Advertisment

10.5% உள் இடஒதுக்கீட்டால் பாதிப்பு; ஒன்று திரண்ட 115 சாதிகள் முதல்வரை சந்திக்க முடிவு

எம்.பி.சி பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு அதே தொகுப்பில் உள்ள மற்ற 115 சாதிகளின் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டிருப்பது வன்னியர்களின் உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vanniyar reservation, 10.5 percent vanniyar internal reservation, வன்னியர் உள் இடஒதுக்கீடு, 10.5% உள்இடஒதுக்கீட்டால் பாதிப்பு, ஒன்று திரண்ட 115 சாதிகள் ஆலோசனை கூட்டம், most backward reservation, mbc reservation, other mbc castes opposes to vanniyar internal reservation

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள 115 சாதிகள் மற்றும் சீர்மரபினர் சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில், மதுரையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி.சி மற்றும் டி.என்.டி சமூகங்களின் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு சட்டத்தால் தங்கள் சமூகத்தினர் பாதிகப்படுவதாகவும் அதனால் முதலமைச்சரை சந்தித்து முறையிட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Advertisment

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக முந்தைய அதிமுக அரசு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (எம்.பி.சி) உள்ள வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பில் 10.5% உள் இடஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றியது. மேலும், வலையர், முத்தரையர், பிறமலைக் கள்ளர் சீர்மரபினர் உள்ளிட்டவர்களுக்கு 7% உள் இடஒதுக்கீடும், எம்.பி.சி பிரிவில் உள்ள இதர சாதிகளுக்கு 2.5% உள் இடஒதுக்கீடும் வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கையும் உச்ச நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5% உள் இடஒதுக்கீட்டால் எம்.பிசி பிரிவில் உள்ள மற்ற 115 சாதிகள் தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எம்.பி.சி பிரிவில் 115 சாதிகள் மற்றும் சீர்மரபினர் சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில், மதுரையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரமலைக்கள்ளர், பெரியசூரியூர் கள்ளர், கூத்தப்பர் கள்ளர், போயர், ஒட்டர், மருத்துவர், மறவர், மீனவர், முத்தரையர், வண்ணார், வேட்டுவக் கவுண்டர், வேட்டைக்கார நாயக்கர், பண்ணையார், பரவர், ஆண்டிப்பண்டாரம், இசைவேளாளர், ஊராளிக்கவுண்டர், கந்தர்வக்கோட்டை கள்ளர், குரும்பக் கவுண்டர், குலாளர், குறவர், தெலுங்குபட்டி செட்டி, தொட்டிய நாயக்கர், நரிக்குறவர் உள்பட பல்வேறு சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.

எம்.பி.சி பிரிவில் வருகிற வண்ணார், ஒட்டர், நரிக்குறவர் போன்ற மிகவும் பிந்தங்கிய நிலையில் உள்ள சாதிகளின் நிர்வாகிகளுக்கு மேடையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் யாரும் சாதிகளின் உயர்வு தாழ்வு பற்றி பேசவில்லை.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒருங்கிணைத்த ராமகிருஷ்ணன், தொட்டிய நாயக்கர்' சமூக நிர்வாகி எம்.பழனிசாமியை பேச அழைத்தபோது தவறுதலாக சாதிப் பெயரை வேட்டைய நாயக்கர் என்று மாற்றி சொல்லிவிட்டார். இதனால் அரங்கில் சிரிப்பலி எழுந்தது.

நிகழ்ச்சியில் பேசிய பழனிசாமி சாதியை மாற்றிக் கூப்பிட்டது குறித்து வருத்தம்கொள்ளாம்ல், ஒன்றும் தவறில்லை அவர்களும் நாங்களும் மாமன் மச்சான் போலத்தான். அதுமட்டுமில்ல, இங்கே இருக்கிற 115 சாதிகளும் இனிமே நம்ம சாதிதான். நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ இந்த விவகாரத்தில் நாம் உடனே செய்ய வேண்டியது வன்னியருக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை இந்த அரசு அமல்படுத்திவிடாமல் தடுப்பதுதான். ஏனென்றால், அதனை நடைமுறைப்படுத்தச் சொல்லி முதல்வருக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கிறார் ராமதாஸ். ஆகஸ்ட்டில் கல்லூரிகள் திறக்கப் போகின்றன. அந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், நம்முடைய பிள்ளைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மதுரை, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் வன்னியர்களே கிடையாது. ஆனால், அங்குள்ள சட்ட, பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் 10.5 சதவீத இடத்தை வன்னியருக்கென நிரப்பாமல் வைத்திருப்பார்கள். ராமதாஸ் வடக்கிருந்து மாணவர்களை அனுப்பி வைப்பார். நம் பிள்ளைகள் சீட் கிடைக்காமல் பரிதவிப்பார்கள்.

டி.என்.டி எஸ்டி பிரிவில் இருந்த எங்களை எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் டி.என்.சி.யாக (குற்றப் பரம்பரை சாதிகள்) மாற்றிவிட்டார். அதனால், உரிமை பறிபோய்விட்டது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள டி.என்.டி.யினருக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

பண்ணையார் சமூக பிரதிநிதி மயிலேறும் பெருமாள் கூறுகையில், “இந்தக் கால இளைஞர்களிடம் சமூகநீதி குறித்த அடிப்படை அறிவே சுத்தமாக இல்லை. இடஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எடப்பாடி பழனிசாமி கடைசி காலத்தில் செய்துவிட்டுப் போன குளறுபடியால் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எப்படிப் புரிந்துகொள்வார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்துள்ள சமூக பிரதிநிதிகள், அனைவரும் இடஒதுக்கீடு பற்றியும் வன்னியர் உள் இடஒதுக்கீட்டால் எம்.பி.சி பிரிவில் உள்ள பிற சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விளக்க வேண்டும் என்று கூறினார்.

தெலுங்குபட்டி செட்டி சமூகம் சார்பில் பேசிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அரசு திருவளவன், “தமிழகத்தில் சமூகநீதி என்ற பெயரில் சாதி அரசியல்தான் நடக்கிறது. 7-8 மாவட்டங்களில் மட்டுமே உள்ள ஒரு சமூகத்தினரைக் காட்டி ராமதாஸால் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு பெற முடிகிறது என்றால், 35 மாவட்டங்களில் விரவிக்கிடக்கிற 115 சமூகங்களும் ஒன்றிணைந்தால் நமக்கான உரிமையைப் பெற முடியாதா? அரசியலில் இருந்து விலகியிருந்து எதையும் சாதிக்க முடியாது. நாம் ஒன்றிணைந்து ஒரு அரசியல் சக்தியாகத் திரள வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

வண்ணார் சமூக பிரதிநிதி கே.பி.மணிபாலா பேசுகையில், “இங்கிருக்கிற மிகவும் பிற்பட்டோர் சமூகங்களிலேயே கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகமிக பிற்பட்ட நிலையில் இருப்பது வண்ணார், மருத்துவர் (நாவிதர்), ஒட்டர், போயர், குலாளர், ஆண்டிப்பண்டாரம், பூசாரி போன்ற சமூகங்கள்தான்.

எனவே எங்களைப் மிகமிக பிற்படுத்தப்பட்டோர் (எம்எம்பிசி) என்ற பட்டியலின் கீழ் தனி இட ஒதுக்கீடும் சலுகையும் வழங்க வேண்டும் என்று கோரி தொடர் போராட்டங்களை நடத்தினோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி எங்களை வஞ்சித்துவிட்டார். ஒடுக்கப்பட்ட எங்கள் மக்களின் உரிமைகளைப் பறிக்கிற வேலையைச் செய்துவிட்டுப் போய்விட்டார் என்று கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியாகப் பேசிய சமூகநீதி கூட்டமைப்பின் நிர்வாகி, முத்தரையர் பிரதிநிதி எஸ்.பன்னீர்செல்வம், “தமிழகத்தில் உள்ள 68 டி.என்.டி. மற்றும் 47 எம்.பி.சி. சமூகங்களை தூசி துரும்பாக மதித்து அவர்களின் 20 சதவீத இடஒதுக்கீட்டு உரிமையைப் பறித்து, ஒரு சாதிக்கு மட்டும் எடப்பாடி பழனிசாமி அரசு வழங்கிவிட்டது. அவர் செய்த தவறு எங்களை ஓரணியில் திரட்டியிருக்கிறது.

இன்றைய கூட்டத்தில், வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை கடுமையாக எதிர்ப்பது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகங்களின் உரிமையை உறுதி செய்யும் வரையில் வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். இது குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிடுவது என்றும் தீர்மானித்திருக்கிறோம். அதேநேரத்தில், அந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக நாங்கள் ஏற்கெனவே தொடர்ந்த வழக்குகளின் மூலம் சட்டநடவடிக்கையையும் தொடர்வோம் என்றும் முடிவெடுத்துள்ளோம்.

இதையடுத்து, 115 சமூகங்களும் குறைந்தது தலா 100 பேரையாவது அழைத்துக்கொண்டு போய் சென்னையில் பிரம்மாண்ட போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுத்துள்ளோம்” என்று கூறினார்.

எம்.பி.சி பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு அதே தொகுப்பில் உள்ள மற்ற 115 சாதிகளின் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டிருப்பது வன்னியர்களின் உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Reservation Vanniyar Vanniyar Reservation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment