அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அதிமுகவின் மற்றொரு பெரும் புள்ளி!

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கலக்கியிருப்பது

நடிகர் அஜித்திற்கு துணை முதலமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம்,  தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தையும், ரசிகர்களையும் பெற்றுள்ள ’ தல’அஜித்குமார் நேற்று(1.5.18) தனது 47 ஆவது பிறந்தநாளை  கொண்டாடினார். இவருக்கும் திரையுலகத்தை சார்ந்த பலரும்  சமூகவலைத்தளங்களில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

அவரின் ரசிகர்களும், காமன்  ப்ரோஃபைல் பிச்சர்,  இரத்த தான முகாம், மோர் பந்தல்,  அன்னதானம் என தங்களுக்கு தெரிந்த வகையில் அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடினர். இந்நிலையில்,  துணைமுதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான  ஓ. பன்னீர்செல்வம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இதுக் குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில்,  “நல்ல உடல்நலத்துடனும், சந்தோஷமாகவும், எதிர்காலத்தில் எடுக்கும் முயற்சிகள் எல்லாமே வெற்றிபெற வேண்டும் என்று பிறந்த நாளில் அஜித் குமாரை வாழ்த்துகிறேன். சினிமா வாழ்க்கையில் அவர் வெற்றிகள் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார், அத்துடன்,  #HappyBirthdayAjithKumar என்ற ஹேஷ்டேக்கையும்  ஓபிஎஸ் பகிர்ந்துள்ளார்.

ஓபிஎஸ்ஸின் இந்த வாழ்த்து சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.   பொதுவாகவே அஜித்திற்கும், அதிமுகவுக்கும் இடையில் சுமூகமான உறவு இருந்து வருவதாக ஒரு பேச்சு அடிக்கடி  பரவுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, திமுகவிற்கு அஜித்தை பிடிக்காது என்ற கருத்தும் பரவலாக இருந்து வருகிறது.

இந்தச் சூழலில்தான் நேற்றைய தினம்,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் ட்விட்டர் பக்கத்திலும் அஜீத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு  வெளியானது. இந்த பதிவு வெளியான சில மணி நேரத்திலியே வைரலும் ஆனது. அதிமுக அமைச்சர் ஒருவர், அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவது பலரின் கவனத்தையும் பெற்றது.

ஆனால், இந்த பதிவு வெளியான சில மணி நேரத்திற்குள்ளேயே அஜீத்தின் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை என்னை அறியாமல் எனது ட்விட்டர் பக்கத்தில் யாரோ போட்டுவிட்டனர்’ என விளக்கம் அளித்தார் செங்கோடையன். மேலும், ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த பதிவையும் நீக்கினார். இந்த பரப்பரப்பு ஓய்வதற்குள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கலக்கியிருப்பது பல கேள்விகளுக்கு இடம் அளித்துள்ளது.

×Close
×Close