பன்னீர் செல்வம் நேற்று ரஜினிகாந்த-ஐ சந்தித்த பிறகு, இன்று காஞ்சிபுரத்தில் தனது புரட்சி பயணத்தை தொடங்குகிறார்.
நேற்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த செய்தி முதலில் வெளியாகவில்லை. ரஜினி மற்றும் ஓ.பி.எஸ் இருவரின் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியான நிலையில், இவர்களது சந்திப்பு தொடர்பான செய்தி வெளியானது.
ரஜினி மற்றும் ஓ.பி.எஸ் சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. இந்நிலையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது என்றும், தமிழ்நாடு மற்றும் இந்தியா தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அவரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ் , “ உச்சங்கள் பல தொட்டு அப்படி எட்டிய உச்சத்தில் இன்றளவும் சாஸ்வதமாய் நிலைத்து நிற்கும் சூப்பர்ஸ்டார் அவர்களுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்தது” என்று ட்வீட் செய்திருந்தார்.
காஞ்சிபுரத்தில் நடைபயணத்தை தொடங்கும் ஓ.பி.எஸ் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, இல்லத்திற்கு சென்று தனது மரியாதையை செலுத்துகிறார். இன்று மாலை புரட்சி பயணம் தொடர்பான பேரணியில் பேசுகிறார்.
மேலும் இந்த கூட்டத்திற்கு அதிமுக கொடியை பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி பிரபாகர் கூறுகையில் “ கட்சியின் கொடியை பயன்படுத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இல்லை. நேர்மையான எங்களை போன்ற தொண்டர்கள் கட்சி கொடியை பயன்படுத்துவோம் “ என்று அவர் கூறினார்.
பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் பேசுகையில், “ எங்களது முக்கிய நோக்கம் மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களை சந்திப்பதும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் வழியில் செல்வதுதான் “ என்று அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“