ரகசியத்தை உடைத்த ஓபிஎஸ்... இபிஎஸ்.ஸுடன் இணைத்து வைத்தவர் மோடிதானாம்!

ஓபிஎஸ்-இபிஎஸ் இணைப்புக்கு மோடிதான் காரணம் என்பதை முதல் முறையாக உடைத்துப் பேசியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அப்போ பிரித்தது யார்?

ஓபிஎஸ்-இபிஎஸ் இணைப்புக்கு மோடிதான் காரணம் என்பதை முதல் முறையாக உடைத்துப் பேசியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அப்போ பிரித்தது யார்?

ஓ.பன்னீர்செல்வம், கடந்த பிப்ரவரியில் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி தனி அணி கண்டார். அதன்பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை திரட்டி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினார்.

ஓ.பன்னீர்செல்வம் எடுத்தை நிலைப்பாடையே அடுத்த சில மாதங்களில் எடப்பாடி பழனிசாமியும் முன்னெடுத்தார். டிடிவி தினகரனின் கைதைத் தொடர்ந்து, கட்சியையும் ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் இபிஎஸ். அப்போது ஆட்சியை கவிழ்க்க ஓபிஎஸ் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கட்சியிலும் பெரிதாக நிர்வாகிகள் திரளவில்லை. அந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஓபிஎஸ், பிறகு இபிஎஸ் அணியுடன் இணைய சம்மதித்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், ஆட்சியின் துணை முதல்வராகவும் ஓபிஎஸ் அமர்த்தப்பட்டார். அத்துடன் அவரது தர்மயுத்தம் முடிவுக்கு வந்தது.

‘அதிமுக.வில் இருந்து ஓபிஎஸ்.ஸை தனி அணி காண வைத்ததும் பாஜக மேலிடம் தான். அவரை மீண்டும் இபிஎஸ் அணியுடன் இணைய வைத்ததும் மோடிதான்’ என அப்போதே அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் சசிகலா குடும்பத்தை நீக்கக் கோரிய தங்களின் திட்டம் நிறைவேறியதால் இணைந்ததாக அப்போது ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் முதல் முறையாக பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால் இபிஎஸ் அணியுடன் இணைந்ததாக ஓபிஎஸ் வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார். ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து ஆலோசிக்க தேனி மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று (16-ம் தேதி) நடைபெற்றது. சொந்த மாவட்டம் என்ற வகையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ‘பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால், மீண்டும் அதிமுக.வில் இணைந்தேன். 30 ஆண்டுகள் சசிகலா குடும்பம், அதிமுக.வை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தர்மயுத்தம் தொடங்கியபோது ஒரு சதவிகித தகவலையே கூறினேன். என்னைக் கோபப்படுத்தினால் மீதம் 99 சதவிகித தகவல்களையும் கூறுவேன்.

சசிகலா குடும்பத்தினர் எனக்கு கடும் நெருக்கடிகளை அளித்தனர். அந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள்’ என ஓபிஎஸ் கூறியதாக கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

‘மீண்டும் இபிஎஸ் அணியுடன் இணையக் காரணம் மோடி என்பதை தெரிவித்திருக்கிறார் ஓபிஎஸ். இதேபோல தர்மயுத்தம் தொடங்கியதற்கு யாருடைய ஆலோசனை அல்லது தூண்டுதல் காரணம்? என்பதையும் வெளிப்படையாக சொல்வாரா?’ என டிடிவி தரப்பு இந்த விவகாரத்தை கிளறுகிறது.

 

×Close
×Close