பொறியியல் படிப்பிற்காக ஆன்லைன் பதிவுகள் நாளை முதல் தொடக்கம்!!!

பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவுகள் நாளைத் தொடங்கும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் அறிவித்துள்ளார். இந்தப் பதிவுகள் செய்ய மே 30-ம் தேதியே கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளார்.

2018-19-ம் கல்வி ஆண்டில் பொறியியல் கல்வியின் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவுகள் மே 3-ல் தொடங்கி அதே மாதம் 30-ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த ஆன்லைன் பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.annauniv.edu/tnea2018 என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் எந்த இடத்தில் இருந்தும் பதிவு செய்யலாம். இணையவசதி இல்லாத மாணவர்கள் பொறியியல் மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழகம் முழுவதும் 42 இடங்களில் அமைக்கப்பட்ட சேர்க்கை உதவி மையங்களுக்குச் சென்று இலவசமாகப் பதிவு செய்யலாம். இந்த மையங்களின் பட்டியலை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 562 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என அனைத்து அடக்கம். இந்தக் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் மொத்தமுள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இது போன்ற பொது கலந்தாய்வு தமிழக அரசு சார்பில் வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.

பொறியியல் படிப்பில் சேர்ந்து படிக்க முதல்முறையாக ஆன்லைன் பதிவு முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதுபோல் ஆன்லைன் கலந்தாய்வு முறையை இந்த ஆண்டு முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பின் ஆன்லைன் பதிவு குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் பேசியுள்ளார். அதில் மாணவர்கள் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்ற முறையை விளக்கியுள்ளார்.

– ஆன்லைனில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் www.annauniv.edu/tnea2018 என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி அதில் கேட்கப்படும் அடிப்படை விவரங்களை குறிப்பிட்டு முதலில் தங்களுக்கென ஒரு யூசர் ஐடி, பாஸ்வேர்டு-ஐ உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

பதிவு செய்த யூசர் ஐடி, பாஸ்வேர்டு-ஐ பயன்படுத்தி ஆன்லைன் பதிவை தொடங்கி தேவையான விவரங்களை குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும்.

– பதிவு செய்வதற்கு முன்பாக செல்போன் எண், இ-மெயில் முகவரி, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பிளஸ் 2 ஹால் டிக்கெட் (பதிவு எண்ணுக்காக) 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த பள்ளியின் விவரங்கள், சாதிச் சான்றிதழ், ஆதார் எண், பெற்றோரின் ஆண்டு வருமானம், பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் விவரம் ஆகிய விவரங்களை தயாராக வைத்துக்கொள்ளவும்.

– மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்கள், தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி வரை காத்திருக்கத் தேவையில்லை. அவர்களின் பிளஸ் 2 பதிவு எண்ணை வைத்து அண்ணா பல்கலைக்கழகமே தேர்வு முடிவுகள் வெளியானதும் மதிப்பெண் விவரங்களை ஆன்லைனில் எடுத்துக்கொள்ளும்.

– இந்தப் பதிவுக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. ஒவ்வொரு சிறப்பு ஒதுக்கீட்டுக்கும் கூடுதலாக ரூ.100 செலுத்த வேண்டும். பதிவுக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் முலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

– சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டும் அவர்களின் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும். அவர்களும் முன்கூட்டியே மற்ற அனைத்து விவரங்களையும் அப்லோட் செய்துவிடலாம். தேர்வு முடிவு வந்ததும் மதிப்பெண் விவரங்களை குறிப்பிட்டு பதிவை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும்.

– மாணவர்கள் ஆன்லைன் பதிவை முடித்ததும் விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை முன்பு போல அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பத் தேவையில்லை.

– மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக உதவி மையங்களுக்கு அழைக்கப்படும்போது, அவர்கள் வைத்திருக்கும் ஆன் லைன் பிரின்ட் அவுட் விண்ணப்பத்தில் போட்டோ ஒட்டி, கையெழுத்திட்டு அங்கேயே சமர்ப்பித்து விடலாம்.

– பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மே 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
என அறிவித்துள்ளார்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஆன்லைன் கலந்தாய்வு குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்தால், மாணவர்கள் 044-22359901 அல்லது 044-22359920 என்ற இலவச தொலைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close