Advertisment

ஒழிக்கப்பட வேண்டிய 'ரூட்டு தல' கலாச்சாரம்! மாணவர்களின் மனதில் விதைக்கப்பட வேண்டியது பயம்!

அரசியல், சினிமா தொடங்கி எந்தத் துறையாக இருந்தாலும், அங்கு ஆதிக்கம் செலுத்துபவர்கள் தானே கெத்து? இல்லையெனில், அவர்கள் வெத்து தானே... அதைத் தான் இந்த மாணவர்களும் செய்திருக்கின்றனர்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pachaiyappa college students violence route thala - ஒழிக்கப்பட வேண்டிய 'ரூட்டு தல' அராஜகம்! மாணவர்களின் மனதில் விதைக்கப்பட வேண்டியது பயம்!

Pachaiyappa college students violence route thala - ஒழிக்கப்பட வேண்டிய 'ரூட்டு தல' அராஜகம்! மாணவர்களின் மனதில் விதைக்கப்பட வேண்டியது பயம்!

'சொட்டுக் குழம்புக்கும் சோற்றுக்கும் கையில் ஒரு

Advertisment

துட்டுக்கும், கண்ணயர்ந்து தூங்குதற்கும் – கட்டத்

துணிக்கும் துடிக்கின்ற ஏழையையும் நல்ல

பணக்காரன் ஆக்கும் படிப்பு'

என்று கல்வி மேன்மை குறித்து பாடியிருக்கும் பாரதிதாசன், சென்னை அரும்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்திய வெறியாட்டத்தை பார்த்திருந்தால், நிச்சயம் வேதனை அடைந்திருப்பார்.

சென்னையில் 150 வருட பாரம்பரியம் கொண்ட பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இருவர், கைகளில் அவர்களது உயரத்தையே மிஞ்சும் பட்டாக்கத்தியுடன், எதிர் தரப்பு மாணவர்களை வெட்ட துணிந்திருக்கின்றனர். அதுவும் பட்டப்பகலில், மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் பேருந்தில்... மனதில் துளி கூட பயமின்றி, பிஸியான அந்த சென்னை சாலையில் கைகளில் கத்தியுடன் இங்கும், அங்கும் வெறி கொண்டு அலைந்திருக்கின்றார்கள் எனில், அவர்களது மன நிலை என்ன? அவர்களது குடும்பப் பின்னணி என்ன? அவர்கள் மனதில் பிஞ்சிலேயே பயத்தை விதைக்காமல் விட்டது யார் தவறு?, கல்லூரி நிர்வாகம் என்ன செய்துக் கொண்டிருக்கிறது? என்ற பல கேள்விகளுக்கு நாம் விடை தேட வேண்டியிருக்கிறது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, சென்னை மாநில கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரி மாணவர்களும் இதுபோன்ற அட்ராசட்டியில் ஒவ்வொரு வருடமும் ஈடுபடுகின்றனர்.

முதலில், மாணவர்களுக்கு இடையே நடந்த பிரச்சனை 'ரூட்டு தல' எனும் மகா கேவலமான வார்த்தையின் நீட்சியாக உருவாகியிருக்கிறது.

அது என்ன ரூட்டு தல?

குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் இருந்து பேருந்து ஏறும் மாணவர்கள், தங்கள் கல்லூரியை அடையும் வரை அந்த பேருந்து செல்லும் வழி முழுவதிற்கும் 'நான் தான் கெத்து' என்று காட்டுவது ரூட்டு தல-யாம்!. இதில், குறிப்பிட்ட அந்த ஒரு ரூட்டு தல யார் என்பதில் தான் இங்கு போட்டி. தவிர, எந்த ரூட்டு சிறந்தது என்பதில் ரூட்டு தலைகளுக்கு இடையே போட்டி. இதுதவிர, பெண்களுக்காக மோதிக் கொள்வதும் இந்த 'ரூட்டு தல' கலாச்சாரத்தில் அடக்கம்.

அசிங்கமான, அருவருக்கத்தக்க வரிகளை கொண்டு கானா பாடல் பாடுவது, பேருந்தின் மேற் கூரையில் ஏறி நிற்பது, ஜன்னல் கம்பிகளில் குரங்கு போல் குத்த வச்சு தொங்குவது, பெண்களின் உடல் பாகங்களை கீழ்த்தரமாக வர்ணித்து கத்துவது போன்றவை இந்த ரூட்டு தல கலாச்சாரத்தில் அடக்கம். இந்த அத்தனை அசிங்கங்களையும் ஒருக் கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத பயணி யாரேனும் ஒருவர் தட்டிக் கேட்டுவிட்டால், அவர்கள் நிலைமை அவ்வளவு தான். அடிதடியில் போய் முடிந்து, காவல் நிலையத்தில் நிற்கும் அந்த பேருந்து. அப்படி காவல் நிலையத்தில் நிற்பதும் இவர்களுக்கு கெத்து தானாம்.

publive-image

இப்படிப்பட்ட இந்த 'ரூட்டு தல' கன்றாவி தான் வருடா வருடம் 'பஸ் டே' கொண்டாட்டம் என்ற பெயரில் மாணவர்கள் அடிக்கும் கூத்தின் போதும் பிரச்சனையாக வெடிக்கிறது.

தற்போதைய சம்வபம், 29E ரூட்டில் நிகழ்ந்திருக்கிறது. ஒரே பேருந்தில் இரு தரப்பு மாணவர்களும் பயணித்திருக்கின்றனர். அதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட, பேருந்தில் படிகளுக்கும், சீட்டுக்கும் இடையே மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து, இரு மாணவர்கள் வெட்டத் தொடங்கியிருக்கின்றனர். அப்படியெனில், கையில் புத்தகப் பையை எடுத்து வருவது போல், பட்டாக் கத்தியை அவர்கள் எடுத்து வந்திருக்கின்றனர்.

பிரச்சனை வந்த போது வெட்டினார்கள் சரி.. பிரச்சனை ஏற்படாமல் போயிருந்தால், அந்த கத்திகளை அவர்கள் கல்லூரிக்கு எடுத்துச் சென்றிருப்பார்களா? அது உண்மை என்றால், அக்கல்லூரிக்கு மாணவர்கள் கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்துச் செல்கிறார்களா?

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழிச் செல்வன், "எங்கள் கல்லூரியில் நூறு சதவிகிதம் மாணவர்கள் ஆயுதங்கள் எடுத்து வருவதில்லை என்பது உண்மை" என்கிறார்.

அப்படியெனில், மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி வேறு எங்கோ சென்று, அக்கத்திகளை மறைத்து வைக்கிறார்களா? அல்லது புத்தகப் பையில் ஆசியர்களுக்கு தெரியாமல் வைத்துக் கொண்டு திரிகிறார்களா? என்று தெரியவில்லை.

மாணவர்களின் மனநிலை என்ன?

கல்லூரி முதல்வர் அருள்மொழிச் செல்வன் தனது பேட்டியின்ன் போது ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறார். 'மாணவர்களின் இது போன்ற செயல்களுக்கு அவர்களது குடும்ப சூழ்நிலையும் ஒரு காரணம்' என்று. நிச்சயம் அதை நாம் மறுக்க முடியாது. பெற்றோர்கள் பிரிந்து வாழ்வது, பாசம் என்கிற பெயரில் பிள்ளைகளை கண்டிக்காமல் விட்டு, இன்று கண்டிக்கவும் முடியாமல் வக்கற்று நிற்கின்றனர் அந்த பெற்றோர்.

ஆனால், குடும்பச் சூழ்நிலை மட்டும் தான் காரணமா?

அரசியல், சினிமா தொடங்கி எந்தத் துறையாக இருந்தாலும், அங்கு ஆதிக்கம் செலுத்துபவர்கள் தானே கெத்து? இல்லையெனில், அவர்கள் வெத்து தானே... அதைத் தான் இந்த மாணவர்களும் செய்திருக்கின்றனர். என்ன... மற்றவர்கள் டீசன்ட்டாக, திறமை எனும் பெயரிலும் திரை மறைவில் காட்டும் ஆளுமை, அதிகாரம், திமிர், தெனாவட்டு போன்றவற்றை, இந்த மாணவர்கள் கையில் பட்டாக் கத்தியுடன் செய்து, கேமராவில் சிக்கி இன்று குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

அவர் இருவரும் என்ன வேற்று கிரகத்தில் இருந்தா வந்தார்கள்? நாம் வாழும் இதே உலகில் தானே இருக்கிறார்கள்... பிறகு, அவர்கள் மட்டும் சமூகத்துக்கு அன்னியப்பட்டு எப்படி இருக்க முடியும்?

இங்கே, அவர்கள் நிகழ்த்திய அக்கிரமத்தை சரி என்று சொல்லவில்லை. அவர்களை விமர்சிக்கும் நம்மில் எத்தனை பேர், பணிபுரியும் இடங்களில் நமக்கு கீழ் பணிபுரிபவர்களிடமோ, நமக்கு சரிசமமாக பணிபுரியும் மற்ற ஊழியர்களிடமோ ஆளுமையை செலுத்த என்னென்ன வேலைகள் செய்திருப்போம்?. மனசாட்சிக்கு எதிராக என்னென்ன அக்கிரமங்கள் செய்திருப்போம்?... அதைத் தான் அவர்களும் பட்டாக் கத்திகளுடன் வெட்ட வெளியில் புரியாத்தனத்தால் செய்திருக்கின்றனர். இதை நம்மால் மறுக்க முடியுமா?

பட்டம், பணம், பதவி, அதிகாரம், ஆளுமை, அடிமைத்தனம் சூழ் இந்த பெரு உலகில் உருவப்பட்ட சிறு கீற்று தானே அந்த மாணவர்களின் வெறியாட்டம். அவர்களுக்கு தண்டனை எனில், அப்போது நமக்கு? இந்த சமூகத்துக்கு?

அரசாங்க அலுவலகத்தில் பணத்தை வீசாமல் உங்களால் ஒரு கையெழுத்தை வாங்கி வெளியே வர முடியுமா? ஏன் அந்த பணத்தை வாங்குகிறார்கள்? அவர்கள் வசதியாய் வாழ... முதலீடு போட்டு வாங்கிய வேலைக்கான பணத்தை மீட்டெடுக்க, சமுதாயத்தில் மற்றவர்கள் முன் செல்வம் நிரம்ப, கெத்து காட்ட.... எப்படி...? கெத்து காட்ட.. அதே கெத்தைத் தான் இந்த மாணவர்களும் காட்டியிருக்கிறார்கள்.

ரத்தத்தை உறிஞ்சும் அது போன்ற சமூகத்தை இனி நாம் ஒன்றும் செய்ய முடியாது. குறைந்த பட்சம், இந்த மாணவர்களையாவது நாம் மீட்கலாம் அல்லவா!!.

இதுபோன்ற தவறிழைக்கும் மாணவர்களை சிறையில் அடைப்பது போன்ற தண்டனைகளை கொடுத்தால், பத்தோடு பதினொன்றாக அவர்கள் வேறு சில தீயவர்களின் நட்பை பெற்றுக் கொண்டு, வெளியே வந்து மீண்டும் இதைத் தான் செய்யப் போகிறார்கள். திருந்தி வாழப் போகிறார்களா என்ன? அல்லது இந்த சமூகம் அவர்களை திருந்தி வாழ விட்டு விடுமா?

இதன் ஒரு பகுதியாக தான், துணை ஆணையர் சுகுணா சிங் தலைமையிலான போலீசார், நேற்று சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கும் இதர பிற கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு 'பயப்படும் வகையில் கவுன்சலிங்' கொடுத்திருக்கின்றனர். உண்மையில் இது மெச்சத்தக்க விஷயம். ஆனால், இது போன்ற அக்கிரமங்கள் நடக்கும் போது மட்டும் மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பதால் கடுகளவும் பயன் இல்லை.

முதலில் கல்லூரிகள், மாணவர்களுக்கு பயப்படுவதை நிறுத்த வேண்டும். இது தான் இங்கு முக்கிய விஷயம். மாணவர்களுக்கு கல்லூரிகள் பணிந்தால், இந்த சமூகம் என்ன ஆவது? பாடத்தோடு சேர்ந்து கண்டிப்பையையும் விதைக்காத வரை இது போன்ற அக்கிரமங்களை தடுக்க முடியாது.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், பொது மக்கள் என அனைவரது பங்களிப்பும் இதில் அடக்கமாகிறது. பொதுமக்கள் என்ன செய்ய முடியும் என்கிறீர்களா? குறைந்த பட்சம், இந்த இடத்தில் இதுபோன்று பிரச்சனை நடந்துக் கொண்டிருக்கிறது என்று போட்டுக் கொடுக்கலாம் அல்லவா!!.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment