Advertisment

டிசம்பர் வரை எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு ஆபத்து இல்லை : என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு டிசம்பர் வரை ஆபத்தில்லை. அடுத்து, மு.க.ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்? என்பதே கேள்வி!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cm edappadi palaniswami, aiadmk, aiadmk government, m.k.stalin

ச.செல்வராஜ்

Advertisment

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு டிசம்பர் வரை ஆபத்தில்லை. அடுத்து, ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்? என்பதே கேள்வி!

டிடிவி.தினகரன் ரூபத்தில் கிளம்பிய புயலை, டெல்லி தயவிலான துடுப்பைக் கொண்டு சமாளித்து முடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 19 எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக, ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என கடிதம் கொடுத்த பிறகும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட, கவர்னர் வித்யாசாகர் ராவ் தயாராகவில்லை.

‘19 எம்.எல்.ஏ.க்களும் வேறு கட்சிக்கு போகவில்லை. அந்தக் கட்சியில் இருந்து விலகவும் இல்லை. எனவே இது உட்கட்சிப் பிரச்னை. இதில் நான் தலையிட முடியாது’ என கைவிரித்து விட்டார் கவர்னர் வித்யாசாகர் ராவ். எனவே டிடிவி.தினகரன் தனது அணியின் எண்ணிக்கையை 25, 30, 35 என உயர்த்தினாலும்கூட கவர்னரின் ‘லா பாயின்ட்’ இதுவாகத்தான் இருக்கப் போகிறது.

ஒருவேளை கவர்னர் குறிப்பிடுவது போல, டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் அதிமுக.வை விட்டு விலகுவதாகவோ, திமுக.வுடன் இணைவதாகவோ அறிவித்தால் என்னாகும்? சிம்பிளாக, கட்சித் தாவல் தடை சட்டப்படி அவர்கள் அனைவரின் எம்.எல்.ஏ. பதவியும் பறிபோகும். சட்டமன்றத்தின் பலம் 200-க்கும் கீழே சென்றால், 100 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே எடப்பாடி பழனிசாமிக்கு போதுமானது. எனவே கவர்னர் இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில், டிடிவி.தினகரன் தரப்பால் ஆட்சி கவிழும் வாய்ப்பு இல்லை.

சரி, அடுத்து திமுக என்ன செய்யப் போகிறது? ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆகஸ்ட் 31-ம் தேதி டெல்லியில் மனு கொடுத்திருக்கிறார்கள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள். அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, ‘ஜனாதிபதி அவகாசம் கேட்டிருக்கிறார். அவரது முடிவைப் பொறுத்து எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்’ என்றார்.

cm edappadi palaniswami, aiadmk, aiadmk government, m.k.stalin மு.க.ஸ்டாலின்

 

கிட்டத்தெட்ட அதே வேளையில் சேலத்தில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. இல்லத் திருமண விழாவில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ‘கவர்னர் தனது கோர்ட்டில் பந்து இல்லை என கூறிவிட்டார். தி.மு.க. தனது பந்தை இனி பயன்படுத்தும். சில வருஷம், சில மாதங்கள் அல்ல. சில நாட்கள் மட்டும் பொறுத்திருங்கள்!’ என கூறினார் ஸ்டாலின். அவர் சொன்னதன் உள்ளர்த்தம், சில நாட்களிலேயே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை திமுக கொண்டு வர இருக்கிறது என்பதுதான்!

இதிலுள்ள சாத்தியக்கூறுகள் குறித்து, சட்டமன்றச் செயலகத்தில் பணியாற்றி அனுபவம் பெற்ற அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். அவர் நம்மிடம், ‘சட்டமன்றத்தின் மொத்த பலமான 233 எம்.எல்.ஏ.க்களில் (ஆர்.கே.நகர் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது), பத்தில் ஒரு பங்கு எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால் அதற்காக உடனடியாக சபையை சபாநாயகர் கூட்டவேண்டும் என அவசியமில்லை. அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் அந்தத் தீர்மானத்தை எடுத்துக் கொண்டால் போதுமானது.

