Advertisment

மழை வெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமிப்புகளே காரணம் : ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை நகரில் மழை வெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமிப்புகளே காரணம் என சென்னை உயர் நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர் விஜய நாராயணன் தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai rains

மழை வெள்ள பாதிப்புகளுக்கு ஆக்கிரமிப்பு தான் காரணம் எனவும், ஆக்கிரமிப்புகள் மீண்டும் மீண்டும் செய்வதால் தான் இந்த பிரச்சினை ஏற்படுவதாக தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல்.

Advertisment

மழை வெள்ள பாதிப்புகளை போக்க கீழ்மட்ட அளவில் தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் அடங்கிய பேரிடர் மேலாண்மை குழுவை அமைக்க உத்தரவிட கோரி சூர்யபிரகாஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிகமாக உள்ளது. தாழ்வான பகுதி மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் மழைநீரை சரியான முறையில் வெளியேற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்கவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு் ஏற்பட்ட வெள்ளச் சேதத்திற்கு பின்பும் அதிகாரிகள் பாடம் கற்கவில்லை. எனவே உயர் நீதிமன்றத்தில் கால்வாய்களை தூர்வாருவது தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் கால்வாய் தூர்வாரப்படாததால், மழை வெள்ளம் வெளியேற வழியில்லாமல் குடியிருப்புக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே மழை வெள்ளத்தால் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க கீழ்மட்ட அளவில் துறை வாரியாக அதிகாரிகள், நிபுணர்கள், தன்னார்வ அமைப்புகள் அடங்கிய பேரிடர் மேலாண்மை குழுவை அமைக்க கோரிய மனுவை உடனடியாக விசாரித்து அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரினார்.

இதே போல டிராபிக் ராமசாமி, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்

இந்த மனுகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை சென்னையில் உள்ள கால்வாய்கள், ஆறுகள் தூர் வாரப்படவில்லை. மேலும் இந்த விவகாரத்தில் அதிகாரிகளும், அரசும் மெத்தனமாக உள்ளனர் என மனுதாரர் சூர்யபிரகாசம் வாதிட்டார்.

மேலும் நடிகர் கமலஹாசன் எண்ணூர் பகுதியை பார்வையிட்டவுடன், அந்த பகுதியை சீர் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் அது சாதாரண மக்களுக்காக அல்ல என வாதிட்டார்.

அதே போல அதிகாரிகள் பிரதான சாலைகளை மட்டுமே சரி செய்கின்றனர். ஆனால் சென்னையின் உள் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுளது. சென்னை ரிப்பன் மாளிகையும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மழை தொடங்கி மூன்று நாட்கள் ஆகியும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார். மேலும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் தலைமை நீதிபதியே வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் வாதிட்டார்

இதனையடுத்து அரசு தரப்பில் ஒரு அளிக்க தாக்கல் செய்யப்பட்டது. கடலோர தலைநகரமான சென்னை வங்காள விரிகுடாவை ஒட்டி கடல்மட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் மட்டுமே உள்ளது. இதனால் பருவமழை காலங்களில் எதிர்பாராத பாதிப்புகளை சென்னை சந்திக்க வேண்டியுள்ளது. 174 சதுர மீட்டராக இருந்த மாநகராட்சியின் எல்லை தற்போது 426 சதுர மீட்டராக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஆயிரத்து 894 கிமீ தூரத்திற்கு 7 ஆயிரத்து 351 மழைநீர் வடிநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இருமுறை இந்த கல்வாய்கள் தூர்வாரப்படுகிறது. இதற்காக மட்டும் இந்தாண்டு ரூ. 17.74 கோடி செலவிடப்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியும் தடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் இருந்து ரூ. 19.65 கோடி செலவில் 3 ரோபோட்டிக் தூர்வாரும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் 20 கால்வாய்களில் இருந்து 5 ஆயிரத்து 753 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

பின்லாந்து நாட்டில் இருந்து ரூ.4.10 கோடி செலவில் வாங்கப்பட்ட நிலத்தில் இருந்து செயல்படும் நவீன இயந்திரம் மூலம் வடக்கு மற்றும் மத்திய பக்கிங்ஹாம் கால்வாய், வேளச்சேரி ஏரி, கேப்டன் காட்டன் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இந்த கால்வாய்களின் நீர்கொள்ளவு 90 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை 100 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மழை வெள்ள காலங்களில் பாதிப்புகளை சரிசெய்ய 176 நிவாரண மையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளது. 109 தாழ்வான பகுதிகளில் படகுகள் மூலம் மக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 44 நடமாடும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை 1913 என்ற ஹெல்ப் லைன் எண்ணுடன் செயல்பட்டு வருகிறது. இதுதவிர 15 மண்டலங்களில் 5 மற்றும் 7.5 குதிரை திறன் கொண்ட 458 மின்மோட்டார்கள் மூலம் தேங்கிய மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. தலா ஆயிரத்து 500 பேருக்கு உணவு அளிக்கும் வகையில் 4 சமையல் கூடங்கள் தயாராக உள்ளது. ஆங்காங்கே உள்ள அம்மா உணவகங்களின் மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்கம்பங்கள், தாழ்வான மின் ஒயர்கள், மின்இணைப்பு பெட்டிகள் பாதிக்காத வண்ணம் குழு கண்காணித்து வருகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு 58 இடங்களில் களப்பணியில் ஈடுபட்டுள்ளது. அம்மா குடிநீர் மையங்கள் 50 இடங்களில் செயல்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் முழுவீச்சில் எடுத்து வருகிறது. மேலும் மண்டலம் வாரியாக உடனுக்குடன் பாதிப்புகளை சரிசெய்ய 15 ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமி்த்துள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது

தொடர்ந்து வாதிட்ட தலைமை வழக்கறிஞர் மேலும் அவசர கால உதவிக்காக 1913 என்ற அவசர நிலை எண் உள்ளது எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையை முதல்வர் கவனித்து கொண்டிருக்கிறார் எனவும், இதற்காக 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் 24 மணிநேரமும் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பதால் தான், வெள்ளம் புகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் மீண்டும் அப்பகுதில் ஆக்கிரமிப்பாளர்கள் வந்து விடுகின்றனர் அவர்களை அகற்ற முடியவில்லை எனவும் கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி, அப்படியெனில் காவல்துறை துணையுடன் நடவடிக்கை எடுக்கலாமே என கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து தலைமை நீதிபதி, 1913 என்ற அவசர கால எண் இயங்குகிறதா என்பதை உதவியாளர் மற்றும் வழக்கறிஞர் மூலமும் சோதித்தார்.

மேலும் அரசு நிர்வாகத்தை ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் நடத்த முடியாது எனவும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மேலும் நீதிபதிகள், வெள்ள நீரை அகற்ற வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்ட இயந்திரங்கள் எங்கே என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு தரப்பில், ஜெர்மன், சுவிட்சர்லாந்து நாடுகளில் இருந்து வாங்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

அதற்கு தலைமை நீதிபதி, கொல்கத்தாவில் இது போன்ற நிலை இருந்தது, ஆனால் நவீன இயந்திரங்கள் கொண்டு பாதாள சாக்கடை அமைத்தனர் . இதனால் தற்போது அங்கு அந்த நிலை இல்லை . எனவே இங்கும் அது போன்று செய்யலாமே என கருத்து தெரிவித்தார்.

அதற்கு தலைமை வழக்கறிஞர், இங்கு பாதாள சாக்கடைக்கு குழி தோண்டினால் பி.எஸ்.என்.எல் வயர்கள், மின் வயர்கள் இருக்கும். எனவே அது கடினம் என தெரிவித்தார்.

அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு நிர்வாகத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் தான் நீதிமன்றம் தலையிட முடியும். ஆனால் எல்லா இடங்களிலும் மழைநீர் முழுமையாக வெளியேற்றப்படவில்லை என்பதை நாங்களும் உணருகிறோம்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் நீர்நிலை வழித்தடத்தில் உள்ள கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் 3 மாதத்திற்குள் அகற்ற வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு குறித்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Chennai High Court Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment