Advertisment

அ.தி.மு.க எங்களுக்கே என்பதை உறுதி செய்வோம்: கு.ப. கிருஷ்ணன்

ஓ.பி.எஸ் கையை பலப்படுத்தியிருக்கும் மறைந்த எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அதிமுகவில் அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ்.ஸால் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கு.ப. கிருஷ்ணன் தற்போதைய அதிமுக நிலவரம் குறித்து பேசினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ku Pa Krishnan, OPS, AIADMK, OPS EPS, கு ப கிருஷ்ணன், அதிமுக, ஓபிஎஸ், இபிஎஸ்

க. சண்முகவடிவேல், திருச்சி

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தனித்துவம் பெற்று, மறைந்த ஜெயலலிதாவால் பலம் வாய்ந்த கட்சியாக தமிழகத்தில் உருவாக்கப்பட்டது அஇஅதிமுக. அதிமுகவில் எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பிறகு ஜெ. ஜா என இரு அணிகள் தலை தூக்கின. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கட்சியை கைப்பற்றவும், ஆட்சி அமைக்கவும் ஆர்.எம். வீரப்பனின் ஆதரவு இருந்ததால் 1987-ல் அதிமுக தலைவராகவும், தமிழக முதல்வராகவும் ஜானகி சில நாட்கள் பதவி வகித்தார். அப்போது அஇஅதிமுகவில் இருந்த 132 சட்டமன்ற உறுப்பினர்களில் 33 சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவை ஆதரிக்க ஜெ. ஜா. மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. அதேநேரம், சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க ஜானகி முற்பட்டபோது சட்டமன்றத்தில் ஏற்பட்ட மோதலை காரணம் காட்டி மத்திய அரசு ஜானகி தலைமையிலான ஆட்சியை 4 நாட்களில் கலைத்தது.

அதன் பின்னர், ஜெ. ஜா அணிகள் மோதலால் அஇஅதிமுகவின் சின்னம் இரட்டை இலை முடக்கப்பட்டது. அதன் பின்னர் இருதரப்பும் இணைந்ததால் மீண்டும் இரட்டை இலை சின்னத்தை ஜெ. தலைமையிலான அஇஅதிமுகவினர் கைப்பற்றி தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன் அதிமுக இருந்து வந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா கை ஓங்கிய நிலையில் ஓ.பி.எஸ். போர்க்கொடி தூக்க அவரை கட்சியில் இருந்து நீக்கிய சசிகலா எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியையும், கட்சியையும் விட்டுச்சென்ற சசிகலாவை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார்.

அதிமுகவில் அப்போது முதல் அவ்வப்போது சலசலப்புக்கு பஞ்சமில்லை என்ற போதும் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. அதன் பிறகு, அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உருவெடுத்தது. அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டு இரு அணிகளாக செயல்படும் நிலை ஏற்பட்டது. கட்சி பொறுப்பை கைப்பற்றுவதில் எடப்பாடி தீவிரம் காட்டிய நிலையில், அதிமுக பொதுக்குழு தனியார் மண்டபத்தில் கூட்டப்பட்டு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டு ஓ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஓ.பி.எஸ். தாம்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனச்சொல்லி தற்போது அதிமுகவின் அதிகார துஷ்பிரயோகமாக செயல்பட்டு வரும் எடப்பாடிக்கு எதிராக உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரை சென்றவர் அதிமுகவில் நிர்வாகிகளை அறிவித்தார்.

அந்தவகையில், ஓ.பி.எஸ் கையை பலப்படுத்தியிருக்கும் மறைந்த எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அதிமுகவில் அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்.ஸால் அறிவிக்கப்பட்டிருக்கும் கு.ப.கிருஷ்ணன் தற்போதைய அதிமுக நிலவரம் குறித்து நம்மிடம் பேசினார்.

திருச்சியில் நீண்ட காலமாக வசித்து வரும் தங்கள் பகுதியில் கட்சி எப்படியிருக்கு என்ற கேள்விக்கு பதிலளித்த கு.ப. கிருஷ்ணன், திருச்சி மத்திய மாவட்டம் முழுவதும் எங்கள் கைதான் ஓங்கியிருக்கிறது. எல்லோரும் வெளிப்படையா வெளியே சொல்ல தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவின் அடிப்படை தொண்டர்கள் எல்லாம் எங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். அனைவரையும் ஒருங்கிணைக்கும் வேலையை இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

அதிமுகவில் யார் தலைமையில் இயங்கப்போகிறீர்கள்? சசிகலா தலைமையில் இயங்கக்கூடியதாக மாறுமா?

கு.ப. கிருஷ்ணன்: இதையெல்லாம் காலம்தான் நிர்ணயிக்கும், அதாவது அரசியலில் நிறந்தர எதிரியும் கிடையாது, நிறந்தர நட்பும் கிடையாது. அரசியலில் என்னவேண்டுமானாலும் நடக்கும். எப்படி வேண்டுமானாலும் நடக்கும். எதுவும் நடக்கும்.

ஓ.பி.எஸ் அணியில் பெயர் சொல்லக்கூடிய அளவில் யாரும் இல்லையே, எம்.எல்.ஏ.க்களும் இல்லையே?

கு.ப. கிருஷ்ணன்: 1989-ல் ஜெ. ஜா பிரிந்தபோது ஜெ அணிக்கு ஒரு ஒன்றிய செயலாளர்கூட இல்லை, ஒரு எம்.எல்.ஏ., இல்லை. ஒரு மந்திரி இல்லை, ஒரு எம்.பி. இல்லை, ஒரு மாவட்ட செயலாளர் இல்லை. ஆனால், எது ஜெயிச்சது. தொண்டர்கள் எங்கே இருகிறார்களோ அதுத்தான் ஜெயிக்கும். தலைவர்களை நம்பி தொண்டர்கள் இல்லை. தொண்டர்களை நம்பித்தான் தலைவர்கள் வருவார்கள். அப்படித்தான் இங்க இனி நடக்கப்போகிறது.

நீங்கள் எம்.ஜி.ஆர். காலத்துல கட்சியில இருந்தவர், அவருக்கு பின்னர் ஜெயலலிதா அமைச்சரவையிலும் இடம் பிடித்திருந்தாலும், ஒரு கட்டத்தில் தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கினீர்கள். பின்னர் மீண்டும் அதிமுகவிலேயே ஐக்கியமாகிவிட்டீர்களே?

கு.ப. கிருஷ்ணன்: அதாவது என்னைப் பொறுத்த மட்டில் சத்திய அரசியல் நடக்குது. சந்தர்ப்பவாத அரசியல் எனக்கு வராது. நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன். அவரோட என்னோடு ஒத்துப்போக முடியாத நிலையைத்தான் சொல்லுவேன். எனக்கென்று ஒரு தனிக் கொள்கையை வைத்திருக்கிறேன். அந்த கொள்கைக்கு ஒத்துப்போகிறவர்கள்கூட நான் ஒத்துப்போகிறேன்.

அதிமுகவில் 1984-ல் எம்.ஜி.ஆர் எழுதிய உயில் குறித்து கேட்டபோது, அதிமுகவில் பிளவு ஏற்பட்டால், 80% அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு கொண்ட அணியே அதிமுகவாக கருத வேண்டும்; 80% உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எம்.ஜி.ஆர். கட்சியை நடத்துவதற்கு சொன்ன வழிகளை எடப்பாடி தரப்பு பின்பற்றவில்லை. உயில் மட்டுமல்ல, அதிமுகவின் பைலாவையும் பின்பற்றவில்லை.

எம்.ஜி.ஆர் பணத்தைக் கட்சிக்கு செலவிட வேண்டும். ஜானகி அம்மா கொடுத்த கட்டடத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறபோது, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த அண்ணன் ஓ.பி.எஸ் கட்சி ஆபீஸ்க்கு போனதில் என்ன தப்பு. அப்படியே இருக்கட்டும். நீங்கள் பொதுக்குழுவைக் கூட்டி நீக்கியது 12 மணிக்கு மேலத்தான். அதற்கு முன்னதாகவே ஓ.பி.எஸ் கட்சி ஆபீஸ்ல இருந்தாரு. அவரு பொருளாளர் என்ற முறையிலத்தான் அங்க இருந்தாரு.

தலைமை கழகத்தில் பல்வேறு கோப்புகள் பொருட்கள் திருடப்பட்டதாக காவல் துறைகள் புகார் அளிக்கப்பட்டிருக்கிறதே?

கு.ப. கிருஷ்ணன்: சொந்த வீட்டுக்காரனுக்கு தான் அங்கே என்ன இருந்தது, எப்ப எடுத்துட்டு போக வேண்டும் என்று தெரியும். அலுவலகத்தில் செங்கோலை காணவில்லை, வாளை காணவில்லை என கூறுகின்றனர்.

கொட நாடு பங்களா உங்களிடம் தானே, போயஸ் கார்டன் உங்களிடம் தானே அங்கே பெருங்காய டப்பாகூட இல்லை. விளக்கமாறாவது இருக்க வேண்டும் அல்லவா அதை யார் எடுத்துக் கொண்டு சென்றார் எனத் தெரியவில்லை.

பிஜேபி தான் ஓ.பி.எஸ்.ஸை இயக்குவதாகக் கூறப்படுகிறதே?

கு.ப. கிருஷ்ணன்: எங்களை இயக்குபவர் ஓ.பன்னீர்செல்வம் தான்.

உங்களுடைய அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

கு.ப. கிருஷ்ணன்: நான் ஒரு போராளி, கட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். எடப்பாடி தலைமை சர்வாதிகாரமாகப் போவதை எதிர்த்து நான்தான் முதன் முதலில் குரல் கொடுத்தேன். இப்போது ஓ.பி.எஸ் அண்ணன் வழிகாட்டுதலின்படி தொண்டர்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். திருச்சி மாநகர், வடக்கு, ஸ்ரீரங்கம் துறையூருக்கு மாவட்ட செயலாளர்களை நியமித்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் யாரும் செய்யாததை அண்ணன் ஓ.பி.எஸ் செய்திருக்கிறார். ஸ்ரீரங்கம்-துறையூருக்கு ஒரு தாழ்த்தப்பட்டவரை மாவட்டச் செயலாளராக நியமித்திருக்கிறோம். திருச்சி மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறோம். எல்லோருமே எங்க பக்கம்தான் இருக்கிறார்கள்.

விரைவில் அதிமுக எங்களுடையது என்பதை உறுதிப்படுத்துவோம். மாநாடு போடுவோம், பொதுக்கூட்டம் நடத்துவோம். அதில் நாங்கள் உறுதிப்படுத்துவோம். எங்களது நோக்கம் வெற்றியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று கு.ப. கிருஷ்ணன் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Aiadmk O Panneerselvam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment