சில நாட்களுக்கு முன்பு தி.மு.க பொருளாளர் துரை முருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
’தேர்தலை முன்னிட்டு, ஆளும் அரசின் அராஜகம் தான் இந்த சோதனை’ என தி.மு.க தரப்பில் சொல்லப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸின் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ”எனக்குக் கிடைத்த தகவல்: என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமான வரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம் !
எங்கள் தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்.
இந்த அரசின் அத்து மீறல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சோதனைகள் எதிர்கட்சினரின் வீட்டில் மட்டும் நடத்தப்படுகிறது என எழுந்த குற்றச்சாட்டால், “சோதனைகள் நடுநிலையாகவும், பாராபட்சமின்றியும் இருக்க வேண்டுமென வருமானவரித்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.