பெரியார் சிலை சர்ச்சை குறித்து அவசர வழக்காக ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அனுமதி அளித்துள்ளது.
பெரியார் சிலை அகற்றப்படும் என நேற்று சர்ச்சைக்குரிய கருத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இதனையடுத்து வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் மர்ம நபர் பெரியார் சிலை உடைக்கும் செயலில் ஈடுப்பட்டார்.
இதையடுத்து கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு விசப்பட்டது. அதே போல் சென்னையில் பூணுல் அறுப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என கூறி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் இன்று முறையிட்டார்.
அரசியல் தலைவரின் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளதால் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சட்ட ஒழுங்கு பாதிக்காத வகையில் காவல்துறை செயல்பட உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக மனு தாக்கல் செய்வதாகவும் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.
இதையடுத்து இந்த விவகாரத்தை அவசர வழக்காக இன்று மதியம் விசாரிப்பதாக நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.