காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்! ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆந்திர அரசு கொண்டு வந்தது போல, நாமும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

காவிரி நதி நீர் பங்கீடு குறித்த தீர்ப்பை பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. அந்த் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்களில் ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை அனைத்து கட்சியினரும் நேரில் சந்தித்து வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை பிரதமர் நேரம் ஒதுக்கித் தரவில்லை.

தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடி வருகின்றனர். 14வது நாளாக நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற உறுதியளிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்ற உத்தரவில் இல்லை. எனவே அதை அமைக்கும் வாய்ப்பு இல்லை என மத்திய நீர்வளத்துறை செயலாளர் கூறியுள்ளார். இதையடுத்து, இன்று தமிழக சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்னையை கிளப்பினார்.

‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்படவில்லை. எனவே அப்படி அமைக்க வாய்ப்பு இல்லை என மத்திய நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி கொடுக்கவில்லை என்பதால், மத்திய அரசு மீது ஆந்திரா எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. நாமும் அது போல, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ‘‘காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கிறது. அதுவரை பொறுத்திருப்போம். கடந்த 13 நாட்களாக நமது எம்.பி.க்களின் போராட்டத்தால், நாடாளுமன்றம் முடங்கியிருக்கிறது. இன்னும் ஒருவாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று நம்புகிறோம். அதுவரை பொறுமையாக இருப்போம்’’ என்று விளக்கம் அளித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close