ஓபிஎஸ் கார் வெளியே… இபிஎஸ் கார் உள்ளே : அதிமுக ஆண்டுவிழா அரசியல்

அதிமுக ஆண்டு விழாவையொட்டி கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் கார் வெளியே நிறுத்தப்பட்டது. ஆனால் இபிஎஸ் கார் உள்ளே சென்றது.

By: October 17, 2017, 4:19:42 PM

அதிமுக ஆண்டு விழாவையொட்டி கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் கார் வெளியே நிறுத்தப்பட்டது. ஆனால் இபிஎஸ் கார் உள்ளே சென்றது.

அதிமுக-வின் 46-வது ஆண்டு தொடக்க விழா, சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 17) நடந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதில் கலந்துகொண்டு, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அதே வளாகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, கட்சி கொடியையும் ஏற்றி வைத்தனர். ஆட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதுபோல, கட்சி நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் கட்சிக்குள் பேசப்பட்ட எழுதப்படாத ஒப்பந்தம்!

அந்த அடிப்படையில்தான் அதிமுக ஆண்டு விழா தொடர்பான அறிவிப்பு, அதிமுக ஆண்டு விழாவையொட்டி தொண்டர்களுக்கு இருவரும் இணைந்து எழுதிய மடல் ஆகியவற்றில் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரே முதலில் இருந்தது. அதே ஃபார்மாலிட்டி, ஆண்டுவிழா நிகழ்ச்சியிலும் கடைபிடிக்கப்படும் என எதிர்பார்த்து வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சி!

அரசு நிகழ்ச்சிகளைப் போலவே இந்த நிகழ்ச்சிக்கும் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வந்து சேர்ந்தபிறகு, 10 நிமிடங்கள் கழித்தே இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்திற்கு வந்தார். அதைவிட ஷாக், முன்னதாக வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் கார் அலுவலக வாசலில் நிறுத்தப்பட்டது. ஓ.பன்னீர்செல்வமும் அங்கேயே இறங்கி, அலுவலகத்திற்குள் நடந்து சென்றார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியின் கார், தலைமை அலுவலக வாசலைத் தாண்டி உள்ளே வளாகத்திற்குள் சென்றது. எடப்பாடி பழனிசாமியை உள்ளே விட்ட அந்தக் கார், நிகழ்ச்சி முடியும் வரை அலுவலக வளாகத்திற்குள்ளேயே நிறுத்தப்பட்டிருந்தது.

ஜெயலலிதா இருந்தவரை, அவரது காற் மட்டுமே இதுபோல அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்பிறகு சசிகலா பொதுச்செயலாளர் ஆனபிறகு அவரது காரும், டிடிவி தினகரன் பொறுப்பில் இருந்தபோது அவரது காரும் சில முறை இப்படி அலுவலக வளாகத்திற்குள் வந்தன. இப்போது அதே முறையில் எடப்பாடி பழனிசாமியின் கார் மட்டும் உள்ளே நுழைகிறது.

ஆனால் கட்சிப் பதவி அடிப்படையில் முதலிடத்தில் உள்ள ஓபிஎஸ்-ஸின் காரை வெளியே நிறுத்திவிட்டு, இரண்டாம் இடத்தில் உள்ள இபிஎஸ் கார் உள்ளே நுழைவதைத்தான் ஒரு தரப்பினர் ஏக பொருமலுடன் பார்க்கிறார்கள். காலை 10.55 மணிக்கு வந்த இபிஎஸ், விறுவிறுவென கட்சி கொடியேற்றும் இடத்திற்கு சென்றுவிட்டார். முன்னதாக வந்து காத்திருந்த ஓபிஎஸ்.ஸை இதர அமைச்சர்களும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

சற்றே ஒதுங்கி நின்ற ஓபிஎஸ்-ஸை, தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் இபிஎஸ் ஆதரவாளருமான வி.என்.ரவி கைப்பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு ஓபிஎஸ்-ஸும், இபிஎஸ்-ஸும் இணைந்து கொடியேற்றினர்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் முறையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் முன்னால் நின்றார்கள். ஆனால் இவர்களிலும் ஓபிஎஸ் பக்கம் கே.பி.முனுசாமியும், இபிஎஸ் பக்கம் வைத்திலிங்கம் நின்றதையும் அனைவரும் அர்த்தபுஷ்டியுடன் பார்த்தனர்.

அதேபோல ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், ஓபிஎஸ் பக்கத்தில் மதுசூதனனும், இபிஎஸ் பக்கத்தில் வைத்திலிங்கமும் நின்றுகொண்டனர். இதெல்லாம் இன்னமும் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் ‘லைவ்’வாக இருப்பதையே உணர்த்தின.

ஓபிஎஸ் ஏகமாய் அவமதிக்கப்படுவதாகவே அங்கு குழுமியிருந்த அவரது ஆதரவாளர்களும் புழுங்கினர். மாலை அணிவிப்பு மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, இபிஎஸ் கீழே இறங்கிச் செல்கிறவரை அவர்கள் அமைதியாகவே இருந்தனர். அதன்பிறகு, ஓபிஎஸ் மேடையில் இருந்து இறங்குகையில், ‘தர்மயுத்த நாயகன் ஓபிஎஸ் வாழ்க’ என உச்சஸ்தாயியில் சிலர் குரல் எழுப்பினர். இது இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்களுக்கு அதிர்ச்சி!

ஆனால் மேடையைவிட்டு இறங்கி வந்த ஓபிஎஸ், கோஷம் எழுப்பியவர்கள் உள்பட தனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் தனித்தனியே சிரித்தபடி கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.பெரும்பாலான நிர்வாகிகள் கலந்துகொண்ட நிலையில், சீனியர் அமைச்சர் ஜெயகுமார் வரவில்லை. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னையில் முகாமிட்டிருந்ததால், முழுக்க அவருடன் இருந்து கவனிக்கும் பொறுப்பை ஜெயகுமாரிடம் ஒப்படைத்திருக்கிறார் இபிஎஸ்!

ஒவ்வொரு அடியையும் அளந்து, ரொம்பவும் கவனமாக காய் நகர்த்துகிறார் இபிஎஸ்!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Ops car out eps car in aiadmk anniversary politics

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X