ஜெயலலிதா நினைவிடம் அமைக்க விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? தமிழக அரசு பதில்!

ஜெயலலிதா நினைவிடம் அமைக்க விதிமுறைகள் மீறப்படவில்லை என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க விதிமுறைகள் மீறப்படவில்லை. சம்மந்தப்பட்ட துறைகளின் அனுமதியுடனே நினைவிடம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில், மறைந்த தமிழக முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி. ராமசந்திரன் ஆகியோருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தில் தற்போதைய அரசு சுமார் 15 கோடி ரூபாய் செலவில், நினைவிடத்தை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் வதிகளின் படியும், உயர்நீதிமன்ற உத்தரவுகளின் படி கடற்கரை இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் எந்த வித கட்டுமானங்களை மேற்கொள்ள கூடாது. மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை. இதில் தொடர்ந்து இது போன்ற சமாதிகள் ஏற்பட்டால் அதன் தன்மை பாதிக்கும். கடற்கரை பகுதியை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். மெரினா கடற்கரை பகுதியில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறை சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள முன்னாள் முதல்வர்கள் சமாதிகளை அங்கிருந்து அகற்றி சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அமைந்துள்ள இடத்தில் வைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால் எனது மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. எனவே உடனடியாக மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் நினைவிடம் மற்றும் சிலையை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்னணியில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலாளர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைப்பதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் கொண்டுவரப்படுவதற்கு முன்பே மெரினாவின் எம்.ஜி.ஆர் நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் எம்.ஜி.ஆர் சமாதி அமைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள்ளேயே தற்போது ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் படி, சாலையை நோக்கிய படி நினைவிடம் அமைப்பது சட்ட விதிகள் மீறப்படவில்லை. சம்மந்தப்பட்ட துறைகளில் இருந்து முறையாக உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது. விதிகளுக்கு உட்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

தமிழக அரசின் பதில் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close