Advertisment

திருச்சியில் டிடிவி.தினகரன் பொதுக்கூட்டத்திற்கு தடை : மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு

திருச்சியில் டிடிவி.தினகரன் செப். 16-ம் தேதி நடத்துவதாக இருந்த ‘நீட்’ எதிர்ப்பு பொதுக்கூட்டத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்தார்கள்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
permission rejected for ttv.dhinakaran, aiadmk crisis, aiadmk merger, aiadmk, ttv.dhinakaran, NEET protest

திருச்சியில் டிடிவி.தினகரன் செப். 16-ம் தேதி நடத்துவதாக இருந்த பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Advertisment

‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. அதிமுக.வில் டிடிவி.தினகரன் அணியினர் செப்டம்பர் 9-ம் தேதி சென்னை ஆர்.கே.நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விதித்த சில கட்டுப்பாடுகளை தொடர்ந்து, அந்த ஆர்ப்பாட்டத்தை டிடிவி.தினகரன் ரத்து செய்தார்.

தொடர்ந்து செப்டம்பர் 16-ம் தேதி திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் ‘நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டம்’ நடத்த இருப்பதாக டிடிவி.தினகரன் அறிவித்தார். இதே இடத்தில்தான் கடந்த 8-ம் தேதி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீட் எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தை நடத்தின. மறுநாள் (செப். 9) தமிழக பாஜக சார்பிலும் இதே இடத்தில் நீட் ஆதரவு பொதுக்கூட்டம் நடந்தது. மத்திய அமைச்சர் பொன்னார், மாநில பாஜக தலைவர் தமிழிசை, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் அதில் பேசினர்.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பாஜக.வை விட இந்தத் திடலில் கூடுதல் கூட்டத்தை திரட்டிவிடும் திட்டத்தில் டிடிவி அணியினர் வேலைகளை ஆரம்பித்தனர். கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கட்சி பிரமுகர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட டிடிவி.தினகரன் இந்த பொதுக்கூட்டத்திற்கு ஆட்களை திரட்டி வருவதற்காக ‘அஸைன்மென்ட்’டையும் கொடுத்தார்.

செப்டம்பர் 12-ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் டிடிவி தரப்பு பங்கேற்காத நிலையில், அதற்கு பதில் சொல்லும் கூட்டமாகவும் திருச்சி பொதுக்கூட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருக்கும் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 21 பேரும் இந்தப் பொதுக்கூட்டத்தில் அணிவகுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதில் திடீர் திருப்பமாக இந்தப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து இன்று (செப்டம்பர் 11) திருச்சி மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. இதற்கான ஆணையை திருச்சியை சேர்ந்த டிடிவி அணி நிர்வாகிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் வழங்கினர். திமுக.வுக்கும் பாஜக.வுக்கும் அனுமதி வழங்கிய அதே மைதானத்தை தங்களுக்கு வழங்க மாநகராட்சி மறுத்ததால், டிடிவி அணியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தடைக்கான காரணம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் டிடிவி.தினகரன் அணியினர் கேட்டபோது, ‘அந்த இடத்தை வேறொரு நபர் ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டதாக’ குறிப்பிட்டனர். ‘அந்த வேறொரு நபர் யார்?’ என டிடிவி அணியினர் கேட்டதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் பதில் கூறவில்லை.

இது குறித்து டிடிவி அணியை சேர்ந்தவரான கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, ‘கோவையிலும் இதேபோல எங்கள் எம்.எல்.ஏ.க்கள் பதிவு செய்த அரசு இல்லத்தை அனுமதி மறுத்திருக்கிறார்கள். எங்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்கள் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். தமிழகம் இதை கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் மறக்க வேண்டாம்.  தமிழகத்தில் இப்போது எதிர்க்கட்சியாக இயங்குவது நாங்கள்தான். அதனால்தான் எங்களை குறி வைப்பதாக நினைக்கிறேன். ஆனால் இதை ஒரு பெரிய விசயமாக நாங்கள் எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனாலும் எங்கள் உரிமையை காக்க இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம்’ என்றார் அவர்.

இந்த இடத்தில் அனுமதி கிடைக்காவிட்டால், திருச்சியிலேயே இன்னொரு இடத்தில் அனுமதி பெற்று கூட்டம் நடத்துவது குறித்தும் டிடிவி அணி ஆலோசித்து வருகிறது.

Ttv Dhinakaran Student Anitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment