கு கரையை கடக்கும் என்று தேசிய மீட்பு படை தலைவர் பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.

    18:52 (IST)25 Nov 2020

    நிவர் புயலால் நெட் தேர்வு ஒத்திவைப்பு

    நிவர் புயல் காரணமாக ந்நாளை நடைபெறவிருந்த NET தேர்வு தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு தேதி http://nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    18:50 (IST)25 Nov 2020

    சென்னையில் 40 இடங்களில் விழுந்த மரங்கள்; அப்புறப்படுத்திய தீயணைப்பு துறை

    நிவர் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்று மழையால் 40 இடங்களில் மரங்கள் விழுந்தன. சாலையில் கீழே சாய்ந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    18:45 (IST)25 Nov 2020

    வேளச்சேரி வெள்ளக் காடானது; கார்களை மேம்பாலத்தில் நிறுத்திய உரிமையாளர்கள்

    சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், சென்னையில் வேளச்சேரி வெள்ளக்காடானது. வெள்ளத்திற்கு பயந்து மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி கார் உரிமையாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

    18:17 (IST)25 Nov 2020

    சென்னை விமான நிலையம் நாளை காலை வரை மூடல்

    நிவர் புயல் காரணமாக, சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மூடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மூடப்பட்டது. சென்னை விமான நிலையம், கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 6 நாள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    18:15 (IST)25 Nov 2020

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரிப்பு

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    17:46 (IST)25 Nov 2020

    இன்று இரவு 8 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் இயங்காது

    நிவர் புயல் காரணமாக இன்று சென்னையில் இன்று இரவு 7 மணி வரை மட்டுமே இயக்கப்படும். இரவு 8 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் இயக்கப்படமாட்டாது. நாளை வானிலையைப் பொறுத்து மீண்டும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது பற்றி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    17:41 (IST)25 Nov 2020

    மக்கள் வெளியே வர வேண்டாம் - சென்னை காவல்துறை வேண்டுகோள்

    நிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டன மறுஅறிவிப்பு வரும் வரை சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டிருக்கும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்துள்ளது.

    17:23 (IST)25 Nov 2020

    நிவர் புயல் காரணமாக 16 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

    நிவர் புயல் காரணமாக, சென்னை திருவாரூர், தஞ்சை, திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம்...திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர்,வேலூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய 16 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    16:52 (IST)25 Nov 2020

    செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

    16:30 (IST)25 Nov 2020

    நிவர் புயல் தற்போது எங்கே நிலை கொண்டிருக்கிறது?

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று மாலை நிலவரப்படி கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென் கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    16:12 (IST)25 Nov 2020

    சென்னையில் திரையரங்குகள் மூடல்

    நிவர் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் அங்கு திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 

    15:32 (IST)25 Nov 2020

    120-130 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

    15:29 (IST)25 Nov 2020

    தாம்பரம்-முடிச்சூர் பகுதிகளை கண்காணிக்க V.அருண் ராய், இ.ஆ.ப. நியமனம்

    15:22 (IST)25 Nov 2020

    செம்பரம்பாக்கம் - திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு தற்போது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

    15:14 (IST)25 Nov 2020

    காவல்துறையினரை போனிலும் வாட்ஸ் ஆப்பிலும் தொடர்பு கொள்ளலாம்

    நிவர் புயலை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும், அவரசர உதவிக்கு அவர்களை அணுகும்படியும் சென்னை மாநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

    15:10 (IST)25 Nov 2020

    மாமல்லபுரத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

    நிவர் புயல் எச்சரிக்கையை அடுத்து மாமல்லபுத்தை சுற்றியுள்ள மீனவர் குப்பம் பகுதிகளை செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு கண்ணன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

    15:09 (IST)25 Nov 2020

    செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்ட காட்சி

    14:53 (IST)25 Nov 2020

    கடலூருக்கு அருகில் நிவர் புயல்

    நிவர் புயல் தீவிரம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

    14:39 (IST)25 Nov 2020

    13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை

    சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம்,  நாகப்பட்டினம், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நிவர் புயல் காரணமாக நாளை பொது விடுமுறை என முதல்வர் பழனிசாமி அறிக்கைவிடுத்துள்ளார்.

    14:35 (IST)25 Nov 2020

    நிவர் புயல் காரணமாக 26 விமானங்கள் ரத்து

    சென்னையிலிருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் 26 விமானங்கள் நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது என சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

    13:41 (IST)25 Nov 2020

    நிவர் இன்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும்

    தீவிர நிவர் புயல் தற்போது சென்னைக்குத் தென் கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரியிலிருந்து கிழக்கு தென் கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும் கடலூரிலிருந்து சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்நிலை மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு புதுச்சேரி அருகில் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    13:17 (IST)25 Nov 2020

    வெள்ளத்தடுப்பு மணல் மூட்டைகள் சரிபார்ப்பு

    12:56 (IST)25 Nov 2020

    டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

    நிவர் புயலைத் தொடர்ந்து, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் சூழ்நிலைக்கு ஏற்றபடி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் பரிந்துரைத்திருக்கிறது.

    12:34 (IST)25 Nov 2020

    அதி தீவிர புயலாக மாறும் நிவர்

    நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    11:27 (IST)25 Nov 2020

    முடிச்சூர் மக்கள் கவனத்திற்கு!

    சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு . செம்பரம்பாக்கத்தில் இருந்து நீர் திறக்கப்பட்டால் முடிச்சூரில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் பாதிகாப்பாக இருக்க அறிவுறுத்தல். 

    11:25 (IST)25 Nov 2020

    மக்களுக்கு அச்சம் வேண்டாம்!

    செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதல்கட்டமாக 1,000 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட உள்ளதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என பொதுப்பணித்துறை கேட்டுகொண்டுள்ளது . 

    11:24 (IST)25 Nov 2020

    பள்ளிகளுக்கு விடுமுறை!

    நிவர் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் நாளை (26/11/2020) முதல் நவ.28 வரை 3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    11:21 (IST)25 Nov 2020

    வெள்ள அபாய எச்சரிக்கை!

    அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை’ செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ள நிலையில் அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் வெள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி உத்தரவு. 

    10:32 (IST)25 Nov 2020

    ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள்!

    சென்னையில் ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் பிற்பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற உரிமையாளர்கள் முன்வர வேண்டும் . சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள்

    10:03 (IST)25 Nov 2020

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு!

    மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு. சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை- பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

    09:19 (IST)25 Nov 2020

    திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி!

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுகிறது . சுற்றியுள்ள கிராமங்களுக்கு அறிவிப்பு கொடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை .  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட உள்ளதால்  திருநீர்மலை, குன்றத்தூர், முடிச்சூர், அடையாறு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை.  நீர் வரத்தை பொறுத்து படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் எனவும் அறிவிபு. 

    08:37 (IST)25 Nov 2020

    12 விமானங்களின் சேவைகள் ரத்து!

    நிவர் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வரவிருந்த 12 விமானங்களின் சேவைகள் ரத்து. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட இருந்த 12 விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவிப்பு

    chennai weather forecast: எந்தெந்த மாவட்டங்களில் கன மழை?

    நிவர் புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. அதன்படி, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிக கனமழை பெய்யும்.

    சென்னை, காஞ்சீபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக அதிக கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

    இன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Tamilnadu Weather Cyclone
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment