Advertisment

காலநிலை மாற்றத்தால் தொடர் தாக்குதலுக்கு ஆளாகும் நாகை கஜாவில் இருந்து உண்மையாகவே மீண்டதா?

ஒரு வருடம் ஆன நிலையிலும் நாகை கஜாவின் கோரத்தில் இருந்து மீண்டுவரவில்லை என்பது தான் நிதர்சமான உண்மை என்கிறார் சோமு இளங்கோ.

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
காலநிலை மாற்றத்தால் தொடர் தாக்குதலுக்கு ஆளாகும் நாகை கஜாவில் இருந்து உண்மையாகவே மீண்டதா?

One year of cyclone Gaja

One year of cyclone Gaja : ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து வங்கக் கடலில் உருவாகும் ஒரு புயல் வடக்கு கடலோர மாவட்டங்களை ஒரு புரட்டு புரட்டி போட்டுவிட்டு தான் செல்கிறது. இவ்வாறு கடந்த ஆண்டு கஜா புயல் வட கடலோர மாவட்டங்களை தாக்கி அழித்தது. வாழ்வாதாரம் முதற்கொண்ட அனைத்தும் ஒரே நொடியில் நொடித்து போய்விட்டது.

Advertisment

நவம்பர் மாதம் 16ம் தேதி கடலூர் மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்தது கஜா புயல். 120 - 140 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்த புயலால் நாகை, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்கால் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகள் பலத்த சேதாரம் அடைந்தன. 45க்கும் மேற்பட்டோரை பலி கொண்டது கஜா. நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் நீரில் அடித்து செல்லப்பட்டது. தென்னை, வாழை மரங்கள் அனைத்தும் பலத்த காற்றில் காணாமல் போனது. 39,938 மின்கம்பங்கள் முற்றிலுமாக சாய்ந்தன.

மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?

publive-image நாகப்பட்டினத்தில் இருக்கும் சடையன் கொட்டகை : கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

மாடுகளுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரண நிதியும், ஆடுகளுக்கு ரூ. 3 ஆயிரம் நிவாரண நிதியும், தென்னை போன்ற மரங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை நிவாரண நிதி வழங்க உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு. இந்த புயலில் 1 லட்சத்தி 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாகவும் / பாதியாகவும் சேதாரமடைந்தது. 2 லட்சத்தி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி குடியேறினர். ஒரு வருடம் கழித்து இன்று கஜா பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவரம் என்ன என்பதை அறிய நாகை நோக்கி பயணித்தோம்.

கஜ நிவாரணப்பணி குறித்து மக்களின் கருத்து

நாகப்பட்டினம் நிர்வாக ரீதியாக நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் என்று நான்கு நகராட்சிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இம்மாவட்டத்தின் புவியியல் அமைப்பு வெள்ள நிவாரணம், புயல் நிவாரணம் போன்றவற்றை சீராக மக்கள் மத்தியில் சென்று சேர்ப்பதில் பெறும் பிரச்சனையாக அமைகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு எல்லையில் இருப்பது இங்கிருக்கும் மக்களும் பெரும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.

One year of cyclone Gaja One year of cyclone Gaja

One year of cyclone Gaja : கீழைக்கரையிருப்பு

கஜாவால் பாதித்த முக்கியமான பகுதிகளில் ஒன்றான கீழைக்கரையிருப்பு தான் முதலில் பார்வையிட்ட பகுதி. கடந்த ஆண்டு அடித்த கஜா புயாலால் மொத்தமாக பாதிக்கப்பட்டிருந்தது அந்த பகுதி. தமிழகத்தில் இன்னும் குடிசை வீடுகளில் மக்கள் வசிக்கின்றார்களா என்ற கேள்விக்கு பதிலாக அங்கு நிறைய காட்சி பதில்களை காண நேரிட்டது.

Nagapattinam one year of Cyclone Gaja Express Photo by Nithya Pandian கீழ்கரையிருப்பு பகுதியில் அமைந்திருந்த பூமிதாவின் வீடு (Express Photo by Nithya Pandian)

கரெண்ட் வர்றதுக்கே ஒன்றரை மாசம் ஆச்சுங்க... இங்கன ஒரு கவர்ன்மெண்ட் அதிகாரிகளும் வரல. மழை அடிக்க ஆரம்பிச்ச நாளுல இருந்து ஊர் ஜனங்க முழுசா இந்த பள்ளிக்கூடத்துல தான் தங்குனோம். எந்த நிவாரண பொருளும் அரசாங்கத்துட்ட இருந்து வந்து சேரல. அக்கம் பக்கத்துல இருக்குறவங்க தான் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒதவி பண்ணிக்கிட்டோம். நைட்டெல்லாம் கொசுக்கடி. எல்லாத்துல இருந்தும் நாங்க தப்பிச்சு வந்ததே பெரிசா இருக்குது என்றார் பூமிதா. ஒரு குடிசை வீட்டில் பூமிதா, பூமிதாவின் கணவர், மகள் பூஜா, மற்றும் பள்ளி இறுதியாண்டு படிக்கும் தமிழ்செல்வன் ஆகியோரும் வாழ்ந்து வருகின்றனர்.

கீழ்கரையிருப்பு பொதுமக்கள்

”இங்க எல்லாரும் வெவசாய கூலிதாங்க... மழை பெய்ற நேரத்துக்கு பெய்ய மாட்டிங்குது. புயல் அடிக்க கூடாத நேரத்துல அடிக்குது. 10 வருசத்துல ரெண்டு தடவை புயல், மூனு தடவை வறட்சி, ரெண்டு தடவை மந்த நெலைன்னு தான் இங்க வாழ்க்கையே நகருது. வெவசாயம் இருந்தா தான் எல்லாமே. இல்லைன்னா ரொம்ப கஷ்டம். இப்படி புயல், மழைன்னு வரும் போது, கடல் மட்டத்துக்கு கீழ இருக்குற எங்க கிராமத்தோட பெரும் பகுதி தண்ணிக்குள்ள தான் இருக்குது. பிற்படுத்தப்பட்டவர்கள் அதிகம் இருக்குற இந்த பகுதில கல்வி மட்டும் தான் எங்க மனுசங்க மேம்பாட்டுக்கு காரணமா இருக்கும்” என எதிர் கால தேவை குறித்தும் வருத்தம் தெரிவிக்கிறார் அங்கு எல்.ஐ.சி ஏஜெண்ட்டாக இருக்கும் ராஜா.

மேலும் படிக்க : இந்தியாவில் கல்வி அடிப்படை உரிமையா? கேள்வி கேட்கும் வானவில் குழந்தைகள்!

நள்ளிரவு புயல் கரையை கடந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்கிறார் சமூக செயற்பாட்டாளராக இருக்கும் பிரேமா ரேவதி. சிக்கலில் இருக்கும் அவருடைய பள்ளி வளாகத்தில் இருந்த மரங்கள் எல்லாம் விழுந்து சரிந்துவிட்டது. ஓவியர் நடராஜன் மற்றும் பிரேமா ரேவதி ஆகியோர் தங்களின் பள்ளிகள் மூலம், கஜ புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நிவாரணப்பொருட்களை வழங்கினர். தலைஞாயிறு பகுதியில் 10 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டிருக்கிறது.

தலைஞாயிறு

புயல் வந்து 10 - 15 நாட்களுக்கு ஒருவரும் ஊர் பக்கமே வரவில்லை என்கிறார் சமூக செயற்பாட்டாளர் சோமு இளங்கோ. அடித்த காற்றில் மரமெல்லாம் சாலைகளில் விழுந்துவிட, சாலைகள் எல்லாம் பெயர்ந்து போனது. இதனால் வாகனங்கள் வர சிரமமாக இருக்கிறது என்று பலரும் இந்த பகுதிக்கு வரவே இல்லை. 45 நாட்களுக்கு பிறகு தான் நிவாரணப் பொருட்கள் எங்களின் பகுதிக்கு வந்து சேர்ந்தது.

நிவாரண நிதி வழங்குவதிலும் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டது. இங்கு முறையான ரேசன் கார்ட், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இருந்தால் மட்டுமே நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அரசு அதிகாரிகள் அறிவித்திருந்தனர். மேலும் பிரதம அமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் உறுதி மொழி வழங்கப்பட்டது.

வீட்டின் ஒவ்வொரு கட்டுமானத்தையும் முடித்த பிறகு முறையான சான்று மற்றும் ஆதாரம் அளித்தால் மட்டுமே அதற்கான தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர். ஏற்கனவே குடிசைகளை மாற்றிவிட்டு ஓடுகள் போடவே வசதி அற்றவர்கள் எப்படி இது போன்ற பெரிய தொகை கொடுத்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள இயலும் என்று வீடு என்ற எண்ணத்தையே கைவிட்டுவ்விட்டதாக அவர் அறிவிக்கிறார்.

இதனையும் தாண்டி தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இளம் விதவைகள், ஆண்களால் கைவிடப்பட்ட பெண்கள், வீடு என்பதே வெறும் கனவு என்று இருக்கும் குடும்பங்கள் என்று சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டது. அந்த வீடுகளை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து  வைத்தார்.

இன்னும் அனைவருக்கும் வீடுகள் கட்டித்தரப்படவில்லை. அதே போன்று சாலைகள் ஏதும் முறையாக சீர்படுத்தப்படவில்லை. போர்கால அடிப்படையில் மட்டுமே மின்கம்பங்கள் நடப்பட்டது. ஆனால் அதன் பின்பு அதனை முறையாக அமைக்க மின்சார வாரியத்தில் இருந்து ஒருவரும் வரவில்லை. தொடர்ந்து இயற்கை பேரிடர்களில் துன்புறும் பகுதிகளில் முறையற்ற சீரமைப்பு பணிகள் மேலும் அச்சத்தை மட்டுமே தருகிறது. அடுத்த மழை வரும் போதோ, புயல் அல்லது வெள்ளம் வரும்போதோ அதை தாங்கிக் கொள்ளும் வகையில் இந்த சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை. ஒரு வருடம் ஆன நிலையிலும் நாகை கஜவின் கோரத்தில் இருந்து மீண்டுவரவில்லை என்பது தான் நிதர்சமான உண்மை என்கிறார் சோமு இளங்கோ.

Nagapattinam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment