பகுத்தறிவு சிற்பி தந்தை பெரியார் பிறந்தநாள் இன்று #HBDPeriyar

சாதி ஒழிப்புடன், பெண்ணியச் சிந்தனைகளையும் வலுவாக முன்வைத்தவர் பெரியார். இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழகத்தில் பலத்த தாக்கங்களை ஏற்படுத்தியவை.

தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை, தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ், பகுத்தறிவு சிற்பி என போற்றப்பட்ட தந்தை பெரியாரின் 139 பிறந்தநாள் உலகம் முழுவதும் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்படுகிறது.

தந்தை பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி, கடந்த 1879-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள், ஒரு சகோதரன், இரண்டு சகோதரிகள் ஆவர். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டதாக இருந்தது.

தனது படிப்பை ஐந்தாம் வகுப்புடன் முடித்துகொண்ட ஈ.வெ.ராமசாமி, தந்தையின் வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே பகுத்தறிவு சிந்தனை மிக்கவராக திகழ்ந்தார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட பெரியார், கடந்த 1919-ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்தும் கூறினார்.

கள்ளுக்கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்,தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார். இப்போராடத்தில்,கைது செய்யப்பட்டு சிறைதண்டனையும் பெற்றார். 1925-ல் காங்கிரஸ் கட்சியின் இருந்து வெளியேறிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே “மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை” நோக்கமாக கொண்டு செயல்பட்டது

மறுமணம் போன்ற புரட்சி திருமணங்களை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமண முறையையும் இவ்வியக்கம் ஆதரித்தது. சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது.அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் வலியுறுத்தியது. பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. சாதி ஒழிப்புடன், பெண்ணியச் சிந்தனைகளையும் வலுவாக முன்வைத்தவர் பெரியார். வெறுமனே பெண்களுக்கான உரிமைகளைப் பேசுவது என்பதைத் தாண்டி சாதி, மதம், வர்க்கம் ஆகியவற்றுக்கும், ஆணாதிக்கத்துக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் விரிவாக எழுதியும் பேசியும் வந்தார். இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பலத்த தாக்கங்களை ஏற்படுத்தியவை.

இவ்வியக்கம் 1941-ல் திராவிடர் கழகம் என்ற விடுதலை இயக்கமாக மாற்றப்பட்டது. அறிஞர் அண்ணா போன்ற முன்னணி தலைவர்கள் இயக்கத்தின் குறிக் கோள்களை, கொள்கைகளை அழகு தமிழில் நாடெங்கும் பரப்பினர்.

உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என சொன்னவர் பெரியார். சாதியை எதுவெல்லாம் காப்பாற்றியதோ அதையெல்லாம் எதிர்த்து பிரசாரம் செய்தார். மதம், சாஸ்திரம், கடவுள் எதிர்ப்புக் கருத்துக்களை அவர் அதிகம் பேசியதும் அதனால்தான். உலகின் மாபெரும் சுய சிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், 1973-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி தனது 94 வது வயதில் காலமானார்.

தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை பெரியாரின் 139 பிறந்தநாள் உலகம் முழுவதும் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

“அவர் செயலை உணர்வை நினைவை போற்றுவோம். 1879,செப்டம்பர்17ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும்.பெரியார் மறுக்கமுடியாத உண்மை. வாய்மையே வென்றது” என உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பெரியாருக்கு புகழாரம் சூடியுள்ளார்.

அதேபோல், தமிழகம் தாண்டி பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகமெங்கும் பெரியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

×Close
×Close