Advertisment

யாரும் பொதுச் செயலாளர் ஆக முடியாது; இரட்டைத் தலைமைதான்: வைத்திலிங்கம் உறுதி!

ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இருவரையும் அவரது இல்லங்களில் பல்வேறு தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் தனித்தனியாக சந்தித்து திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
AIADMK single leadership

No one can become general secretary says Vaithilingam

அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாக, ஆலோசனைக் கூட்டம் செவ்வாய் கிழமை (ஜூன்;14) நடைபெற்றது.

Advertisment

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள், தலைமை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி. பழனிசாமி ஆகயோர் தலைமை வகித்தனா்.

அப்போது, அதிமுக அலுவலகத்துக்கு வெளியில் திரண்டிருந்த தொண்டர்கள் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டனா்.

இந்நிலையில், கூட்டத்துக்குப் பிறகு முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமார் செய்தியாளா்களிடம் கூறுகையில்: அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று வலியுறுத்தினா். அதிமுகவின் தொண்டா்களும், நிர்வாகிகளும் எதிர்பார்ப்பது ஒற்றைத் தலைமைதான். ஆனால், அந்த ஒற்றைத் தலைமை யார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும். பொதுக்குழுவில் இது தொடா்பாக விவாதிக்கப்படும் என்றார்.

அப்போதிருந்து கட்சியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ்.க்கு ஆதரவாக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டி, தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.

இப்படி ஒரு சூழலில், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இருவரையும் அவரது இல்லங்களில் பல்வேறு தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் தனித்தனியாக சந்தித்து திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், புதன் அன்று (ஜூன்;15) எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், எம்.எல்.ஏ. மனோஜ் கே பாண்டியன் , முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் மற்றும் ஆர். பி உதயகுமார், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளர் ஜேசிடி பிரபாகர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் கூறுகையில்; அதிமுகவில் எப்போதும் இரட்டை தலைமைதான், ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. யாராலும் அதிமுகவின் பொதுச் செயலாளராக வர முடியாது. சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று கூறினார்.

இரட்டைத் தலைமையுடன் இவ்வளவு நாட்கள் சுமூகமாக சென்று கொண்டிருந்த அதிமுக கட்சிக்குள் இப்போது, ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை, வெடிக்கத் துவங்கி உள்ள நிலையில், அந்த ஒற்றை தலைமை ஓ.பன்னீர்செல்வமா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்பது தான் இப்போது அதிமுக தொண்டர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவிலும், இந்த விவகாரம் எதிரொலிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment