நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு : தமிழக அரசின் சட்ட முன் வரைவு இன்று தாக்கல்

நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்ட வரைவை இன்று தாக்கல் செய்தது. இதற்கு உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் வழங்கும்...

நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு கேட்டு மத்திய உள்துறையிடம் தமிழக அரசு அவசர சட்ட வரைவை இன்று தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் எனத் தெரிகிறது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என நீண்ட போராட்டம் நடந்து வருகிறது. இதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்தது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவிகித இட ஒதுக்கீடையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் நீட் தேர்வு அடிப்படையிலேயே கவுன்சலிங் நடத்தவும் தமிழக அரசு தயாராகிவிட்டது.

இந்தச் சூழலில் இந்த விவகாரத்தில் பாராமுகமாகவே இருந்த மத்திய அரசு, கிளைமாக்ஸ் தருணத்தில் வரும் ஹீரோ போல திடீரென ஓராண்டு விலக்கு கொடுக்க சம்மதம் தெரிவித்தது. மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 13) அளித்த பேட்டியில், ‘ஓராண்டு விலக்கு அளிக்க தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது’ என்றார்.

உடனடியாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இது குறித்து பேசினார். அவரச சட்டத்திற்கான ஆவணப் பணிகளை ஏற்கனவே தமிழக அரசு செய்து வைத்திருந்ததால் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஒரு குழு உடனடியாக டெல்லிக்கு கிளம்பிச் சென்றது. இன்று காலை அவசர சட்டத்திற்கான சட்ட முன்வரைவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சமர்ப்பித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகர் இந்த சட்ட முன்வரைவை சம்பந்தப்பட்ட துறையான சுகாதாரத்துறைக்கு அனுப்பும். சுகாதாரத்துறை இது தொடர்பாக சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கும். அந்தக் கருத்துடன் மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அந்த ஆவணங்கள் வந்து சேரும். மத்திய அரசின் வழக்கறிஞர்கள் இதில் ஏதாவது திருத்தம் செய்யக் கோரினால், அதைச் செய்யும்படி தமிழக அரசை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொள்ளும். அப்படி திருத்தம் தேவைப்படாத பட்சத்தில், ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவார்கள். பின்னர் கவர்னர் மூலமாக அவசர சட்டம் அதிகாரபூர்வமாக வெளியாகும்.

இந்த நடைமுறைகளுக்கு ஓரிரு நாட்கள் ஆகலாம். இதற்கிடையே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், அதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சார்பில் நீதிமன்றத்தை அணுகவும் சிலர் தயாராகி வருகிறார்கள். எனவே தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை இன்னும் சஸ்பென்சாகவே தொடர்கிறது.

இதற்கிடையே தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்த சட்ட முன் வரைவில், ‘இரண்டு ஆண்டுகளுக்கு விலக்கு’ கேட்டதாக தெரிகிறது. இதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே ஓராண்டு விலக்கு கேட்கும் வகையில் ஆவணங்களை திருத்தி தர உத்தரவிட்டனர். 30 நிமிடங்களில் உரிய மாற்றத்தை செய்து தருவதாக இன்று நண்பகலில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close