பீட்டா மனு: தமிழகத்தில் காலை முதல் மாலை வரை ஜல்லிக்கட்டு கோலாகலம்

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது.

தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து பீட்டா அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டி, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கவேண்டும் என விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

விலங்குகள் நல வாரியமான பீட்டா அமைப்பினர் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2014-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், தமிழர்களுக்கு இதுவரை சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றதில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், இந்த முறையும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடை தொடர்ந்து நீடித்து வந்தது.

அதனையடுத்து, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் சுமார் ஒரு வார காலமாக அறவழியில் போராடினர். மாணவர்களின் எழுச்சி போராட்டத்தையடுத்து, மிருகவதை தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. தொடர்ந்து எந்த தடையும் இன்றி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனிடையே, தமிழகத்தில் இந்தாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மிருகவதை நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனுத் தாக்கல் செய்துள்ளது. வீடியோ மற்றும் போட்டோ ஆதாரத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க 250 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். அவர்களில் 90 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

×Close
×Close