அந்த அடிப்படையில் பார்த்தால், இனி சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரவிருக்கிறது. பெரும்பாலும் அக்டோபர் அல்லது நவம்பரில் இதனைக் கூட்டுவார்கள். ஆனால் டிசம்பர் கடைசி வரை இந்தக் கூட்டத்திற்கான அவகாசம் இருக்கிறது. எனவே அதிகபட்ச அவகாசத்தை எடுத்துக்கொண்டு, டிசம்பர் மாதம்தான் சட்டசபை கூடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதுவரை எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆபத்து இல்லை என்பதுதான் இப்போதைய நிலை!

சபாநாயகர் சட்டமன்றத்தை உடனே கூட்டவில்லை என்றால், கவர்னரிடம் திமுக முறையிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அப்போதும், இன்று எடுத்திருக்கும் அதே நிலைப்பாடை கவர்னர் எடுக்க முடியும். அதாவது, ‘டிடிவி அணி கட்சி மாறவில்லை. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் 98 எம்.எல்.ஏ.க்கள்தான் இருக்கிறார்கள். எனவே அவசரமாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை’ என்கிற விளக்கத்தை கவர்னர் சொல்லக்கூடும்.

எனவே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வரவே டிசம்பர் வரை திமுக காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதுதான் இப்போதைய நிலை. அதற்கு முன்பாக ‘பந்தை’ பயன்படுத்த ஸ்டாலின் விரும்பினால், சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கலாம். கவர்னரிடம் மனு கொடுக்கலாம். இரு தரப்புக்கும் அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுத்தபடி இருக்கலாம். ஆனால் ரிசல்ட் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு” என்றார் அவர்.

டிசம்பரில், திமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? எனக் கேட்டால், “அது அப்போதைய சூழலைப் பொறுத்தது! அதற்குள் டிடிவி. தினகரன் தனது எண்ணிக்கையை அதிகரிக்கிறாரா, அல்லது அங்கிருந்து எடப்பாடி இழுத்துக் கொள்வாரா? என்பதை கணிக்க முடியாது.

ஒருவேளை டிடிவி.தினகரன் தனது எண்ணிக்கையை அதிகப்படுத்திவிட்டார் என்றே வைத்துக் கொள்வோம். டிசம்பரில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சில வினாடிகளுக்கு முன்பு, கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய முடியும். அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கவும் முடியும். பிறகு நீதிமன்ற விசாரணைகளுக்கு அந்த விவகாரம் உள்ளாகலாம்.

சுருக்கமாக சொல்வதானால், இந்த ஆட்சி தொடர்வதை டிடிவி.தினகரனோ, ஸ்டாலினோ முடிவு செய்ய முடியாது. சபாநாயகர்,கவர்னர், டெல்லி என அதிகார மையங்களின் முடிவுகளைப் பொறுத்தே ஆட்சியின் ஆயுள்!” என்றார் அந்த அதிகாரி.

மாநில அரசு சார்ந்த மிக முக்கியமான ஓரிரு பதவிகளுக்கு டெல்லிக்கு வேண்டப்பட்டவர்கள் அண்மையில் நியமனம் செய்யப்பட்டிருப்பது முக்கியமான ஒரு சமிக்ஞை! ஓரிரு வாரங்களுக்கு முன்பு வரை எடப்பாடி அரசுக்கு எதிராக வீராவேசம் காட்டிய தமிழக பாஜக தலைவர்கள் இப்போது திமுகவுக்கும், டிடிவி தரப்புக்கும், கமல்ஹாசனுக்கும் எதிராகவே கொந்தளிக்கிறார்கள். எனவே அதிகாரத்தின் ஆதரவுக் காற்று, எடப்பாடி பக்கம் வீசிக்கொண்டிருக்கிறது.

Dmk Ttv Dhinakaran M K Stalin Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment